search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    கிரண்பேடியின் கருத்துக்கு கண்டனம்- சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

    தண்ணீர் தட்டுப்பாடு குறித்து கிரண்பேடி கூறியதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசும்போது, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை வரவேற்றார். அதேசமயம், குடிநீர் பிரச்சனையை தீர்க்க தவறியதாக தமிழக அரசையும் விமர்சனம் செய்தார்.

    தமிழக அரசின் குடிமராமத்து பணிகள் தோல்வி அடைந்துவிட்டதாக கூறிய அவர், குடிநீர் பிரச்சினை பற்றி சபையில் விவாதிப்பதற்காக ஒருநாள் முழுவதையும் ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

    தமிழக அரசை குற்றம்சாட்டி புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறியது பற்றி சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசினார். ஆனால் அது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதனையடுத்து திமுக வெளிநடப்பு செய்தது.

    திமுக வெளிநடப்பு

    பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழக மக்களை கிரண்பேடி அவமதிக்கிறார். அவரது கருத்தைக் கண்டித்து வெளிநடப்பு செய்தோம். அவரை பற்றி பேரவையில் நான் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிட்டார்கள். எனவே தமிழக அரசை குறை கூறி கிரண்பேடி தெரிவித்ததை இந்த அரசு ஏற்றுக்கொண்டிருப்பதுபோல் தெரிகிறது” என்றார்.

    சென்னையில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், வித்தியாசமான அதிகாரத்துவம் ஆகியவையே காரணம் என புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறியது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×