search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரூர் அருகே குடிநீர் பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை- பொதுமக்கள் மகிழ்ச்சி
    X

    அரூர் அருகே குடிநீர் பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை- பொதுமக்கள் மகிழ்ச்சி

    அரூர் அருகே குடிநீர் பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கொளகம்பட்டி கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களுக்கு அருகில் உள்ள ஏரியில் அமைக்கப்பட்டுள்ள கிணற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப் போனதால் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிணறு முற்றிலுமாக வறண்டுபோனது. இதனால் கிராமத்தில் குடிநீர் வினியோகம் மூன்று நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்தது. ஆனாலும் அந்த குடிநீர் கிராம மக்களுக்கு போதுமானதாக கிடைக்கவில்லை.

    இதனையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் சுமார் ஒரு மாத காலமாக வரவில்லை, ஒகேனக்கல் குடிநீர் வந்தால் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என தருமபுரி மாவட்ட கலெக்டருக்கு வாட்ஸ்-அப் மூலமாக புகார் தெரிவித்துள்ளார். புகாரின்பேரில், மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிலளித்தார். மேலும், தொடர்ந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளரை கொளகம்பட்டி கிராமத்திற்கு அனுப்பி வைத்து, ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் வழங்குவதில் உள்ள சிரமத்தை சீர்செய்து உடனடியாக தண்ணீரை அங்கு கொண்டுசென்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீரை ஏற்ற உத்தரவிட்டார். 

    இதனை தொடர்ந்து குடிநீர் வழங்குவதில் உள்ள சிரமத்தை சீர்செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தினமும் கிடைத்தால் எங்கள் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என கிராம மக்கள் தெரிவித்தனர். 
    Next Story
    ×