search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    புதுப்பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடி- ஒருவர் கைது

    புதுப்பேட்டையில் ஏலச்சீட்டு நடத்தி பல கோடி மோசடியில் ஈடுபட்டவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    போரூர்:

    புதுப்பேட்டை சுப்பராயன் தெருவில் அரிசி கடை நடத்தி வந்தவர் எஸ்கே. கண்ணன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக ரூ. 50 ஆயிரம் முதல் 20 லட்சம் வரை ஏலச்சீட்டு நடத்தி வந்தார்.

    இவரது உறவினர் ஒருவர் போலீசில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இதன் காரணமாக எழும்பூர், புதுப்பேட்டை, மாத்தூர் உள்ளிட்ட காவலர் குடியிருப்பில் உள்ள போலீசார் குடும்பத்தினர் ஏராளமானோர் கண்ணன் நடத்தி வந்த மாத சீட்டில் சேர்ந்து பணம் கட்டி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் கண்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் திடீரென தலைமறைவானார்கள்.

    இது குறித்து சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்கள் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே கண்ணன், அவரது மாமனார் நாகராஜ் மைத்துனர் சதீஷ் ஆகிய மூவர் மீதும் புகார் அளித்தனர். அவர்களை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள வீட்டை காலி செய்து தப்பிச் செல்ல முயன்ற போது கண்ணனின் மாமனார் நாகராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    விசாரணையில் கண்ணனுக்கு சென்னையில் எழும்பூர், புதுப்பேட்டை, மாத்தூர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் சொந்தமான வீடுகள் உள்ளது.

    இந்த வீடுகளை லீசுக்கு விட்டு அவர் பல லட்சம் பணம் பெற்று இருந்தார். மேலும் இந்த சொத்துக்களின் பேரில் பல கோடி வங்கியில் கடன் பெற்று வங்கிக்கு பணம் கட்டாமல் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளதும் தெரியவந்தது.

    தலைமறைவாக சதீஷ், கண்ணன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். நாகராஜ் கைது செய்யப்பட்டது பற்றி அறிந்ததும் ஏலச்சீட்டில் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கே.கே.நகர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
    Next Story
    ×