search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி - அமைச்சர் ஜெயக்குமார்
    X

    பாராளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி - அமைச்சர் ஜெயக்குமார்

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். எனவே, தி.மு.க. தோழமை கட்சிகளும் கூட்டணிக்கு வர விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #MinisterJayakumar #ADMK
    சென்னை:

    அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

    இதில், பாராளுமன்ற தேர்தல் பணிகள், அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட ‘பூத் கமிட்டி’ விவரங்கள், ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில், “பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும், தேர்தல் வெற்றிக்காக அனைவரும் பாடுபட வேண்டும், அயராது உழைக்க வேண்டும்” என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.

    மாலை 5 மணிக்கு தொடங்கிய கூட்டம் 6.15 மணியளவில் நிறைவடைந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பேட்டி தருமாறு நிருபர்கள் அழைத்தனர். அதற்கு அவர், அண்ணன்(ஓ.பன்னீர்செல்வம்) வந்து தருவார் என்று கூறிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியே வந்தார். அப்போது அவர் திங்கட்கிழமை உங்களை(பத்திரிகையாளர்கள்) அழைத்து பேசுகிறேன் என்று தெரிவித்தார்.

    பின்னர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரம் குறித்து கூறியதாவது:-

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளான வருகிற 24-ந்தேதி ஏழை மக்கள் இருக்கும் இடத்துக்கு தேடிச்சென்று அறுசுவை உணவு, இலவச சீருடை, ஆதரவற்றோர்-முதியோர் இல்லங்களில் உணவு போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    பாராளுமன்றத் தேர்தல் பணிகள், ஏற்கனவே முடுக்கிவிடப்பட்ட நிலையில், ஜெயலலிதாவின் எண்ணமான ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’ எனும் இலக்கை அடைய, அரசின் திட்டங்களை குக்கிராமங்களுக்கும் கொண்டு செல்லும் வகையில் மக்களோடு இருந்து பணியாற்ற வேண்டும். பூத் கமிட்டிகள் அமைத்து, எதிர் வரும் தேர்தலில் அ.தி.மு.க. இமாலய வெற்றி பெறும் வகையில் பணிகள் அமையவேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.



    இவ்வாறு அவர் பேசினார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- இன்றைய கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஏதாவது பேசப்பட்டதா?

    பதில்:- பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன், கூட்டணி குறித்து முறையான அறிவிப்பை அ.தி.மு.க. வெளியிடும். இன்றைய கூட்டத்தில் அதுகுறித்து விவாதிக்கப்படவில்லை.

    தேர்தல் தேதி அறிவித்தவுடன் யாருடன், யார் கூட்டணி? என்பது தெரியும். எதிரியாக உள்ள தி.மு.க., முதுகில் குத்திய துரோகியான அ.ம.மு.க. தவிர, அ.தி.மு.க. தலைமையில் யார் வந்தாலும், தொகுதி பங்கீடு பேசி, முடிவுகள் வெளியாகும். இன்றைய நிலையில் கூட்டணி முடிவாகவில்லை. அ.தி.மு.க. தலைமையில் அமையும் கூட்டணி மெகா கூட்டணியாகத்தான் இருக்கும்.

    கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணிக்கு இதுவரை எந்தெந்த கட்சிகள் முன்வந்திருக்கின்றன?

    பதில்:- பலர் எங்களுடன் கூட்டணி சேர தயாராக உள்ளனர். தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட அ.தி.மு.க.வுடன் வருவதற்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர். அதையெல்லாம் இப்போது சொல்ல முடியாது. அது ரகசியம்.

    கேள்வி:- ‘அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உறுதி’, என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளாரே?

    பதில்:- அவருக்கு ஏன் பேதியா கிறது? என்று தெரியவில்லை.

    கேள்வி- தமிழக பட்ஜெட் ஒரு உதவாக்கரை பட்ஜெட் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாரே?

    பதில்:- பொதுவாகவே அறிவியலாளர்கள், அறிவுப்பூர்வமாக யோசிப்பவர்கள், அரசியல் ஞானம் உள்ளவர்கள் இந்த 3 தகுதியும் உடையவர்கள் நிச்சயமாக, ‘இந்த பட்ஜெட் நாட்டுக்கு உதவும் நல்ல பட்ஜெட்’, ‘ஏழை மக்களுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட்’ என்று பாராட்டுவார்கள். இந்த மூன்று தகுதிகளுமே மு.க.ஸ்டாலினுக்கு இல்லை.

    மேற்கண்டவாறு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். #MinisterJayakumar #ADMK
    Next Story
    ×