search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூரில் கட்டுமான கடையில் பயங்கர தீ விபத்து- பொருட்கள் எரிந்து நாசம்
    X

    ஓசூரில் கட்டுமான கடையில் பயங்கர தீ விபத்து- பொருட்கள் எரிந்து நாசம்

    ஓசூரில் கட்டுமான கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், ரிங் ரோடு அருகே வட மாநிலத்தை சேர்ந்த ராம்தேவ் என்பவர் ஹார்டுவேர் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் நேற்று இரவு 10 மணி அளவில் வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு 11 மணி அளவில் அவரது கடையில் இருந்து திடீரென தீப்பிடித்து புகை குபு குபு வென வெளியே வந்தது.

    இதனை கண்டு பொதுமக்கள் உடனடியாக ஓசூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதற்குள் தீ கடை முழுவதும் பரவி கொளுந்து விட்டு எரிந்தது.

    இதையடுத்து வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் இருந்த தண்ணீரை குழாய் மூலம் கொண்டு வந்து கடையின் நாலாபுறமும் பீய்ச்சி அடித்தார்கள். இதனை தொடர்ந்து முன்பக்க கதவை உடைத்து உள்ளே வைத்திருந்த பொருட்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. இதனால் தீ மெல்ல மெல்ல அணைந்தது.

    இவ்வாறு வீரர்கள் பல மணி நேரம் போராடி அக்கம் பக்கத்தில் பரலாமல் தீயை அணைத்தனர். இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிகிறது.

    இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×