search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும்- டி.டி.வி.தினகரன்
    X

    நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும்- டி.டி.வி.தினகரன்

    நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வரும் என்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார். #TTVDinakaran
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடிக்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    காவிரி விவகாரத்தை பொறுத்தவரை ஏற்கனவே பல ஆண்டுகளாக போராடி வரும் விவசாய சங்க தலைவர்களின் கருத்தை அறிந்து செயல்பட வேண்டும். ஆனால் விவசாயிகளின் போராட்டத்துக்கு அனுமதி தராத அரசாக தமிழக அரசு உள்ளது.

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை அறிவிக்கும் முதல்வராக செயல்பட்டார். ஆனால் ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்க இயலாது என 110 விதியின் கீழ் அறிவிக்கின்ற வினோதமான முதல்-அமைச்சரை நாம் பெற்றுள்ளோம். தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து காவிரி மேலாண்மை ஆணையத்தை முழுமையாக அமைத்து தொடர்ந்து ஒழுங்காற்று குழுவையும் ஏற்படுத்தி தண்ணீர் பெற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

    கடந்த 3-ந் தேதி அ.ம.மு.க. கட்சி அலுவலக திறப்பு விழா நடைபெற்ற அன்று வெற்றிவேல் ஜெர்மனிக்கு சென்றிருந்தார். அதன் பிறகு வந்த அவர் கட்சி அலுவலகத்துக்கும் வர தொடங்கிவிட்டார். தங்க.தமிழ்ச்செல்வன் உடல்நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை.

    நாங்கள் கட்சி அலுவலக திறப்பு விழாவை 27-ந் தேதி அன்று நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக நிகழ்ச்சியை ஒத்தி வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு 3-ந் தேதிக்கு மாற்றினோம். பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் ரீதியான அவதூறுகளை கூறிய நடிகர் எஸ்.வி.சேகருக்கு உச்ச நீதிமன்றமே ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து விட்ட நிலையில், மத்திய பா.ஜ.க. அரசுக்கு பயந்து தமிழக அரசு எஸ்.வி.சேகரை கைது செய்யவில்லை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளில் தமிழக அரசின் இயலாமையை மக்களின் கவனத்தில் இருந்து திசை திருப்ப அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு விமர்சனங்களை செய்து வருகிறார்.

    அவருக்கெல்லாம் பதில் சொல்ல விரும்பவில்லை. இன்னும் ஓராண்டில் நாடாளுமன்ற தேர்தலுடன், தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வர வாய்ப்பு உள்ளது. வருகிற தமிழக சட்டசபை தேர்தலில் சுமார் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDinakaran
    Next Story
    ×