search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது- டாக்டர் ராமதாஸ் பேட்டி
    X

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது- டாக்டர் ராமதாஸ் பேட்டி

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி உள்ளார். #drramadoss #Sterliteplant

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருக உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும். இவர்களின் விடுதலை குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 11 நாட்கள் ஆகியும் இதுகுறித்து கவர்னர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. அக்டோபர் 2-ந் தேதி காந்தி பிறந்தநாளில் 7 பேர் விடுதலை குறித்த நல்ல முடிவை கவர்னர் எடுக்க வேண்டும்.

    பெட்ரோல், டீசல்விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த 30 நாட்களில் 31 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் பெட்ரோல், டீசல்விலை குறைக்கப்பட்டுள்ளது. அதைப்போல் தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக்கூடாது. ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு புற்றுநோய் ஏற்பட்டது என கூறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தை தொடர்ந்து மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கூடாது.

    தமிழக அரசு எந்த ஒரு நல்ல திட்டத்தையும் இதுவரை செயல்படுத்தவில்லை. ஊழல் தான் பெருகி உள்ளது. ஒரு மாநிலம் வளர்ச்சிபெற வேண்டும் என்றால் கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் இந்த 3 துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆனால் இந்த 3 துறைகளுமே தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    அரசு பள்ளிகளில் போதிய அடிப்படை வசதி இல்லை. மாணவர்களின் எண்ணிக்கையை அதிகபடுத்த வேண்டும். ஆனால் 3 ஆயிரம் பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. இதை கண்டித்து பா.ம.க. சார்பில் மிகபெரிய போராட்டம் நடத்தப்படும்.

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து 3-வது நீதிபதி சத்யநாராயணன் அடுத்த வாரம் தீர்ப்பு அளிக்க உள்ளார். அந்த தீர்ப்பு எப்படியும் அரசுக்கு எதிராகத்தான் இருக்கும். தீர்ப்பு வந்தஉடன் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிட வேண்டும். அரசை காப்பாற்ற கவர்னர் முயற்சி செய்யக்கூடாது.

    2016-17-ல் தமிழக அரசின் ஊழல்குறித்து கவர்னரிடம் புகார் அளித்தோம். ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை. 2018 ஜனவரி முதல் செப்டம்பர் 15 வரையிலான தமிழக அரசின் ஊழல் குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளேன். மீண்டும் கவர்னரிடம் ஊழல் பற்றி புகார் அளிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #drramadoss #Sterliteplant 

    Next Story
    ×