search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகள் இடிந்தன
    X
    வீடுகள் இடிந்தன

    குமரியில் மழையால் 225 வீடுகள் இடிந்தன

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையினால் இதுவரை 225 வீடுகள் இடிந்து சேதமடைந்து உள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்த்து வருகிறது.கடந்த 15 நாட்களில் 400 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இது வழக்கத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகம் ஆகும்.

    குமரி கடலில் மையம் கொண்டிருந்த ‘மகா’ புயல் காரணமாகவும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் பாசன குளங்கள் மற்றும் அணைகள் நிரம்பி வழிகிறது. தாழ்வான பகுதி களில் உள்ள குடியிருப்புகளையும், நெற்பயிர்களையும் மழைநீர் சூழ்ந்தது.

    கடந்த 2 நாட்களாக மழை சற்று குறைந்து உள்ளதையடுத்து நெற்பயிர்கள், குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் படிப்படியாக வடிந்து வருகிறது. சுசீந்திரம், கற்காடு பகுதிகளில் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.

    தாழ்வான பகுதிகளில் ஒருசில இடங்களில் தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 39.15 அடியாக இருந்தது. அணைக்கு 867 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.10 அடியாக உள்ளது. அணைக்கு 1667 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 1667 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு அணையில் இருந்தும் உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கோதையாறு, குழித்துறை ஆறுகளில் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.

    திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளுக்கு 4-வது நாளாக குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த 15 நாட்களாக விட்டு விட்டு பெய்துவரும் மழையினால் மாவட்டம் முழுவதும் வீடுகள் இடிந்து விழுந்து வருகின்றன. கடந்த 2 நாட்களாக 50-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தது. நேற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 19 வீடுகளும், தோவாளையில் 9 வீடுகளும், திருவட்டாரில் 10 வீடும், விளவங்கோட்டில் 3 வீடும் இடிந்தது. இதுவரை மழைக்கு 225 வீடுகள் இடிந்து சேதமடைந்து உள்ளன. மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    Next Story
    ×