search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர மார்ச் 1-ந்தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் பெறப்படுகிறது
    X

    அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர மார்ச் 1-ந்தேதி முதல் விண்ணப்ப படிவங்கள் பெறப்படுகிறது

    அ.தி.மு.க.வில் உறுப்பினராக சேர மார்ச் 1-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை விண்ணப்ப படிவங்கள் பெறப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.
    சென்னை:

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான விண்ணப்பப் படிவங்கள் கடந்த 29.1.2018 முதல் தலைமைக் கழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.

    கழக நிறுவனத் தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தலைவர்களால் வளர்க்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கமான, அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டி ஏராளமான பொது மக்களும்; கழகத்தில் உறுப்பினராக இருந்து, கழகப் பணிகளையும் மக்கள் பணிகளையும் ஆற்றுவதே தங்களுக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகக் கருதி, தங்களின் உறுப்பினர் பதிவை புதுப்பித்துக்கொள்வதற்காக பெருவாரியான கழக உடன் பிறப்புகளும், விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுச் சென்ற வண்ணம் உள்ளனர்.

    உறுப்பினர் உரிமைச் சீட்டு வேண்டி விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுச் சென்றுள்ளவர்கள், அதில் கேட்கப்பட்டுள்ள முழு விபரங்களையும் தமிழில் கொட்டை எழுத்துக்களில் தெளிவாகப் பூர்த்தி செய்து, உறுப்பினராக சேருவோர் ஒவ்வொருவரும் கையொப்பமிட வேண்டிய இடத்தில், அவர்களுடைய கையொப்பத்தை கண்டிப்பாகப் பெற வேண்டும்.

    இவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களின் பின் பக்கத்தில், சம்பந்தப்பட்ட,

    கிளைக் கழகத்திற்கு, கிளைக் கழகச் செயலாளர் அல்லது ஒன்றியக் கழகச் செயலாளர்;

    நகர வார்டு கழகத்திற்கு, வார்டு கழகச் செயலாளர் அல்லது நகரக் கழகச் செயலாளர்;

    பேரூராட்சி வார்டு கழகத்திற்கு, வார்டு கழகச் செயலாளர் அல்லது பேரூராட்சிக் கழகச் செயலாளர்;

    மாநகராட்சி வட்டக் கழகத்திற்கு, வட்டக் கழகச் செயலாளர் அல்லது பகுதிக் கழகச் செயலாளர்;

    சம்பந்தப்பட்ட இடங்களுக்கு உட்பட்ட தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்,

    ஆகிய யாரேனும் ஒருவரின் கையொப்பத்தை அவசியம் பெற வேண்டும். அதன் பிறகு,

    இவ்வாறான விண்ணப்பப் படிவங்களை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர் ஆய்வு செய்து, மாவட்டக் கழகத்தின் முத்திரையிட்டு, கையொப்பமிட வேண்டும்.

    மேற்கண்டவாறு பொறுப்பாளர்களின் கையொப்பத்தோடு கூடிய, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மட்டுமே, கீழே நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத் தொகையுடன், வருகின்ற 1.3.2018 முதல் 31.3.2018 வரை தலைமைக் கழகத்தில் பெறப்படும். இந்தத் தேதிகளில் பெறப்படும் விண்ணப்பப் படிவங்களுக்கு மட்டுமே உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும்.

    தமிழ்நாடு-உறுப்பினர் ஒருவரின் உரிமைச் சீட்டிற்கு ரூ.10, 25 பேர் அடங்கிய ஒரு உறுப்பினர் படிவத்திற்கு ரூ.250.

    பிற மாநிலங்கள்- உறுப்பினர் ஒருவரின் உரிமைச் சீட்டிற்கு ரூ.5, 25 பேர் அடங்கிய ஒரு உறுப்பினர் படிவத்திற்கு ரூ.125.

    பூர்த்தி செய்யப்பட்டு தலைமைக் கழகத்தால் திரும்பப் பெறப்படும் விண்ணப்பப் படிவங்களுக்கான உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

    கழக உறுப்பினர்களின் பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இப்பணியில், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் கழக நிர்வாகிகளும், புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Tamilnews
    Next Story
    ×