search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான சங்கர்
    X
    கைதான சங்கர்

    திண்டுக்கல் அருகே 30 ரூபாய் கொடுக்காததால் தொழிலாளி அடித்துக் கொலை- வாலிபர் கைது

    ஆத்தூர் அருகே தொழிலாளி கொலையில் 3 மணி நேரத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அக்கரைப்பட்டி கிழக்குத் தெரு அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் வீரன் (வயது 55). இவரது மனைவி பொம்பி. இவர்களுக்கு குழந்தை இல்லை. அதே பகுதி பண்ணைக்காட்டைச் சேர்ந்தவர் சங்கர்.

    இவரது மனைவி கார்த்தீஸ்வரி. சங்கரின் மாமனார் வீடு வீரன் வீட்டின் அருகே உள்ளது. இதனால் சங்கர் தனது மாமனார் வீட்டுக்கு வரும் போது வீரனுடன் நட்பு ஏற்பட்டது. சங்கர் கல் உடைக்கும் தொழில் மற்றும் கேரளா சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

    வீரன் தினமும் நண்பர்களுடன் சேர்ந்து சீட்டு விளையாடுவது வழக்கம். சங்கரும் அவருடன் சேர்ந்து சீட்டு விளையாடுவாராம். சம்பவத்தன்று இவர்கள் ஆல்பர்ட் என்பவரது தோட்டத்தில் சீட்டு விளையாடினார்கள்.

    அப்போது வீரனிடம் சங்கர் தோற்றுப்போனார். இதனால் தனக்கு ரூ.30 கடன் கொடு என வீரனிடம் சங்கர் கேட்டார். இதில் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

    ஆத்திரம் தீராத சங்கர் அருகில் கிடந்த கட்டையால் வீரனை சரமாரியாக தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த வீரன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதையடுத்துவீரன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி செம்பட்டி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட வீரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடிச் சென்று சுடுகாட்டின் மேடு அருகே நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. சம்பவ இடத்துக்கு போலீஸ் டி.எஸ்.பி.க்கள் சீனியம்மாள், சீமைச்சாமி, இன்ஸ்பெக்டர்கள் செம்பட்டி ராஜேந்திரன், கன்னிவாடி முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சின்னப்பன், கருப்பையா மற்றும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து கொலையாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களுக்கு சென்று சங்கரை தேடி வந்தனர். தாண்டிக்குடி அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த சங்கரை போலீசார் மடக்கி பிடித்தனர். கொலை சம்பவம் நடந்த 3 மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டார்.

    கைதான சங்கர் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் சூதாட்டத்தில் தோல்வியடைந்த தன்னை அவதூறாக பேசியதாலும், ரூ.30 பணம் தர மறுத்ததாலும் ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து சங்கரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கைதான சங்கர் மீது ஏற்கனவே ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் தொடர்பாக அக்கரைப்பட்டி பகுதியில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். 

    Next Story
    ×