search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரும்: துரைமுருகன் பேட்டி
  X

  ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்திற்கு சட்டமன்ற தேர்தல் வரும்: துரைமுருகன் பேட்டி

  ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

  நாகர்கோவில்:

  குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி மற்றும் நீட் தேர்வை புகுத்தும் மத்திய அரசை கண்டித்து நாகர்கோவில் பெருமாள் திருமண மண்டபத்தில் கருத்தரங்கு நடந்தது. குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

  சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், தி.மு.க. செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., ஆகியோர் பேசினர்.

  இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் எங்கள் காலத்துக்கு பின்னரும் பத்திரமாக அடுத்த தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டும். இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் என்பது 60 ஆண்டு கால போராட்டமாகும். இதில் மற்றொன்றாக தமிழகத்தில் ‘நீட்‘ நுழைவுத்தேர்வை மத்திய அரசு புகுத்தியுள்ளது. ‘நீட்‘ தேர்வு குறித்து உண்மையை சொல்லவேண்டுமென்றால் அது தமிழக கல்வித் துறையின் சுயமரியாதையை தொட்டுப் பார்த்துள்ளது.

  தமிழகத்தில் ‘நீட்‘ நுழைவுத்தேர்வுக்கு எதிராக அவசர, அவசரமாக தமிழக அரசு ஒரு சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தது, அதை மத்திய அரசு மற்றும் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த திருத்தம் இன்று வரையில் மேற்கொள்ளப்படவில்லை. அதுகுறித்து கொதித்தெழுந்து கேட்க வேண்டிய முதல்-அமைச்சர், கல்வித்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்கள் வாய்திறந்து கூட பேசவில்லை.

  ‘நீட்‘ தேர்வு ரத்து சம்பந்தமாக பிரதமரை சந்திக்க சென்ற முதல்-அமைச்சர் உண்மையில் ‘நீட்‘ தேர்வு ரத்து குறித்துதான் பேசினாரா? அல்லது வேறு ஏதேனும் பேசினாரா? என்று தெரியவில்லை. தற்போது ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவதால் இந்தியை நிரந்தரமாக தமிழகத்தில் திணிக்க மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

  சில மொழிகள் சமஸ்கிருதத்தை ஒத்து இருக்கும். ஆனால் தமிழ் அப்படியல்ல. தமிழ் மொழி எம்மொழி சாயலும் இல்லாத தனிச்சிறப்பு வாய்ந்த மொழி. இந்தி படித்தால்தான் வேலை கிடைக்கும் என்பது உண்மையல்ல. தமிழகத்திலேயே எண்ணற்ற இடங்களில் இந்தியை தாய்மொழியாக கொண்ட வடமாநிலத்தவர்கள் பிழைப்புக்காக வந்திருப்பதை காணமுடிகிறது.

  நாடு இருந்து மொழி இல்லை என்றால் அதில் பயனில்லை. ஆனால் மொழி இருந்தால் போதும், ஒரு நாட்டை உருவாக்க முடியும். இளைஞர்களின் துணை இருக்கும் வரையில் தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிர்த்து தி.மு.க. போராடிக் கொண்டே இருக்கும்.

  இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

  முன்னதாக துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:-

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் மோடிக்கு கிடைத்த மிக சிறந்த அடிமைகள். தலைவர் கருணாநிதிக்கு எடுக்கும் வைரவிழாவை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கொச்சைப் படுத்துகிறார். ரஜினியின் அரசியல் பிரவேசம் அவரின் தனிப்பட்ட முடிவு.

  ஜனாதிபதி தேர்தல் முடிந்தவுடன் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும்.எனது ஆரூடம் பொய்க்காது. ஸ்டாலின் கருணாநிதியை போன்று திறமையாக செயல்படுகிறார்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  Next Story
  ×