search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பக்தர்கள் நீராடும் காட்சி.
    X
    பக்தர்கள் நீராடும் காட்சி.

    ஆடி மாத பிறப்பையொட்டி களை இழந்த மேட்டூர்

    மேட்டூர் அணை நீர்மட்டம் 40.53 அடியாக குறைந்ததால் ஆடி மாத பிறப்பையொட்டி காவிரி ஆற்றில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் நேற்று குறைவாகவே இருந்தது. இதனால் ஆடி பிறப்பில் மேட்டூர் களை இழந்தது.
    மேட்டூர்:

    ஆடி மாத பிறப்பை யொட்டி ஆண்டுதோறும் சேலம், ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேட்டூருக்கு வருவது வழக்கம். அவ்வாறு வரும் அவர்கள் மேட்டூர் காவிரி ஆற்றில் புனித நீராடி அணைக்கட்டு முனியப்பசாமியை தரிசனம் செய்வார்கள்.

    இந்த ஆண்டு தமிழகம், கர்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு போதுமான நீர்வரத்து இல்லாமல் போனது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 40.53 அடியாக இருந்தது.

    இதனால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று வரை தண்ணீர் திறக்கப்படவில்லை. இதற்கு மாறாக அணையில் இருந்து டெல்டா மாவட்ட மக்களிள் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    இதனால் காவிரி ஆற்றில் ஆங்காங்கே பாறைகளாகவும், மணல் திட்டுகளாகவும் காட்சி அளிக்கிறது. அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும், காவிரி ஆற்றில் தண்ணீர் குறைவாக இருப்பதாலும் ஓடை போல் மாறி உள்ளது.

    இதனால் நேற்று மேட்டூருக்கு ஆடி மாத பிறப்பையொட்டி வரும் பக்தர்கள் கூட்டம் மிக, மிக குறைவாகவே இருந்தது. காவிரி ஆற்றில் பக்தர்கள் நீராடும் கூட்டம் இன்றி ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் காவிரியில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். இதனால் மேட்டூரில் பக்தர்கள் கூட்டம் குறைந்து களை இழந்து வெறிச்சோடி காணப்பட்டது.
    Next Story
    ×