search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: தினகரன் கண்டனம்
    X

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: தினகரன் கண்டனம்

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தினகரன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தினகரன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும் இறுதி பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட்டின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பொய்யாக்கும் விதமாக இந்த பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்துள்ளார்.

    கடந்த ஆண்டு பட்ஜெட்டில் தேசிய சுகாதாரத்திட்டம் என்று ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் என்று ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் என்ன ஆனது என்றே இதுவரை தெரியவில்லை.

    ஆண்டுக்கு 8 சதவிகித வளர்ச்சியை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது என்று அறிவித்துள்ளார் நிதி அமைச்சர். ஆனால் பண மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டது முதலாகவே பல சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளன. அமைப்பு சாரா தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் வேலை இழந்துள்ளனர். புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. ஏற்றுமதி மந்தமாகி உள்ளது. விவசாயம் தேக்க நிலையை அடைந்துள்ளது.

    இந்த தொடர் விளைவுகளால், பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் 8 சதவிகித வளர்ச்சி என்று நிதியமைச்சர் கூறுவதை, கருப்புப் பணத்தை வெளிநாட்டிலிருந்து மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சத்தை போடுவோம் என்று பிரதமர் மோடி முன்பு சொன்ன அதே போலி வாக்குறுதியாகவே பார்க்க முடிகிறது.

    விவசாய உற்பத்திப் பொருட்களுக்கான அடிப்படை விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயத் துறை எவ்வித வளர்ச்சியும் இன்றி, தேக்க நிலையில் உள்ளதை பொருளாதார ஆய்வறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

    இந்த நிலையில், விவசாய விளை பொருட்களுக்கான ஆதார விலையை உயர்த்துவதும், அதற்கான மின் சந்தைகளை உருவாக்குவதும் எந்த வகையில் விவசாயத் துறைக்கு உதவப் போகிறது என்பது தெரியவில்லை.

    நதிநீர் இணைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, பா.ஜனதா தலைவர்கள் தொடர்ந்து பேசி வந்தனர். ஆனால் இந்த நதிநீர் இணைப்பு குறித்து பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இல்லை.

    தமிழகத்துக்காக எந்த புதிய ரெயில்களும் அறிவிக்கப்படவில்லை. மொத்தத்தில் இந்த பட்ஜெட் சாமானிய மக்களுக்கு எந்த வகையிலும் பயன்தராமல், கார்ப்பரேட்டுகளின் நலனுக்கான பட்ஜெட்டாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு, எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #tamilnews
    Next Story
    ×