search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மழை
    X
    மழை

    நீலகிரியில் பலத்த மழை - குந்தா, கூடலூர், பந்தலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    நீலகிரியில் பலத்த மழை பெய்து வருவதால் குந்தா, கூடலூர் ,பந்தலூர் அப்பர்பவானி இப்பதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதத்தில் இருந்து ஆகஸ்டு மாதம் வரை தென்மேற்கு பருவ மழை பெய்வது வழக்கம். இந்த ஆண்டு மிக தாமதமாக பருவமழை தொடங்கியுள்ளது.

    நேற்று முதல் நீலகிரி மாவட்டத்தில் கேரள மாநிலத்தையொட்டியுள்ள எல்லையோரப் பகுதிகளில் பரவலாக பலத்த மழை கொட்டியது. மற்ற இடங்களில் சாரல் மழை பெய்தது. குந்தா, கூடலூர் ,பந்தலூர், அப்பர்பவானி பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    மழை காரணமாக பாண்டியாறு புன்னம்புழா ஆறு மற்றும் அதன் கிளை ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, ஆற்றில் இறங்கவோ, கரையோரங்களுக்கு செல்லவோ கூடாது என வருவாய் மற்றும் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிகக்குறைந்த அளவிலேயே சாரல் மழை பெய்து வருகிறது. ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் மேக மூட்டமும், பலத்த காற்றும் வீசினாலும் மழை அதிகம் இல்லை.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக அவலாஞ்சியில் 211 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் மரங்கள் சாலைகளில் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் மழையளவு (மி.மீட்டரில்) வருமாறு: நடுவட்டம் 70, ஊட்டி 25, குந்தா 20, எமரால்டு 61, அப்பர்பவானி 90, கூடலூர் 74, தேவலா 62.

    இதேபோன்று கோவையில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்யத்தொடங்கியது. விடிய, விடிய மழை பெய்தது. இன்று காலையும் மழை பெய்து கொண்டிருந்தது.

    இதனால் வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் அவதியடைந்தனர். இதேபோன்று மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாரல் மழை பெய்தது.

    வால்பாறையில் நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி மழை விடியவிடிய பரவலாக கனமழையாக பெய்தது. வால்பாறையில் சீராக மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    Next Story
    ×