search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின்
    X
    உதயநிதி ஸ்டாலின்

    பதவி ஏற்ற ஒரு வாரத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

    பதவி ஏற்ற ஒரு வாரத்தில் நாகை மற்றும் மதுரை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்களை மாற்றி உதயநிதி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தி.மு.க.வில் அதிகாரமிக்க அமைப்புகள் என்று மாணவர் அணியையும் இளைஞர் அணியையும் தான் கருணாநிதி குறிப்பிடுவார்.

    மாணவர் அணி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டது. அடுத்து இளைஞர் அணி 1980-களில் தமிழ்நாட்டு இளைஞர்களிடம் தி.மு.க.வை கொண்டு சென்றது. அவசர காலகட்டத்தில் மு.க.ஸ்டாலினின் போராட்டங்களுக்காக அவருக்கு கிடைத்த பதவி.

    முக ஸ்டாலின்


    சுமார் 30 ஆண்டுகளாக ஸ்டாலின் வசம் இருந்த இந்த பதவி, கடந்த 2 ஆண்டுகளாக முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கைக்குள் இருந்தது. தி.மு.க.வின் அதிகாரமிக்க பதவியான இந்த பதவிக்கு வந்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக 37 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றிபெற்றது. கருணாநிதி இல்லாமல் சந்தித்த முதல் தேர்தல் இது.

    இந்த வெற்றிக்கு திமுகவின் பிரசார யுக்தி முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இந்த தேர்தலில் உதயநிதி தி.மு.க. சார்பாக தமிழகம் முழுவதும் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அவரது பிரசாரம் அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வண்ணம் இருந்ததால் கட்சி நிர்வாகிகள் அவருக்கு கட்சி பொறுப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து கடந்த 4ந்தேதி தி.மு.க. இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

    உதயநிதி பதவியேற்ற பின்னர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்தை ஜூலை 6-ந்தேதி முதன்முறையாக தனது தலைமையில் நடத்தினார். தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இளைஞரணியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட இருப்பதாக அறிவித்தார். அடுத்த அதிரடியாக இளைஞரணியில் உள்ள சில நிர்வாகிகளை மாற்றி அமைக்கும் பணியை உதயநிதி தொடங்கி இருக்கிறார்.

    உதயநிதி தலைமையில் நடந்த இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து வந்த நிர்வாகிகள் தங்கள் பகுதிகளில் உள்ள தி.மு.க. நிர்வாகிகள் பற்றி பலரும் புகார் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து நிர்வாக வசதிகளுக்காக உதயநிதி பழைய நடவடிக்கைகளில் இருந்து புதிய செயல்பாட்டை கொண்டு வர இருப்பதாக ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்தார்.

    இந்நிலையில் அதன் முதல் கட்டமாக நாகை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த ஜி.ராம் குமார் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக பணியாற்றி வரும் திருக்குவளை மலர்மன்னன் தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    அடுத்து மதுரையிலும் அதிரடி காட்டி இருக்கிறார். மதுரை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக பணியாற்றி வந்த பாலாஜிக்கு கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் பொறுப்பு கொடுத்துவிட்டு இளைஞரணி அமைப்பாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு பதிலாக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பணியாற்றிவரும் மதன் குமார் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவை மட்டும் அல்லாமல் சில மாவட்டங்களில் பொறுப்புகளில் உள்ள சிலரை மாநில பொறுப்புக்கு கொண்டு வர உதயநிதி முயற்சி எடுத்து வருகிறார். அதற்கான ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

    அது மட்டுமில்லை, சரியாக வேலைபார்க்காத, செயல்படாத நிர்வாகிகளையும் களையெடுக்க முடிவு செய்துள்ளார். இதனால் இளைஞரணியில் விரைவில் நிறைய மாற்றங்களை உதயநிதி ஏற்படுத்த போகிறார் என்று தி.மு.க.வினர் தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×