search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன்
    X
    அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மணிகண்டன்

    அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பு ஏன்?- பரபரப்பு தகவல்கள்

    தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டது ஏன்? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
    ராமநாதபுரம்:

    தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் மணிகண்டன். இவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு அந்த பொறுப்பை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு கூடுதலாக ஒதுக்கி கவர்னர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரிந்துரையின் பேரில் அமைச்சர் மணிகண்டன் பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதனால் மணிகண்டன் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    டாக்டர் மணிகண்டன் மீது அடுக்கடுக்கான புகார்கள் கட்சி தலைமைக்கு வந்ததாலும் திடீர் பதவி பறிப்பு குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

    ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக வென்ற மணிகண்டனுக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் பொறுப்பு ஒதுக்கப்பட்டது. அமைச்சராக பதவியேற்ற மணிகண்டன் கட்சி சீனியர்களை மதிப்பதில்லை என்ற புகார் தொடர்ந்து இருந்து வந்தது.

    அதேபோல் முன்னாள் எம்.பி.யும், வக்பு வாரிய தலைவருமான அன்வர் ராஜாவுக்கும், அமைச்சருக்கும் இடையேயான போட்டி மாவட்ட நிர்வாகிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தி வந்தது. மாவட்டச் செயலாளர் எம்.ஏ. முனியசாமியுடனும் இவர் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தார்.

    மேலும் அரசு ஒப்பந்த பணிகளை தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே கொடுப்பது என்ற புகார் இருந்த நிலையில், அதை அமைச்சர் மணிகண்டன் முற்றிலும் மறுத்து வந்தார். முதல்-அமைச்சர் அறிவிக்கும் திட்டம் எல்லாம் தன்னால்தான் வந்ததாக கூறுவது போன்ற புகார்கள் முதல்வர் மேஜையில் வரிசை கட்டி நின்றது.

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி


    அதேபோல் அ.தி.மு. கவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸ், ஒரு படி மேலே போய் இவர் மீது முதல்-அமைச்சரிடம் நேரடியாகவே புகார் தெரிவித்தார். அமைச்சரின் நடவடிக்கைகளால் சொந்த தொகுதிக்குள் வரவே முடியவில்லை என்றும் அவர் முதல்வரிடம் குற்றம் சாட்டினார்.

    இந்த விவகாரம் குறித்து சமீபத்தில் பேசிய கருணாஸ் இனிமேல் தொகுதிக்கு வந்து விடுவேன். தடைகள் எல்லாம் நீங்கிவிடும். முதல்வரை சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன் என்று பேசி இருந்தார்.

    அமைச்சர் மணிகண்டனோடு இணைந்து செயல்படுவீர்களா? என்ற கேள்விக்கு, அவர் துறையில் ஏதாவது தேவைப்பட்டால் மட்டுமே அவரிடம் கேட்பேன் என்றார்.

    இந்த விவகாரங்கள் நீறுபூத்த நெருப்பாக சுழன்று கொண்டிருந்த நிலையில் பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் நடந்த அரசு விழாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழக அரசு கேபிள் டிவி துறைக்கு அமைச்சர் நான்தான். தற்போது அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவராக உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கேபிள் டி.வி. தொழில் செய்து வருபவர், அந்த தொழிலில் நல்ல அனுபவம் உடையவர்.

    தனியார் நிறுவன கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு மாறிக்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார். ஒரே இரவில் அனைத்து தனியார் கேபிள் டி.வி. இணைப்புகளையும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு மாற்றிவிட முடியாது.

    முதலில் அவர் அட்சயா கேபிள் டி.வி. என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் 2 லட்சம் கேபிள் டிவி இணைப்புகள் உள்ளன. மில்லெட் என்ற கம்பெனி செட் ஆப் பாக்ஸ் மூலம் அந்த 2 லட்சம் இணைப்புகளை இயக்கி வருகிறார்.

    மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக தன்னுடைய அட்சயா கேபிள் வி‌ஷனில் உள்ள 2 லட்சம் இணைப்புகளை அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மாற்ற வேண்டும்.

    அதன் பிறகு மற்றவர்கள் வைத்துள்ள இணைப்புகளை மாற்ற வேண்டும். அவரிடம் உள்ள 2 லட்சம் இணைப்புகளை அரசு இணைப்புக்கு மாற்றுவதன் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும். அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக இருக்கக் கூடியவர் (உடுமலை ராதாகிருஷ்ணன்) மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவருக்கு அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவர் பதவி கொடுக்கப்பட்டது குறித்து முதல்வர் என்னிடம் ஆலோசனை நடத்தவில்லை. இனி மேல் நடத்துவார் என நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிலையில் மணிகண்டன் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். கேபிள் டி.வி. நிறுவன தலைவராக உடுமலை ராதாகிருஷ்ணனை நியமிக்க எடப்பாடி பழனிசாமி எடுத்த முடிவை வெளிப்படையாகவே மணிகண்டன் விமர்சித்தார். அதேபோல் உடுமலை ராதாகிருஷ்ணனையும் அவர் விமர்சித்துப் பேட்டியளித்தார். இதன் காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நீக்கப்பட்டுள்ளார்.
    Next Story
    ×