search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்
  X

  மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

  தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். #DMK #MKStalin
  சென்னை:

  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  மருத்துவக் கல்வி சீர்திருத்தம் என்ற போர்வையில், மாநில உரிமைகளை மீண்டும் பறித்து அத்துமீறல் நடத்த, “தேசிய மருத்துவ ஆணையம்” எனும் ஒன்றை அமைக்கும் முயற்சியில் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு ஈடுபட்டிருப்பதற்குத் தி.மு.க.வின் சார்பில் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவுசெய்ய விரும்புகிறேன்.

  தேசிய மருத்துவக் கவுன்சிலை ஆட்டிப்படைத்து அலைக்கழித்த, “கேதன் தேசாய்” ஊழல் விவகாரத்திற்குப் பிறகு கொடுக்கப்பட்ட “ரஞ்சித் ராய் சவுத்ரி” நிபுணர் குழு அறிக்கை, அதன் பிறகு 92-வது அறிக்கையை அளித்த ராம்கோபால் யாதவ் தலைமையிலான பாராளுமன்ற நிலைக்குழு அறிக்கை ஆகியவற்றின் பரிந்துரைகள் முழு அளவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல், பிரதமர் அலுவலகக் கூடுதல் செயலாளர் தலைமையில் புதிதாக ஒரு கமிட்டியை அமைத்து, பாதி கிணறு தாண்டும் பாணியில், அதன் பரிந்துரைகளுக்கு மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு செயல் வடிவம் கொடுக்க அவசரம் காட்டுகிறது.

  ஏற்கனவே “நீட்” தேர்வு மூலம் சமூகநீதியின் குரல் வளையில் காலை வைத்து நெறித்து அழுத்திக் கொண்டிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, இப்போது “தேசிய அளவிலான பொதுத் தேர்வு” எழுதி விட்டுத்தான் மருத்துவர் தொழிலில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனையை உருவாக்குவது புதிய “லைசென்ஸ் ராஜ்” புகுத்தப்படும் ஆபத்தை உருவாக்கியிருக்கிறது. இதனால் கொந்தளித்துப் போயிருக்கும் மருத்துவர்கள் நாடு முழுவதும் அடையாள வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டிருப்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு தெளிவாக உணர வேண்டும்.

  இதன் மூலமாக, மருத்துவ மேல்படிப்பிற்கும் ஒரு “நீட் தேர்வு” இப்போது அறிமுகப்படுத்தப்படுகிறது. பிளஸ் டூ தேர்வுக்குப் பிறகு நீட் தேர்வு மற்றும் எம்.பி.பி.எஸ் பாடத்திட்டத்தை முடித்த பிறகு, மீண்டும் ஒரு தேசிய அளவிலான பொதுத்தேர்வு என்றெல்லாம் உருவாக்கி, அடித்தட்டு மக்களின் மருத்துவக் கனவுக்குத் தடுப்பணை கட்டித் தகர்ப்பதை, சமூகநீதி மீதான சம்மட்டி அடி என்றே திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. “சம வாய்ப்பு”, “சமூகநீதி” என்ற அரசியல் சட்டத்தின் நோக்கத்தையெல்லாம் அர்த்தமற்றதாக்கி, மருத்துவக் கல்விக்கும், மருத்துவர்களுக்கும், ஏழை எளிய, மக்களுக்கும் முற்றிலும் விரோதமாக இந்த தேசிய மருத்துவ ஆணைய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

  இது ஒருபுறமிருக்க, கடுமையான அபராதங்கள், ஓட்டுநர் உரிமம் பெற கல்வித் தகுதியுடன் கூடிய வரைமுறையற்ற நிபந்தனைகள் விதிப்பதுடன், மாநில உரிமைகளை மத்திய அரசே அபகரித்துக் கொள்ளும் விதத்திலும், தனியார்மயம் கார்ப்பரேட் மயப்படுத்தும் உள்நோக்கிலும், மோட்டார் வாகனத் திருத்தச் சட்ட மசோதா 2017” கொண்டு வரப்பட்டுள்ளது. விபத்துக்களை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக மாநிலங்களின் உரிமைகளை அப்பட்டமாகப் பறித்துக் கொண்டு, மத்திய அரசே அனைத்து விவகாரங்களிலும் “பெரிய அண்ணன்” மற்றும் “எஜமானர்” போல் நடந்து கொள்ள நினைப்பது மத்திய மாநில உறவுகளில் சீர்படுத்த முடியாத சேதாரத்தை உருவாக்கி விடும் என்பதை மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

  “அதிகார மனப்பான்மையுடன்” இடம்பெற்றுள்ள கெடு பிடிகளைத் தளர்த்தி, போக்குவரத்து தேசிய மயக்கொள்கையை ஊனப்படுத்தி விடாமல், ஓட்டுநர்கள் உரிமம் பெறுவதில் நியாயமாக ஏற்கக்கூடிய நிபந்தனைகளை மட்டும் விதிக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்திருத்த மசோதாவில், இன்றைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் மாற்றங்களை மட்டும் கொண்டுவந்து, மோட்டார் வாகனத் தொழிலையும், அதனையே வாழ்வாதாரமாக நம்பியிருக்கும் பல இலட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

  இந்த இரு மசோதாக்களும் மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் போது, தி.மு.க. வின் சார்பில், இத்தகைய ஆணித்தரமான கருத்துக்கள் எடுத்து வைக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

  #TamilNews
  Next Story
  ×