search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமதாஸ்
    X
    ராமதாஸ்

    அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற உழைக்க வேண்டும்- பா.ம.க.வினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்

    பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று முதலே களத்தில் இறங்கி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    வன்னியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் போராடி வருகிறேன் என்றாலும் கூட, அந்த இட ஒதுக்கீட்டை இப்போது வழங்கியது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு தான். நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு 10.50 சதவீதம் இடப்பங்கீட்டின் மூலம் அடித்தளம் அமைத்துள்ள அ.தி.மு.க.வுக்கு நாம் என்ன நன்றிக்கடன் செலுத்தப் போகிறோம்? என்பது தான் நம் முன் உள்ள வினா ஆகும். அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது தான் அந்தக் கட்சிக்கு பாட்டாளி சொந்தங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

    சென்னையில் தொடங்கி வட தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகள், மேற்கு தமிழகத்தின் அனைத்து தொகுதிகள், காவிரி பாசன மாவட்டங்களின் பெரும்பான்மையான தொகுதிகள் என தமிழ்நாட்டில் 121 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் பாட்டாளிகள் தான்.

    எனவே, ஏற்கனவே நான் குறிப்பிட்டவாறு, “வன்னியர்களுக்கு 10.50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கினார்கள். அதனால் அவர்கள் வென்றார்கள்” என்று கூறும் அளவுக்கு இந்தத் தேர்தலில் பாட்டாளி சொந்தங்கள் களப்பணி ஆற்ற வேண்டும். நம்மைப் பொறுத்தவரை நாம் வலிமையாக உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் வென்றெடுத்து தர வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை நாம் இன்றே தொடங்க வேண்டும்.

    நமது கோட்டையாக திகழும் 121 தொகுதிகளில் நமது முயற்சியால், உழைப்பால், பங்களிப்பால் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டும். இந்த 121 தொகுதிகளிலும் அ.தி.மு.க. சார்பில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் போட்டியிடலாம்; யார் வேண்டுமானாலும் வேட்பாளராக களமிறக்கப்படலாம்; அவர் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் பணிகளைத் தொடங்கலாம். பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று முதலே களத்தில் இறங்கி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்; வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இன்றே களமிறங்குங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×