search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    அமைச்சர் விஜயபாஸ்கர்

    அனைத்து எம்எல்ஏக்களும் உடல் உறுப்பு தானம் செய்ய வேண்டும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

    முதல்-அமைச்சர், எதிர்க்கட்சித்தலைவரை போன்று அனைத்து எம்.எல்.ஏ.க்களும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை :

    சட்டசபையில் சுகாதாரத்துறை மானியக்கோரிக்கை மீது நடந்த விவாதம் வருமாறு:-

    பூங்கோதை ஆலடி அருணா (தி.மு.க.):- தொற்றும் நோய்களை விட தற்போது தொற்றா நோய்களின் தாக்கம் தான் அதிகரித்து வருகிறது. இளம்வயதிலேயே மாரடைப்பு, புற்றுநோய் வருகிறது. எனவே தொற்றாநோய் குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த வேண்டும். புகைபிடித்தல், மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள், முறையற்ற உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். முக்கியமாக பள்ளி பாடப்புத்தகங்களில் இதனை செயல்படுத்த வேண்டும்.

    முறையற்ற உணவு பழக்கத்தாலும், வாழ்க்கை முறையாலும் தொற்று நோய்களால் இளைய தலைமுறையினர் பாதிக்கப்படுகின்றனர். சிகரெட் அட்டைகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல உணவுப்பொருட்களின் அட்டைகளிலும் கலோரிகள், சர்க்கரை அளவு போன்ற பல்வேறு அம்சங்கள் வாசகங்களாக இடம் பெறவேண்டும்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- எந்த கடை உணவு ருசியாக இருக்கிறதோ? அதை பார்த்து தானே போவார்கள். நீங்கள் நல்ல தகவல்களை அளித்து இருக்கிறீர்கள். உங்கள் கருத்துக்களை அரசு கவனமாக கேட்டுக்கொள்கிறது. மருத்துவ முகாம்கள் மூலமாகவும், தொற்றா நோய்கள் குறித்த விழிப்புணர்வை பல்வேறு வழிகளில் அரசு ஏற்படுத்தி வருகிறது. 416 நடமாடும் மருத்துவமனை மூலம் மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திலேயே சென்று பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- நீரிழிவு, மார்பக புற்றுநோய் குறித்து வீடுகளுக்கே சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இதுகுறித்து பள்ளிகளில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    அமைச்சர் செங்கோட்டையன்:- உறுப்பினர் பள்ளிப்படிப்புகளில் சுகாதாரம் சார்ந்த விழிப்புணர்வு பாடங்களை வைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதை விட பள்ளிக்கல்வித்துறை சார்பில் தொலைக்காட்சி சேனல் வருகிறது. அதில் காட்சிகளாக அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

    பூங்கோதை ஆலடி அருணா:- தமிழ்நாட்டில் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் அதிகளவில் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாக தகவல் வருகிறது.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- உறுப்பினர் தவறான தகவலை பதிவு செய்யக்கூடாது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு உடல் உறுப்புகள் கொண்டுவரப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து ஒரு உடல் உறுப்பு கூட வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுவதில்லை.

    பூங்கோதை ஆலடி அருணா:- உடல் உறுப்பு தானத்தின் அவசியம் குறித்து இந்த அரசு இன்னும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எங்கள் தலைவர், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்திருக்கிறார்கள்.

    உடல் உறுப்பு தானம்

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி ஆகியோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்திருப்பது மகிழ்ச்சி. ஏற்கனவே முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரும் உடல் உறுப்பு தானத்திற்கு விண்ணப்பித்திருக்கிறார்கள். அவர்களை போன்று அனைத்து உறுப்பினர்களும் (எம்.எல்.ஏ.க்களும்) உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது.

    பூங்கோதை ஆலடி அருணா:- நிதி ஆயோக் அறிக்கையில் தமிழகம் மருத்துவத்துறையில் பின்தங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- தமிழகம் சுகாதாரத்துறையில் எல்லா மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழ்கிறது. பலரும் அரசு மருத்துவமனைகளின் செயல்பாட்டை பாராட்டியிருக்கிறார்கள். நிதி ஆயோக் டிசம்பரில் நாம் 3-வது இடத்தில் இருப்பதாக தெரிவித்தது. இப்போது 9-வது இடம் என்று சொல்கிறது. எதை வைத்து அவர்கள் இதை சொன்னார்கள் என்பது தெரியவில்லை. ஒரு சிறிய கதை சொல்கிறேன். ஒரு தவளையை வைத்து ஒரு விஞ்ஞானி ஆய்வு நடத்தினார். அந்த தவளையின் ஒரு காலை உடைத்தார், அதை தாவி குதிக்கும்படி கூறினார். அது தாவி, குதித்தது. 2-வது காலை உடைத்து, தாவும் படி கூறினார். தவளை கஷ்டப்பட்டு தாவியது. கடைசியாக 4-வது காலையும் உடைத்து தாவும்படி கூறினார். தவளை தாவ முடியாமல் தரையில் படுத்தப்படி இருந்தது. இதற்கு என்ன காரணம் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த விஞ்ஞானி கடைசியாக தன் ஆய்வின் முடிவை எழுதினார். எப்படியென்றால், தவளையின் 4-வது காலை உடைத்தபோது, அந்த தவளைக்கு காது கேட்கவில்லை என்று குறிப்பிட்டார். இதை நீங்கள் புரிந்துகொண்டாலும் சரி, நிதி ஆயோக் புரிந்துகொண்டாலும் சரி.

    பூங்கோதை ஆலடி அருணா:- அரசு மருத்துவமனைகளில் நாற்காலிகள் கூட இல்லை. இருக்கை இல்லை.

    அமைச்சர் விஜயபாஸ்கர்:- அரசு மருத்துவமனைகளில் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்கிறது.

    பூங்கோதை ஆலடி அருணா:- நீங்கள் என்னதான் கூறினாலும், மருத்துவத்துறையில் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டது தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான். 27 சதவீத இட ஒதுக்கீட்டை கருணாநிதி பெற்றுக்கொடுத்தார். ஆடிக்காற்று அடிக்கப்போகிறது, அம்மாவின் ஆட்சி அம்மி போல பறக்க போகிறது.

    அமைச்சர் ஜெயக்குமார்:- நீங்கள் இதுபோன்று சொல்வீர்கள் என்று தெரியும். எனவே தான் நாங்கள் மிக்சி, கிரைண்டர், மின் விசிறி கொடுத்து இருக்கிறோம்.

    அமைச்சர் செங்கோட்டையன்:- உங்களுக்கு ஆடி காற்று அடிக்கப்போவதே இல்லை.

    இவ்வாறு விவாதம் நடந்தது.
    Next Story
    ×