search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேங்காய் கடையில் கள்ளநோட்டுக்களை மாற்றும் முதியவர்.
    X
    தேங்காய் கடையில் கள்ளநோட்டுக்களை மாற்றும் முதியவர்.

    வில்லிவாக்கம் மார்க்கெட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்றிய முதியவர்

    வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தையொட்டி உள்ள மார்க்கெட்டில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை மாற்றிய முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லிவாக்கம்:

    வில்லிவாக்கம் ரெயில் நிலையத்தையொட்டி மார்க்கெட் உள்ளது. இங்கு எப்போதும் வியாபாரிகள், பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மார்க்கெட் பகுதிக்கு வந்தார். அவர் அங்குள்ள தேங்காய் கடையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டை கொடுத்து தேங்காய் வாங்கிவிட்டு மீதியை வாங்கிச் சென்றார். இதே போல் அங்குள்ள முட்டை கடையிலும் கள்ள நோட்டை மாற்றினார்.

    மேலும் அங்குள்ள மற்ற கடைகளில் முதியவர் கொடுத்த ரூ.2 ஆயிரம் நோட்டில் சந்தேகம் இருந்ததால் சில வியாபாரிகள் அதனை வாங்கவில்லை. தொடர்ந்து 3 நாட்களாக அந்த முதியவர் கள்ள நோட்டுகளை மார்க்கெட்டில் மாற்றி உள்ளார்.

    நேற்று மீண்டும் அதே முதியவர் இளம்பெண்ணு டன் மார்க்கெட்டுக்கு வந்து தேங்காய் கடையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்றி சென்றார். சிறிது நேரத்துக்கு பின்னரே அந்த முதியவர் தொடர்ந்து கள்ள நோட்டுகளை மாற்றி சென்றது மற்ற வியாபாரிகளுக்கு தெரிந்தது.

    இது குறித்து வில்லிவாக்கம் போலீசில் தேங்காய்கடை உரிமையாளர் கிட்டு புகார் செய்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முதியவர் உருவம் பதிவாகி இருந்தது.

    அதனை வைத்து கள்ள நோட்டுகளை மாற்றி முதியவர் மற்றும் அவருடன் வந்த இளம்பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×