search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் பக்கம் வர கமல் சிக்னல் கொடுத்துவிட்டார் - திருநாவுக்கரசர்
    X

    காங்கிரஸ் பக்கம் வர கமல் சிக்னல் கொடுத்துவிட்டார் - திருநாவுக்கரசர்

    காங்கிரஸ் பக்கம் வர கமல் சிக்னல் கொடுத்துவிட்டார் என்று திருநாவுக்கரசர் நிரூபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #kamalhassan #Thirunavukkarasar

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சென்னையில் இன்று நிரூபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்துள்ள ஊழல் வேதனையையும், மனவருத்தத்தையும் அளிக்கிறது. மாணவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறி யாக்கி இருக்கிறார்கள். இந்த சம்பவம் கல்வித்துறைக்கு ஏற்பட்டுள்ள அவமானம். இது எந்த மட்டத்தில் நடந்துள்ளது என்பதை நீதி விசாரணை மூலம் கண்டறிய வேண்டும். அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

    தமிழகத்தில் இருந்து கொள்ளைபோன சிலைகளை நேர்மையான போலீஸ் அதிகாரியான பொன்மாணிக்கவேல் கண்டுபிடித்து வரும் நிலையில் அரசியல் ரீதியாக யாரையோ காப்பாற்றுவதற்காக அவருக்கு இடையூறு கொடுப்பது நல்லதா?


    அண்ணா பல்கலைக்கழக ஊழல், அறநிலையதுறை ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்ககோரி வருகிற 10-ந்தேதி மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் நான் பங்கேற்கிறேன்.

    ராகுல்காந்தி பிறந்த நாளையொட்டி வருகிற 20-ந்தேதி வடசென்னையில் பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெறும்.

    தற்போதைய அரசியல் சூழ்நிலையில் காங்கிரசுக்கு சாதகமான நிலையே நிலவுகிறது. காங்கிரஸ் தலைமையிலான அணியோடு இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்து பா.ம.க., விடுதலை சிறுத்தைகள், தினகரன் அணியினர் கருத்துக்களை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

    தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர். நடிகர் கமல்ஹாசன் ராகுல் காந்தியை சந்தித்தது, அவர் வெளியிட்டு வரும் கருத்துக்கள் மூலம் காங்கிரஸ் அணியில் அவர் இணைவதற்கான சிக்னல் தெரிவித்துள்ளார்.

    ரஜினிகாந்த் அ.தி.மு.க. பக்கம் செல்வாரா? என்று என்னால் ஆரூடம் சொல்ல முடியாது. பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகள் இணைவதற்கான வாய்ப்பும் இல்லை. ரஜினி பா.ஜனதா பக்கம் சென்றால் தலித், சிறுபான்மையினர் உள்ளிட்ட 36 சதவீத வாக்குகளை இழப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேரன் காஜா செய்யது இப்ராகிம், திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரசில் இணைந்தார். நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், வீரபாண்டியன், சிவராஜ சேகர், ரூபி மனோகரன், முன்னாள் எம்.பி. விஸ்வநாதன், துணைத் தலைவர் தாமோதரன், கோபண்ணா, சிரஞ்சீவி, ஆகியோர் உடனிருந்தனர்.#kamalhassan #Thirunavukkarasar

    Next Story
    ×