search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    40 ஆண்டுகளுக்கு பின் பாராளுமன்றத்தில் தமிழ் ஒலிக்கிறது - குமரி அனந்தனின் மலரும் நினைவுகள்
    X

    40 ஆண்டுகளுக்கு பின் பாராளுமன்றத்தில் தமிழ் ஒலிக்கிறது - குமரி அனந்தனின் மலரும் நினைவுகள்

    40 ஆண்டுகளுக்கு பிறகு பாராளுமன்றத்தில் தமிழ் ஒலித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை அமைப்பின் தலைவருமான குமரி அனந்தன் கூறினார்.
    சென்னை:

    பாராளுமன்றத்தில் தமிழிலும் பேசலாம் என்ற உரிமையை 40 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கித் தந்தவர் குமரி அனந்தன். தற்போது தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவி ஏற்றது குறித்து அவர் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

    1977-ல் நான் நாகர்கோவில் தொகுதியில் எம்.பி.யாக வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு சென்றேன். அப்போது தமிழில் பேச தொடங்குவேன்.

    நான் பேசத் தொடங்கியதும் வெளியேறு வெளியேறு என்று இந்தியில் கத்துவார்கள். சிலர் முட்டாள் உட்காரு என்று இந்தியில் சத்தம் போடுவார்கள். நான் உட்காராமல் நின்று கொண்டே இருப்பேன்.

    இதுபற்றி நான் வெளியே வந்ததும் நிருபர்கள் நீங்கள் ஏன் உட்காரவில்லை என்று கேட்பார்கள். நான் சொல்வேன் முட்டாளே உட்காரு என்று சொன்னதைக் கேட்டு நான் உட்கார்ந்தால் அதை ஒத்துக்கொண்டதாக அர்த்தமாகிவிடும்.

    ஆனால் நான் அறிவுள்ள தமிழன் என்பதை உணர்த்துவதற்காகவே நின்று கொண்டிருந்தேன் என்று சொல்வேன். இவ்வாறு தமிழில் பேசுவதற்காக பலமுறை அவையில் போராடி பத்து முறைக்கு மேல் தொடர்ந்து காவலர்களால் தூக்கி வெளியேற்றப்பட்டேன்.

    ஆனாலும் எனது தொடர் முயற்சியை நான் விடவில்லை. அதன் காரணமாக 1978 நவம்பர் 20-ந் தேதி தமிழில் பேசுவதற்கான அனுமதி கிடைத்தது.

    தமிழில் கேள்வி கேட்டு விடையும் பெற்றேன். அன்று முதல் நான் மன்றத்திற்குள் செல்லும் போதெல்லாம் மொழிபெயர்த்து சொல்வதற்காக இந்தி, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் புலமை பெற்றவர்கள் என்னோடு ஓடி வருவார்கள்.

    எனது பதவிக்காலம் வரை தமிழிலேயே கேள்வி கேட்டு பதிலும் பெற்று வந்தேன். எனது முயற்சி வெற்றி பெற்றது பற்றி கலைஞர் குறிப்பிடும்போது தனி மரம் தோப்பாகாது என்ற பழமொழியை மாற்றி அமைத்துவிட்டார் குமரி அனந்தன் என்று பாராட்டினார்.

    கொஞ்ச நாள் பாராளுமன்றத்திற்குள் தமிழ் ஒலித்தது. அதன்பிறகு பாராளுமன்றத்தில் தமிழ் சத்தம் கேட்கவில்லை. தற்போது 40 ஆண்டுகளுக்கு பிறகு எல்லோரும் தமிழில் பதவி ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரையும் பாராட்டுகிறேன். எல்லோரும் கட்சி எல்லைகளைக் கடந்து கன்னித்தமிழ் வளர்க்க வேண்டும். தொடர்ந்து தமிழிலேயே கேள்விகள் கேட்டு விடைகள் பெற வேண்டும்.

    இவ்வாறு குமரி அனந்தன் கூறினார்.
    Next Story
    ×