search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மக்கள் நீதி மய்யம் வேட்பாளருக்கு கொரோனா

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
    சென்னை:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ்பாபு. எம்.பி.பி.எஸ். டாக்டரான இவர், ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று 1995-ம் ஆண்டு செப்டம்பர் 5-ந்தேதி தமிழக அரசுப் பணியில் சேர்ந்தார். 25 ஆண்டுகள் பல்வேறு துறைகளில் பணியாற்றியதுடன், முதன்மை செயலாளர் வரை பதவி உயர்வு பெற்றார்.

    தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராகவும், தமிழக பைபர் நெட் கழக தலைவராகவும் சந்தோஷ்பாபு இருந்தபோது, மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்திற்கு டெண்டர் விடும் விவகாரத்தில், தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

    இதனால், ஆளுங்கட்சித் தரப்பில் அவருக்கு எதிர்ப்பு வலுத்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவர், நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்.

    நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில், வேளச்சேரி தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார். தொகுதியில் வாக்கு சேகரிப்பில் பரபரப்பாக இயங்கி வந்த சந்தோஷ்பாபு நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    மீண்டும் பிரசாரத்தை தொடங்க இருந்த நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக, அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவு வெளியிட்டுள்ளதுடன் டிஜிட்டல் முறையில் பிரசாரத்தை தொடருவேன் என்றும் கூறியுள்ளார்.

    இதனால், சந்தோஷ்பாபுவுடன் வாக்கு சேகரிக்க சென்ற மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரிடம் வேட்புமனுவை வாங்கிய தேர்தல் அதிகாரியும் அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளார்.

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு முதல் முறையாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது மற்ற கட்சி வேட்பாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
    Next Story
    ×