search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சி.பி.ஐ.
    X
    சி.பி.ஐ.

    சென்னை, மதுரை, புதுச்சேரி, பெங்களூரு உள்பட 150 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை

    சென்னை, மதுரை, புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் 150 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியது. மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
    சென்னை:

    ஊழலை ஒழிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். சில மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பொதுமக்கள் லஞ்சம் கொடுத்து சேவையை பெறும் அவலநிலை உள்ளது. இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு கடிதம் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், இ-மெயில் மூலமாகவும் தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன.

    அதன்பேரில் பொதுமக்கள் புகார்களுக்கு உள்ளான அலுவலகங்களின் பெயர் பட்டியலை சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்தனர். இதில் ஊழல் அதிகம் நடக்கும் அலுவலகங்கள் பட்டியல் தனியாக சேகரிக்கப்பட்டது. அந்த அரசு அலுவலகங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்துவதற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர்.

    அந்தந்த துறையின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து மிகவும் ரகசியமாக இந்த சோதனையை நடத்துவதற்கு வியூகங்கள் வகுத்தனர். அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று நாடு முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சி.பி.ஐ. அதிகாரிகள் தலைமையில் அந்ததந்த துறையின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்துசென்று நாடு முழுவதும் 150 இடங்களில் இந்த சோதனையை நடத்தினர்.

    தமிழகத்தில் சென்னை, மதுரை மற்றும் புதுச்சேரியில் உள்ள பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. ஆனால் எந்தெந்த அலுவலகங்களில் சோதனை நடந்தது என்ற தகவலை அதிகாரிகள் வெளியிட மறுத்துவிட்டனர்.

    இதேபோல டெல்லி, ஜெய்ப்பூர், ஜோத்பூர், கவுகாத்தி, ஷில்லாங், சண்டிகர், ஸ்ரீநகர், நாக்பூர், ஜபல்பூர், கொல்கத்தா, புவனேஸ்வர், ஐதரபாத், பெங்களூரு, மும்பை, காந்திநகர், போபால், ராய்ப்பூர், பாட்னா, லக்னோ, காசியாபாத், டேராடூன், ராஞ்சி, விசாகப்பட்டினம், குண்டூர், விஜயவாடா, கொச்சின், கொல்லம், கரீம்நகர், செகந்திரபாத், வதோதரா உள்பட 150 இடங்களில் உள்ள மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    குறிப்பாக ரெயில்வே, நிலக்கரி சுரங்கம், மருத்துவம் மற்றும் சுகாதார நிறுவனங்கள், சுங்கத்துறை, இந்திய உணவு கழகம், மின்சாரம், நகராட்சி அலுவலகங்கள், மத்திய பொதுப்பணித் துறை, தீயணைப்புத்துறை, சார்பதிவாளர் அலுவலகங்கள், சரக்கு மற்றும் சேவை வரித்துறை, துறைமுகம், தேசிய நெடுஞ்சாலை, இந்திய விமான ஆணையம், கப்பல் கழகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள் போன்ற பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்றது.

    துறை ஊழியர்கள், அதிகாரிகளின் மேஜைகள், அவர்களுடைய உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அலுவலகத்தில் உள்ள ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டன.

    இந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள், கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து எந்த விவரத்தையும் சி.பி.ஐ. அதிகாரிகள் வெளியிடவில்லை. எனவே அதனடிப்படையில் சி.பி.ஐ. அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.

    இந்த சோதனை தொடர்பாக சி.பி.ஐ. வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஊழலால் பொதுமக்களும், சிறு வணிகர்களும் அதிகளவில் பாதிக்கப்படும் அரசு அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடத்தப்பட்டது. அரசு துறை அலுவலகங்களில் நடைபெறும் ஊழல் குறித்து பொதுமக்கள் எவ்வாறு எளிதில் புகார் செய்வது என்பது குறித்து சி.பி.ஐ. மண்டல அலுவலகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×