search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றதை படத்தில்  காணலாம்.
    X
    வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நின்றதை படத்தில் காணலாம்.

    விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை: அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    வெப்பச்சலனம் காரணமாக விழுப்புரம்-கடலூர் மாவட்டத்தில் பரவலாக கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    விழுப்புரம்:

    வெப்பச்சலனம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. நேற்று இரவு முதல் விழுப்புரம் பகுதியில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக புதிய பஸ்நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிறது.

    தாழ்வான பகுதியான சுதாகர் நகர், வீனஸ்நகர், கணேஷ்நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர சிரமப்பட்டனர்.

    கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    30 ஆண்டுகளுக்கு பிறகு அதிக அளவு தண்ணீர் ஓடுவதால் அந்த பகுதி மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர். உளுந்தூர்பேட்டை, பாண்டூர், களமருதூர், கருவேப்பிலைபாளையம் பகுதியில் வரலாறு காணாத மழை பெய்து உள்ளது. இதனால் அங்கு உள்ள வயல்களில் வெள்ளம் புகுந்தது.

    மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி செஞ்சி, கோட்டக்குப்பம், திண்டிவனம், வீடூர், கல்வராயன்மலை, உளுந்தூர்பேட்டை, ஆகிய பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தொடர்மழை காரணமாக கோமுகி அணை, வீடூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இதேபோல் கடலூரிலும் நேற்று இரவு முதல் மழை கொட்டி தீர்த்தது. இன்று காலை 9 மணிவரை மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானம், பாரதி சாலை, திருப்பாதிரிப்புலியூர், கடலூர்- பண்ருட்டி சாலை உள்ளிட்ட நகரின் பிரதான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.

    கடலூர் மாவட்டம், பண்ருட்டி, வேப்பூர், விருத்தாசலம், பரங்கிப்பேட்டை, ஸ்ரீமுஷ்ணம், பெண்ணாடம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

    இந்தமழையில் செம்பேரி-ஆலத்தியூர் பகுதியில் வெள்ளாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக ஆற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை பகுதி பாதிக்கப்பட்டுள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×