search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் - கமல்ஹாசன்
    X

    விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் - கமல்ஹாசன்

    விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் ஊழலை எதிர்ப்பது என்பது நல்ல பாணிதான் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறி உள்ளார். #KamalHaasan #MakkalNeethiMaiyam
    சென்னை:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதற்கான ஆதாரங்களை படித்து விட்டு மக்களிடத்திலும் சென்று அவர்களிடம் கலந்து பேசியதினால் மக்கள் நீதிமய்யம் தங்கள் கருத்தை முன்வைக்கிறது.

    அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் நாங்கள் வேண்டுவது ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான் இது தொழில் துறை முன்னேற்றத்துக்கு எதிரானது அல்ல மக்களுக்கு உயிர்ச் சேதம் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு சேதம் இல்லாமல் தொழிற்சாலைகள் வர வேண்டும்.

    இப்போது விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கும் 8 லட்சம் டன் என்பதால் உலகத்தில் சட்டதிட்டங்களை மீறிய முதல் காப்பர் ஆலையாக இது இருக்கும். இந்த ஆலை தமிழகத்தில் இருந்து விடக்கூடாது என்பது தான் எனது வேண்டுகோள் முன்னேற்றத்தை என்றும் மக்கள் நீதி மய்யம் வரவேற்கிறது.

    ஆனால் அது மக்களுக்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும். தனி வியாபாரியின் முன்னேற்றமாக இருக்கக் கூடாது. அது தொடர்பான மனுவை அரசு செயலாளரிடம் மக்கள் நீதி மய்யக் கட்சி நிர்வாகிகள் கொடுக்க உள்ளனர்.

    பெட்ரோல் விலையை தினம் தினம் என நிறைய நாட்கள் ஏற்றிவிட்டு கொஞ்சமாக குறைத்திருப்பதற்கு பெயர் குறைப்பது அல்ல ஏறித்தான் இருக்கிறது என்பதுதான் அதற்கான அர்த்தம். பெட்ரோல் விலை குறைக்கப்பட வேண்டும். வாகனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் இது பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விலை ஏற்றம்.



    விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் ஊழலை எதிர்ப்பது என்பது நல்ல பாணிதான். அவர் சொன்னது போல் ஊழலுக்கு எதிரானது என்பதை அவர் ஊர்ஜிதப்படுத்தி விட்டாரேயானால் கண்டிப்பாக என்னுடைய சகோதர மனப்பான்மையுடையவர் அவர். அவரை வரவேற்கிறோம்.

    இப்போது 6000 கிராம சபைகளை தொட்டுக் கொண்டிருக்கிறோம். 12500-க்கும் மேல் கிராம சபைகள் உள்ளன. அதை தொட்டு விட்டால் அனைவருக்கும் தெரியக் கூடிய மாற்றங்களை நாம் பார்க்க முடியும். பாராளுமன்றம், சட்டமன்றத்துக்கு இணையான பலம் கிராம சபைக்கு உண்டு என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு யாரிடம் ஒப்புதல் வாங்கினார்கள். மக்கள் இருக்கும் இடத்தில் மக்களுக்கு பாதிப்பு இருக்கும் போது அவர்களிடம் தான் பேச வேண்டும். எங்கேயோ ஒரு அலுவலகத்தில் பேப்பரை நகர்த்திவிட்டால் அது தமிழகத்துக்கான முன்னேற்றமாக இருக்காது.

    எங்களுக்கு பூத் கமிட்டி இல்லை என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் எங்களின் பூத் கமிட்டி இயங்கும் போது தெரியும். நாங்கள் ரொம்ப அழுத்தமாக, படிப்படியாக எப்படி செய்ய வேண்டுமோ அதை நியாயமாக செய்து கொண்டிருக்கிறோம். இதை பணம் கொடுத்து செய்ய நாங்கள் முயலவில்லை. எல்லாவற்றையுமே உழைப்பால், வியர்வை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கான வேலை அழுத்தமாக நடந்து கொண்டிருக்கிறது.

    கன மழைக்கு முன்பு எடுத்தது போல இல்லாமல் தற்போது நல்ல படியான நடவடிக்கையை எடுக்க வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeethiMaiyam

    Next Story
    ×