search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால்
    X
    சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால்

    ஓட்டல் தொழிலில் உச்சத்தை தொட்டு ஆயுள் கைதியாகி உயிரை விட்ட ராஜகோபால்

    தனது உழைப்பால் உயர்ந்த ராஜகோபால் ஜோதிட நம்பிக்கையால் கடந்த 18 ஆண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கடைசியில் ஆயுள் கைதியாக உயிரை விட்டுள்ளார்.
    சென்னை:

    ‘அண்ணாச்சி’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர் சரவணபவன் ராஜகோபால்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னை நகர் என்ற சிறிய கிராமத்தில் பிறந்த ராஜகோபால் தனது 12 வயதில் இருந்தே உழைக்க தொடங்கினார்.

    அப்போது பஸ் வசதிகூட இல்லாத அந்த கிராமத்தில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்த ராஜகோபால், முதலில் சிறிய ஓட்டல் ஒன்றில் மேஜை துடைக்கும் கிளீனராகவே தனது வேலையை தொடங்கினார்.

    பின்னர் ஓட்டல் டீ மாஸ்டருடன் பழகி டீ போடுவது எப்படி? என்பதை கற்றுக்கொண்ட அவர் கிளீனரில் இருந்து டீ மாஸ்டராக உயர்வு பெற்றார்.

    இதன் பின்னர் கே.கே.நகர் பகுதியில் மளிகை கடை ஒன்றை தொடங்கினார். அப்போது மதிய வேளையில் கடைக்கு வந்த ஒருவர் “அண்ணாச்சி சீக்கிரம் பொருளை கொடுங்க... இங்க ஓட்டல்கூட கிடையாது” என்று கூறியுள்ளார்.

    1981-ம் ஆண்டு தனது கடைக்கு வந்த நபர் கூறிய இந்த வார்த்தைகளே ராஜகோபால் மனதில் ஓட்டல் தொடங்கும் எண்ணத்தை விதைத்துள்ளது.

    இதனையடுத்து அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இன்னொருவர் நடத்தி வந்த ‘காமாட்சி பவன்’ ஓட்டலை விலைக்கு வாங்கி ஓட்டல் தொழிலில் இறங்கினார். இந்த ஓட்டலை பின்னர் சரவண பவன் என பெயர் மாற்றினார்.

    படிப்படியாக சரவண பவன் கிளைகள் முளைத்தன. ஓட்டல் தொழிலில் ராஜகோபால் உச்சத்தை தொட்டார்.

    சென்னையில் 25 கிளைகள் உள்பட உலகம் முழுவதும் 46 கிளைகள் இப்போது உள்ளன. சைவ உணவகம் என்றாலே சரவண பவன்தான் எல்லோரது நினைவுக்கும் வரும் அளவுக்கு தரமான உணவு வகைகள் பரிமாறப்பட்டன.

    இந்த நிலையில்தான் 2001-ம் ஆண்டு பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் ஓராண்டு சிறைவாசத்தையும் அனுபவித்துள்ளார்.

    சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால்

    இதன் பின்னர்தான் தனக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக அப்பீல் செய்து ஆயுள் தண்டனையை பெற்றார்.

    தீவிர முருக பக்தரான ராஜகோபால் கிருபானந்த வாரியாரின் சீடராகவும் விளங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கச்சனாவிளையில் ‘வனதிருப்பதி’ என்கிற பிரமாண்ட கோவிலை உருவாக்கியுள்ளார். அங்கும் சரவணபவன் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.

    ஜோதிடர் ஒருவர் 3-வது திருமணம் செய்தால் நீங்கள் மேலும் உச்சத்துக்கு செல்லலாம் என்று கூறிய ஆலோசனையே ராஜகோபாலின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. 1991-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை கொலை வழக்கு விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

    பக்தியில் சிறந்து விளங்கிய அவர் ஜோதிடர் கூறிய அறிவுரையால் திசை மாறி சென்றதாக அனைவருமே கூறுவார்கள்.

    தனது உழைப்பால் உயர்ந்த ராஜகோபால் ஜோதிட நம்பிக்கையால் கடந்த 18 ஆண்டுகளாக நிம்மதி இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து கடைசியில் ஆயுள் கைதியாக உயிரை விட்டுள்ளார்.
    Next Story
    ×