search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்குதல்
    X
    மின்சாரம் தாக்குதல்

    மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 8-ம் வகுப்பு மாணவன் பலி

    போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பூந்தமல்லி:

    போரூரை அடுத்த முகலிவாக்கம் தனம்நகரை சேர்ந்தவர் செந்தில். இவரது மகன் தீனா(14). இவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான்.

    நேற்று இரவு தனது நண்பனை பஸ்சில் ஏற்றி வழியனுப்பி விட்டு வீட்டுக்கு நடந்துவந்து கொண்டிருந்தான். அந்த பகுதியில் கால்வாய் அமைக்க நகராட்சி சார்பில் பள்ளம் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக உள்ளது.

    ஏற்கனவே அப்பகுதியில் தெருவிளக்குகளுக்கு மின் கேபிள்கள் புதைக்கப்பட்டுள்ளது. அது சரிவர மூடப்படாததால் கேபிள் வயர்கள் வெளியே தெரிகின்றன. இதற்கிடையே நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக தேங்கிய தண்ணீரில் மின் கசிவு ஏற்பட்டிருந்தது.

    இந்தநிலையில் அந்த வழியாக நடந்து வந்த தீனா எதிர்பாராதவிதமாக மின்சார கசிவு ஏற்பட்ட தண்ணீரில் மிதித்து விட்டான். இதனால் தூக்கி விசப்பட்ட அவன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தான்.

    தகவல் அறிந்ததும் தீனாவின் பெற்றோரும், உறவினர்களும் ஒன்று திரண்டனர். மின்சாரம் தாக்கி இறந்த தீனாவின் உடலை தூக்கி வந்து மவுண்ட் பூந்தமல்லி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே போலீசாரும், வருவாய்துறை அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் சமரச பேச்சு நடத்தினர்.

    ஆனால் சம்மந்தப்பட்ட மின்வாரிய ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டக்காரர்கள் மறியலை கைவிட மறுத்தனர். எனவே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    இறுதியில் அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டதை தொடர்ந்து 2 மணிநேரம் கழித்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதன்பின்னர் மாணவன் தீனாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மறியல் காரணமாக அங்கு சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×