search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஜினிகாந்த், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர மாட்டார்- திருநாவுக்கரசர்
    X

    ரஜினிகாந்த், பாரதிய ஜனதாவுடன் கூட்டணி சேர மாட்டார்- திருநாவுக்கரசர்

    நடிகர் ரஜினிகாந்த் நிச்சயமாக பாரதிய ஜனதாவுடன் கூட்டணி வைக்க மாட்டார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். #Rajinikanth #Thirunavukkarasar
    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் செயல்வீரர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், எச்.வசந்தகுமார், விஜயதரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-

    ‘ஒக்கி‘ புயல் பாதிப்பு ஏற்பட்டபோது குமரி மாவட்டத்துக்கு முதலில் வந்து மக்களை சந்தித்து ஆறுதல் கூறியது ராகுல்காந்தி தான். அதன்பின்னரே பிரதமர் மோடி வந்தார். அகில இந்திய அளவில் மாநில கட்சிகள் பல உள்ளன. ஆனால், பா.ஜனதா கட்சியை விரட்டக்கூடிய அளவுக்கு சக்தி படைத்த ஒரே தேசிய கட்சி காங்கிரஸ் கட்சி தான். நாடாளுமன்ற தேர்தலில் 3-வது அணி என்பது ஒரு மாயை. அந்த அணி உருவாகவே இல்லை. மோடி ஆட்சி, பணக்காரர்களின் நலனுக்காக நடத்தப்படும் ஆட்சி. கிறிஸ்தவர்கள், தலித்கள் தாக்கப்படுகின்றனர்.


    மத சார்பற்ற அரசு என்று கூறிக்கொண்டு ஆட்சி நடத்தும் மத்திய பா.ஜனதா அரசு, இந்து வெறியை புகுத்தி மக்களை துண்டாடுகிறது. அவர்களை பிளவுபடுத்துகிறது. அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி தான். மத்திய அரசு மாற்றப்பட வேண்டும். அதுபோல் தமிழ்நாட்டிலும் அரசு மாற்றப்பட வேண்டும். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அந்த நாளே தமிழக அரசு கோமா நிலைக்கு சென்றுவிட்டது.

    மோடியும், அமித்ஷாவும் தமிழ்நாட்டில் தலையாட்டி பொம்மை விளையாட்டு காட்டி வருகிறார்கள். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் ஆகியோரை தலையாட்டி பொம்மை என நினைத்து தமிழகத்தை ஆட்டி படைக்கிறார்கள். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களுக்கு எல்லாம் தற்போது தமிழக அரசு அனுமதி அளிக்கிறது. இதை பற்றி கேட்டால் மத்திய அரசுக்கு இணக்கமாக செயல்படுகிறோம் என பதில் கூறுகின்றனர். இது இணக்கமாக செயல்படுவதற்கு அல்ல. மத்திய அரசுடன் சேர்ந்து ஊழல் செய்வதற்கும், அரசை தக்கவைத்து கொள்வதற்கும் ஆகும்.

    அ.தி.மு.க.பிளவுபட்டு கிடக்கிறது. எனவே, தேர்தல் வந்தால் தான் யாருக்கு எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும் என்பது தெரியும். தமிழகத்தில் 2-வது பெரிய கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.


    முன்னதாக திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறுகையில் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். அதனால் தான் மோடி, ராகுல்காந்தியை கடுமையாக விமர்சித்து வருகிறார். காவிரி பிரச்சினையில் கட்சி ரீதியாக பேசி முடிவு எடுக்க முடியாது. சுப்ரீம் கோர்ட்டு மூலமே தீர்வு காண முடியும். நடிகர் ரஜினிகாந்த்தை எனக்கு நன்றாக தெரியும். அவர் நிச்சயமாக பாரதிய ஜனதாவுடன் கூட்டணிக்கு செல்ல மாட்டார். கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்றார்.  #Rajinikanth #Thirunavukkarasar
    Next Story
    ×