search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கூடலூர் அருகே பொன்னானி பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த ராட்சத மரம்
    X
    கூடலூர் அருகே பொன்னானி பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த ராட்சத மரம்

    நீலகிரி மாவட்டத்தில் மீண்டும் மழை - மீட்பு பணிகள் பாதிப்பு

    நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. மழை தொடர்வதால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பலத்த மழை பெய்தது.

    ஒரு வாரமாக கடும் மழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத வகையில் அவலாஞ்சியில் ஒரே நாளில் 92 செ.மீ. மழை பெய்தது. இந்த மழையால் மாவட்டத்தில் 250 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 350 கிலோ மீட்டர் தூரம் சாலைகள் பழுதடைந்து உள்ளது. மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக ஊட்டி, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுகா அதிகம் பாதிக்கப்பட்டது. மழைக்கு 6 பேர் பலியானார்கள்.

    அவலாஞ்சி மின் வாரிய குடியிருப்பில் சிக்கிய 12 பேர் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

    பாதிக்கப்பட்ட 2,300 பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் வழங்கி வருகிறது.

    மீட்பு பணியில் பேரிடர் மீட்பு துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலை துறை மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 2 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்யவில்லை. இதனால் ஊட்டியில் இயல்பு நிலை ஏற்பட்டது. சுதந்திர தின விடுமுறை நாளன்று ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது.

    இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. ஊட்டி, குந்தலூர், கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று காலையும் மழை நீடித்தது.

    மழை தொடர்வதால் மீட்பு பணியில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. மழை காரணமாக ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்படுகிறது. பந்தலூர் இருந்து கேரள மாநிலம் செல்லும் சாலையில் பொன்னானியில் சாலையோரம் இருந்த ஈட்டி மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் பந்தலூர் பகுதியில் இருந்து கேரளாவுக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. அவைகள் இருபுறமும் வரிசையாக நின்றது.

    முக்கட்டி, நெலாக்கோட்டை, தேவர் சோலை, பந்தலூர் பகுதிகளுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலை துறை, வனத்துறை, சேவா பாரதி அமைப்பினர், தீயணைப்பு துறை, வருவாய் துறையினர் அங்கு விரைந்து சென்றனர்.

    சாலையில் விழுந்து கிடந்த மரத்தை அறுத்து அப்புறப்படுத்தினார்கள். அதன் பிறகு போக்குவரத்து சீரானது. அகற்றப்பட்ட மரத்தை வனத்துறையினர் தங்கள் பொறுப்பில் எடுத்து சென்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு-

    ஊட்டி-11, நடுவட்டம்- 17.5, கல்லட்டி-5, கிளன்மார்கன்-14, குந்தா-3, கெத்தை-3, அவலாஞ்சி-9, எமரால்டு -3, அப்பர் பவானி-4, குன்னூர்- 8, பர்லியாறு- 5, கேத்தி-3, கோத்தகிரி- 6.5,கொடநாடு- 9, கூடலூர்- 18, தேவாலா-17.

    ஊட்டியில் தொடர் மழை பெய்து வருவதால் மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

    ஊட்டி தேவர் சோலை பகுதியில் தனியார் எஸ்டேட்டில் எந்தவித அனுமதியும் பெறாமல் நீரோடையை மறித்து தனியார் எஸ்டேட் உரிமையாளர் தடுப்பணை கட்டி இருந்தார்.

    மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவின் பேரில் இந்த தடுப்பணை இடித்து அகற்றப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். கலெக்டர் மற்றும் குன்னூர் தாசில்தார் கணேஷ் குமாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    கோவையில் நேற்று மாலை மழை பெய்ய தொடங்கியது. இன்று காலையும் விட்டுவிட்டு மழை பெய்தது. வால்பாறையில் நேற்று முன்தினம் முதல் சாரல் மழை பெய்து வருகிறது.

    Next Story
    ×