search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    மாணவனை தாக்கிய டிரைவர் - அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

    திண்டுக்கல் அருகே மாணவனை டிரைவர் தாக்கியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல்லில் இருந்து சின்னாளப்பட்டி, செம்பட்டி வழியாக அரசு பஸ் ஆத்தூருக்கு இயக்கப் படுகிறது. இன்று காலை ஆத்தூரில் இருந்து திண்டுக்கல்லுக்கு சென்ற அந்த பஸ்சில் செம்பட்டியில் பள்ளி மாணவர்கள் ஏறியு ள்ளனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் படியிலேயே தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.

    ஆபத்தான முறையில் பயணம் செய்ய கூடாது என அறிவுறுத்திய டிரைவர் பெரியகுளத்தைச் சேர்ந்த கனகராஜ் தொடர்ந்து மாணவர்களை உள்ளே வருமாறு அழைத்துள்ளார். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவர்கள் தொடர்ந்து படியிலேயே பயணம் செய்துள்ளனர்.

    செம்பட்டியை அடுத்த நடுப்பட்டிக்கு வந்த போது அத்திரமடைந்த டிரைவர் கனகராஜ் மாணவர்களை சத்தம் போட்டுள்ளார். மேலும் பிளஸ்-2 மாணவர் முத்துராஜா என்பவரை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அந்த மாணவன் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான்.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து அறிந்ததும் சின்னாளப்பட்டி போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    தாக்குதல் குறித்து மாணவர்கள் கூறுகையில், டிரைவர் கனகராஜ் கல்லால் மாணவனை தாக்கியுள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது என்றனர்.

    ஆனால் டிரைவர் கனகராஜ் கூறுகையில், கையால்தான் தாக்கினேன். மாணவன் எங்காவது மோதி ரத்தம் வந்திருக்கலாம் என கூறியுள்ளார். போலீசார் இரு தரப்பினரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×