search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கனகன் ஏரியை ஆய்வு செய்ய கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் சென்ற காட்சி.
    X
    கனகன் ஏரியை ஆய்வு செய்ய கவர்னர் கிரண்பேடி சைக்கிளில் சென்ற காட்சி.

    புதுவையில் மீண்டும் ஆய்வு பணியை தொடங்கிய கவர்னர்

    பாராளுமன்ற தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டதை அடுத்து பல வாரங்களாக நிறுத்தி வைத்திருந்த ஆய்வுப்பணியை கவர்னர் கிரண்பேடி இன்று தொடங்கியுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் கிரண்பேடி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏரி, குளங்களை பார்வையிடுவது மற்றும் அரசு அலுவலகங்களை ஆய்வு செய்வதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

    புதுவை நகர பகுதியை ஒட்டியுள்ள ஏரி, குளங்களை பார்வையிட்டு அதனை அரசு, தன்னார்வலர்கள் மூலம் சுத்தப்படுத்தினார். சில ஏரிகளில் படகு சவாரிக்கும் ஏற்பாடு செய்தார். அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். நிர்வாகத்தை சீர்திருத்த சில உத்தரவுகளையும் பிறப்பித்தார்.

    கவர்னரின் தன்னிச்சையான செயல்பாட்டிற்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசு அலுவலகங்களை ஆய்வு செய்யவோ, அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கவோ கவர்னருக்கு அதிகாரம் கிடையாது என நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

    இதற்கிடையில் யூனியன் பிரதேச கவர்னரின் அதிகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு புதுவைக்கும் பொருந்தும் என நாராயணசாமி கூறினார். ஆனால் இதனை கவர்னர் மறுத்தார்.

    மேலும் கவர்னருக்கு ஆதரவாக மத்திய உள்துறை ஒரு சுற்றறிக்கையும் அனுப்பியது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என கூறி மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்தது.

    இதனிடையே பாராளுமன்ற தேர்தல் வந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் கவர்னர் தனது ஆய்வுப்பணிகளை நிறுத்தி வைத்தார். வாட்ஸ்அப், டுவிட்டரில் கருத்து பதிவிடுவதையும் நிறுத்தினார்.


    இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டில் ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இதனிடையே தேர்தல் முடிந்து நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லிக்கு சென்றிருந்த கவர்னர் பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்துவிட்டு புதுவை திரும்பினார். புதுவை திரும்பியவுடன் மீண்டும் சமூகவலைதளங்களில் தனது கருத்துக்களை பதிவிட தொடங்கினார். பல வாரங்களாக நிறுத்தி வைத்திருந்த ஆய்வுப்பணியையும் இன்று கவர்னர் கிரண்பேடி தொடங்கியுள்ளார்.

    இன்று காலை கனகன் ஏரியை கவர்னர் மாளிகை அதிகாரிகள் குழுவுடன் சென்று பார்வையிட்டு சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். வழக்கமாக வார இறுதிநாட்கள் ஆய்வுக்கு கவர்னர் சைக்கிளில் செல்வது வாடிக்கை. அதேபோல இன்றும் சைக்கிளில் ஆய்வுப்பணியை மேற்கொண்டார்.
    Next Story
    ×