search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி
    X
    கவர்னர் கிரண்பேடி

    மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யாமல் தவறான கருத்துக்களை கூறுகிறார்- கவர்னர் கிரண்பேடி குற்றச்சாட்டு

    ஏனாம் தீவு பிரச்சனை தொடர்பாக மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யாமல் தவறான கருத்துக்களை கூறுவதாக கவர்னர் கிரண்பேடி குற்றம்சாட்டியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

    பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் புதுவை கவர்னர் கிரண்பேடியின் செயல்பாடுகளை கண்டித்தும், விமர்சித்தும் பேசினார். மேலும் கவர்னர் கிரண்பேடி புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் உள்ள தீவை ஆந்திர அரசுக்கு தாரை வார்க்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.

    மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு புதுவை கவர்னர் கிரண்பேடி மறுப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஒரு பொய்யை தொடர்ந்து கூறினால் அது உண்மையாகி விடாது. ஏனாமில் வெளிப்படையாக கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள தீவு எண். 5-ல் சுற்றுச்சூழல் விதிகளை மீறி ரூ.5 கோடிக்கு கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளன. யாருடைய உத்தரவின்படி இந்த கட்டுமான பணிகள் நடைபெற்றன என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு அதிகாரிகள் இதற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்.

    எனவே, எம்.எல்.ஏ.க்களும், அரசியல்வாதிகளும் மக்களிடம் பொய்களை கூறுவதற்கு பதிலாக உண்மையை கூற வேண்டும். இந்த விதிமீறல் குறித்து ஊடகங்கள் கூட தவறாக சித்தரிக்கின்றன. அடிப்படை வசதிகள் இன்றி ஏழைகள் தவிக்கும் போது இவ்வாறான முறைகேடுகளை எவ்வாறு மன்னிக்க முடியும்? ஏனாமில் உள்ள இந்த தீவு யாருக்கு சொந்தம்? என்பது தொடர்பான வழக்கு சென்னை மற்றும் ஆந்திர மாநில உயர்நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் நிலையில் இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன என்பது தெரியவில்லை.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தவறு செய்கிறார்கள். ஆனால், அரசு அதிகாரிகள் சட்ட விதிகளுக்கு உட்பட்டுத்தான் செயல்பட வேண்டும்.

    முக ஸ்டாலின்


    இந்த உண்மைகளை எல்லாம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிந்து கொள்ளாமல் புதுவை அரசியல்வாதிகளின் தவறான வழிகாட்டுதலின் பேரில் அவர்களை பாதுகாக்கும் விதத்தில் பேசுவது சரியல்ல.

    இந்த விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் பொய்களை பேச வேண்டிய அவசியம் இல்லை. சுற்றுச்சூழல் விதிகளை மீறியதற்கான ஆதாரங்கள் தெளிவாக உள்ளன.

    இதுபோன்ற முறைகேடுகளுக்கு துணை போகும் அதிகாரிகள் தங்களது ஓய்வூதியத்தை இழக்க நேரிடும்.

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஆதரவாக பேசலாம். ஆனால், கவர்னர் மீது குற்றம் சாட்டுவதற்கு முன்பு உரிய ஆதாரங்கள் இன்றி பேசக்கூடாது. இது கண்டனத்துக்குரியது.

    இவ்வாறு கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
    Next Story
    ×