என் மலர்
தெலுங்கானா
- போற்றோரை புறக்கணிக்கும் ஊழியர்கள் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் பிடித்தம்.
- அது பெற்றோர்கள் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
குரூப்-II தேர்வில் வெற்றி பெற்று தேர்வானவர்களுக்கு, தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நியமனக் கடிதம் வழங்கினார்.
பின்னர் அவர்கள் மத்தியில் பேசும்போது கூறியதாவது:-
பிரச்சனைகளுடன் வரும் மக்களை, கனிவுடன் அணுக வேண்டும். நாங்கள் புதிய சட்டம் கொண்டு வர இருக்கிறோம். அரசு பணியார்கள் அவர்களுடைய பெற்றோரை புறக்கணித்தால், அவர்களுடைய சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். இது பெற்றோர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். நீங்கள்தான் சட்டத்திற்கான வரைவை உருவாக்குவீர்கள். நீங்கள் மாதச் சம்பளம் பெறும்போது, உங்களுடைய பெற்றோர்களும், அதில் இருந்து மாதச் சம்பளம் பெறுவார்கள் என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தலைமைச் செயலாளரிடம் இது தொடர்பாக சட்ட வரைவு உருவாக்க கமிட்டி உருவாக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
- ரஹமானை போலீசார் ஜெயிலில் அடைத்த பிறகு மேலும் 11 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர்.
- விடுதியில் தங்கி படித்து விட்டு சென்ற மாணவிகளை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த சைதாபத்தில் மாணவிகள் விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் தங்கி இருந்து மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
ரஹமான் என்பவர் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக விடுதியில் தங்கியுள்ள மாணவிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இவரது அட்டூழியம் தினமும் நீடித்தது.
இதனால் 3 மாணவிகள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விடுதிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் ரஹமான் மாணவிகளை பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் 5 போக்சோ வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து சஞ்சல்குடா ஜெயிலில் அடைத்தனர்.
ரஹமானை போலீசார் ஜெயிலில் அடைத்த பிறகு மேலும் 11 மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இதனால் போலீசார் மற்றும் குழந்தைகள் நல அலுவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் விடுதிக்கு சென்று அங்கு தங்கி உள்ள மாணவிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது காவலாளி மிரட்டி பலாத்காரம் செய்ததாக சில மாணவிகள் தெரிவித்தனர். அவர்கள் கூறியதை கேட்டு போலீசார் மற்றும் அதிகாரிகள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.
காவலாளி ரஹமான் மேலும் சில மாணவிகளை மிரட்டி பலாத்காரம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஏற்கனவே விடுதியில் தங்கி படித்து விட்டு சென்ற மாணவிகளை வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விடுதி நிர்வாகிகளுக்கு இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தினர்.
அதிக அளவில் பாலியல் புகார்கள் வந்ததால் போலீசார் ரஹ்மானை காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.
- காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.
தெலங்கானாவில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாநிலம் முழுவதும் இன்று பந்த் தொடங்கியது. இந்த பந்த் நடவடிக்கைக்கு ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பந்த் நடவடிக்கையால் தெலுங்கானாவின் பல மாவட்டங்களில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன.
உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 42% இடஒதுக்கீடு கொடுப்பதாக அறிவித்த தேர்தல் வாக்குறுதியாக நிறைவேற்றுவதாக ஆளும் காங்கிரஸ் அரசு கடந்த செப்டம்பர் 26ம் தேதி அரசாணை வெளியிட்டது.
தெலுங்கானா அரசின் அரசாணைக்கு அக்டோபர் 9ம் தேதி தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால் அந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
- பயந்து போன இருவரும் பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.
- சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த சைதாபாத்தை சேர்ந்தவர் 8 வயது சிறுமி. இவரது பெற்றோர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
சிறுமியும், அவரது 7 வயது சகோதரனும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்றனர். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பினர். பெற்றோர் வேலைக்கு சென்றதால் சிறுமி தனது சகோதரருடன் வீட்டில் இருந்தார். சிறுமி தனியாக இருப்பதை அதே பகுதியை சேர்ந்த 23 வயது வாலிபர் கவனித்தார்.
கஞ்சா போதையில் இருந்த வாலிபர் சிறுமியின் வீட்டிற்கு வந்து சிறுமியை சரமாரியாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் இது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தால் சிறுமியையும், அவரது சகோதரனையும் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றார். இதனால் பயந்து போன இருவரும் இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லாமல் அமைதி காத்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது தனக்கு நடந்த கொடுமை குறித்து தெரிவித்தார். சிறுமியின் பெற்றோர் சைதாபாத் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- டவுன் பஸ்களின் பயணக் கட்டணம் கடந்த திங்கட்கிழமை முதல் கணிசமாக உயர்த்தப்பட்டது.
- சாலைப் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் நிர்வாக மேலாளரிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர்.
ஐதராபாத்:
தெலங்கானா மாநிலத்தில் சுமார் 2,800 டீசல் பஸ்களை மின்சார பஸ்களாக மாற்றுவதற்கு நிதி திரட்டும் நோக்கில் 'பசுமை வரி' விதிக்கப்படுவதாக தெலங்கானா போக்குவரத்துக் கழகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, டவுன் பஸ்களின் பயணக் கட்டணம் கடந்த திங்கட்கிழமை முதல் கணிசமாக உயர்த்தப்பட்டது.
இந்த பஸ் டிக்கெட் கட்டண உயர்வை கண்டித்து, சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணி நடத்தப்படும் என்று எதிர்க்கட்சியான பாரதிய ராஷ்டிரிய சமிதி அறிவித்திருந்தது.
பாரதிய ராஷ்டிரிய சமிதியின் செயல் தலைவர் சந்திரசேகரராவின் மகன் கே.டி. ராமா ராவ், முன்னாள் அமைச்சர் ஹரீஷ் ராவ் உள்ளிட்டோர் ரெதிஃபைல் பஸ் நிறுத்தத்தில் இருந்து சாலைப் போக்குவரத்துக் கழகம் வரை பஸ்சில் பயணிக்கும் வகையில் போராட்டம் திட்டமிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, சாலைப் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் நிர்வாக மேலாளரிடம் மனு அளிக்க முடிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில், ஐதராபாத் மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர். கச்சிபவுலியில் உள்ள இல்லத்தில் கே.டி. ராமா ராவ், கோகபேட்டில் உள்ள இல்லத்தில் ஹரீஷ் ராவையும் காவல்துறையினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
மேலும், முன்னாள் அமைச்சர் பி. சபிதா இந்திரா ரெட்டி, குத்புல்லாபூர் எம்எல்ஏ விவேகானந்த கவுட், எம்எல்சி ஷம்பிர்பூர் ராஜு உள்ளிட்டோரும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- BC-க்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இரண்டு மசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
- ஜனாதிபதி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் ரேவந்த் ரெட்டி தலைமயிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் BC-க்கு (பிற்படுத்தப்பட்டோர்) 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இரண்டு மசோதாக்களை நிறைவேற்றியது.
இந்த மசோதாக்கல் கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஜனாதிபதி இன்னும் ஒப்புதல் வழங்காமல் உள்ளார்.
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, டெல்லி ஜந்தர் மந்தரில் ரேவந்த் ரெட்டி கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி போராட்டம் நடத்தினா்.
பாஜக தலைமையிலான மத்திய அரசு, இது ஓபிசி-க்கு எதிரான மசோதா என குற்றம்சாட்டியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக BC-க்கு 42 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. முன்னதாக 23 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளது.
- ஊரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
- பிள்ளைகளின் மனம் மாறும் வரை இந்த நூதன தண்டனை அளிப்பார்கள்.
பரபரப்பான தற்போதைய காலகட்டத்தில் வயதான பெற்றோரை பெரும்பாலான பிள்ளைகள் கவனிப்பதில்லை. அவர்களது சொத்துகளை மட்டும் எழுதி வாங்கிவிட்டு அவர்களை வீதிக்கு அடித்து விரட்டும் சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நூதன முறையில் தண்டனை வழங்க வந்திருக்கிறது தாத்தாக்கள் சங்கம்.
தெலுங்கானா மாநிலம் காமாரெட்டி மாவட்டம் மோதே கிராமத்தில்தான் இந்த தாத்தாக்கள் சங்கம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பிள்ளைகள் யாராவது வயதான பெற்றோரை கவனிக்காமலோ துன்புறுத்துவதாகவோ தகவல் தெரிந்தால் இவர்கள் தண்டிக்கும் விதம் புதுமையாக இருக்கும்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்த கிராமத்தை சேர்ந்த பல பெற்றோரின் சொத்துகளை பறித்துக்கொண்டு பல பிள்ளைகள் அவர்களை விரட்டி விட்டனர். இதனை தடுப்பதற்காகவே தாத்தாக்கள் சங்கம் உருவாக்கப்பட்டது.
கடந்த 2010-ம் அப்போதைய அந்த கிராம பஞ்சாயத்து தலைவர் கட்டம் ராஜி ரெட்டி ஊர் பெரியவர்களுடன் சேர்ந்து இந்த சங்கத்தை ஏற்பாடு செய்தார். அது மட்டுமின்றி இந்த சங்கத்தை பதிவு செய்தும் வைத்திருக்கிறார். இதில் ஊரில் உள்ள 40-க்கும் மேற்பட்ட முதியவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இந்த ஊரில் பெற்றோரை அவரது மகன் அல்லது மகள் சரியாக கவனித்துக்கொள்ளாவிட்டால் தாத்தாக்கள் சங்கம் வெளியே சென்று புகார் செய்ய வாய்ப்பு அளிக்காது. அதே சமயம் வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்காது. உடனடியாக அந்த மகன் அல்லது மகளை தாத்தாக்கள் சங்க உறுப்பினர்கள் அழைத்து எடுத்து சொல்கிறார்கள். அப்போதும் கேட்காவிட்டால் கடுமையாக எச்சரிக்கிறார்கள்.
அதற்கு மேலும் முரண்டுபிடித்தால் 40 உறுப்பினர்களும், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டின் முன்பு வைத்து சமைத்து, பாதிக்கப்பட்ட வயதான பெற்றோருக்கு சாப்பாடு கொடுக்கிறார்கள்.
பிள்ளைகளின் மனம் மாறும் வரை இந்த நூதன தண்டனை அளிப்பார்கள். வீட்டு முன்னேயே சென்று 40 பேரும் சமைத்து அவர்களும் சாப்பிட்டு பராமரிக்காத பெற்றோருக்கும் சாப்பாடு வழங்குகிறார்கள். அவர்களின் பிள்ளைகள் மனம் மாறும்வரை அவர்கள் வீட்டின்முன் சமைத்து பெற்றோருக்கு கொடுத்து தங்கள் எதிர்ப்பை இந்த விதமாக தெரிவிக்கிறார்கள்.
இத்துடன் பிள்ளைகள் தாத்தாக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இனி தங்கள் பெற்றோரை நல்லபடியாக பார்த்துக்கொள்வதாக உறுதி பத்திரம் எழுதி தருகிறார்கள்.
- உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டினர்.
- மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் டிஜிட்டல் கைது மோசடிக்கு ஆளான ஓய்வுபெற்ற மருத்துவர் மாரடைப்பால் இறந்தார். அவருக்கு வயது 76.
செப்டம்பர் 6 ஆம் தேதி மருத்துவருக்கு ஒரு வாட்ஸ்அப் அழைப்பு வந்தது. மோசடி செய்பவர்கள் மருத்துவர் மனித கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, பெங்களூரு காவல்துறையின் லோகோவைக் காட்டி அவரை மோசடிக்காரர்கள் நம்ப வைத்துள்ளனர்.
பின்னர், உச்ச நீதிமன்றம், அமலாக்கத்துறை மற்றும் ரிசர்வ் வங்கியின் லோகோக்கள் கொண்ட போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மிரட்டிய மோசடி செய்பவர்கள் அவரது ஓய்வூதியக் கணக்கிலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள ஒரு ஷெல் கணக்கிற்கு ரூ.6.6 லட்சத்தை மாற்றும்படி கட்டாயப்படுத்தினர்.
பணம் செலுத்தப்பட்ட பிறகும், வீடியோ அழைப்புகள் மற்றும் போலி நீதிமன்ற அறிவிப்புகள் மூலம் மிரட்டல் தொடர்ந்தது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து அழுத்தத்திற்கு ஆளான அவர் ஒரு கட்டத்தில் அவர் மாரடைப்பால் மயங்கி விழுந்து உயிரிழந்தார். மருத்துவரின் மரணத்திற்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் தொடர்ந்து மிரட்டல் செய்திகளை அனுப்பி வந்தனர்.
குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஐடி சட்டத்தின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
- புகாரின் பேரில் அம்பேத்கரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், பினாமிகள் வீடுகளில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத், மாதப்பூர், காணாமேட்டில் உள்ள மேக்னஸ் லேக் வியூ குடியிருப்பை சேர்ந்தவர் அம்பேத்கர்.
இவர் மின்சார வாரியத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவர் அடுக்குமாடி குடியிருப்புகள் தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்பு வழங்க காலதாமதப்படுத்தி வந்தார்.
இதனால் மின் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அம்பேத்கருக்கு கோடிக்கணக்காண ரூபாயை லஞ்சமாக கொடுத்து மின் இணைப்பு பெற்றனர்.
அம்பேத்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
புகாரின் பேரில் அம்பேத்கரின் வீடு, அலுவலகங்கள், உறவினர்கள், பினாமிகள் வீடுகளில் நேற்று ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
சங்கரெட்டி மாவட்டம் பிரங்குடா மல்லிகாராஜன நகரில் உள்ள அம்பேத்கரின் பினாமி சதீஷ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. அம்பேத்கரின் வங்கி கணக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் மதிப்பு ரூ.150 கோடி என தெரியவந்துள்ளது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அம்பேத்கரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களுடைய விவரங்கள் பாதுகாக்கப்படும்.
- சமூக வலைதளங்களில் ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில் ஹனிடிராப் ஆப் மூலம் தற்போது பெண்களை வைத்து மயக்கி ஆபாச படம் எடுத்து பணம் பறிக்கும் நூதன மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது.
இது மட்டுமின்றி வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் இளம்பெண்களை வைத்து இந்த கும்பல் வசதி படைத்த திருமணமான ஆண்களுக்கு வலை வீசுகின்றனர்.
சபல புத்தியால் ஏமாறும் ஆண்களை இளம்பெண்கள் ஓட்டல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். அங்கு நெருக்கமாக அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே மறைமுகமாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் படம் எடுக்கின்றனர்.
பின்னர் அந்த படங்களை காட்டி மிரட்டி இளம்பெண்கள் அப்பாவி போல நடித்து அழுது புலம்பி பணம் பறிக்கின்றனர். அதற்குப் பிறகு அவர்கள் இந்த ஆண்களுடன் தொடர்பை துண்டித்து விடுகின்றனர்.
செகந்திராபாத்தை சேர்ந்த யோகா குரு என்பவரை இளம்பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேச தொடங்கினார். ஒரு கட்டத்தில் யோகா குருவை ஒரு ஓட்டல் அறைக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து இருவரும் நெருக்கமாக இருந்தனர். அப்போது ரகசிய கேமரா மூலம் அதனை படம்பிடித்தனர்.
ஓட்டலில் தனிமையில் இருந்த போது யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். தனது கணவருக்கு தெரிந்தால் தன்னை கொன்று விடுவார் எனக் கூறி அந்த இளம்பெண் கதறி அழுதார். இதனை நம்பி யோகா குரு ரூ.26 லட்சம் கொடுத்தார். அதனை பறித்துக் கொண்டு இளம்பெண் தலைமறைவாகிவிட்டார்.
இதே போல அரசு ஊழியர் ஒருவர் ஹனி டிராப் டேட்டிங் ஆப்பில் இளம்பெண் ஒருவருடன் தொடர்பு கொண்டார். அந்த இளம்பெண் அவருடன் நீண்ட நாட்கள் தகவல்களை பரிமாறினார். பின்னர் இருவரும் ஒரு ஓட்டல் அறைக்கு சென்றனர்.
அங்கு வைத்து அரசு ஊழியரிடம் ரூ.20 ஆயிரம் பணத்தை பறித்துக் கொண்டு இளம்பெண் தப்பி சென்று விட்டார்.
இதேபோல பைக், கார் உள்ளிட்ட வாகனங்களில் லிப்ட் கேட்பது போலவும் இளம்பெண்கள் ஆண்களை மயக்கி அவர்களை ஓட்டல் அறைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து படம் எடுத்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்.
இதுவரை தெலுங்கானா மாநிலத்தில் 160 பேரை ஹனிடிராப் ஆப் மூலம் ஓட்டல் அறைகளுக்கு அழைத்து சென்று நிர்வாண படம் எடுத்து மிரட்டி ரூ.3 கோடி வரை பறிக்கப்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மட்டுமே புகார் அளித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அவர்களுடைய விவரங்கள் பாதுகாக்கப்படும். அதனால் தைரியமாக வந்து புகார் அளிக்க வேண்டும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஹனிடிராப், மேட்ரிமோனி டேட்டிங், ஓரினச்சேர்க்கை ஆப் மற்றும் சமூக ஊடகங்களில் சபல புத்தி கொண்டவர்கள் இணைகிறார்கள். அவர்களை கவர்ந்து இழுத்து நிர்வாணமாக வீடியோ எடுக்கிறார்கள்.
இளம்பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களும் எடுத்து பணம் பறிக்கின்றனர். சமூக வலைதளங்களில் ஆண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தியுள்ளனர்.
- கீழ் தலத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, மேல் தலத்தில் இந்த உற்பத்தி நடந்து வந்துள்ளது.
- வார நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தன.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனியார் பள்ளியில் போதைபொருள் தயாரிக்கப்பட்டு வந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மேதா என்ற பள்ளியில் பள்ளி நிர்வாகி மலேலா ஜெய பிரகாஷ் கவுட் தலைமையில், மேல் தலத்தில் உள்ள கெமிஸ்ட்ரி லேபில் Alprazolam என்ற போதைப்பொருள் தயாரிப்பு கடந்த 6 மாதங்களாக நடந்து வந்துள்ளது.
கீழ் தலத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்கள் படித்துக்கொண்டிருக்க, மேல் தலத்தில் இந்த உற்பத்தி நடந்து வந்துள்ளது.
வார நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட போதைப்பொருள்கள், பள்ளி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு விற்கப்பட்டு வந்தன.
இதுதொடர்பாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் 7 கிலோ Alprazolam, ரூ.21 லட்சம் பணம், போதைப்பொருள் தயாரிப்பாக்கான கச்சா பொருட்கள், உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. ஜெய பிரகாஷ் மற்றும் அவரின் 2 சகாக்கள் கைது செய்யப்பட்டனர்.
- கிளம்புவதற்கு முன் ரத்த கறைகளை நீக்க வீட்டின் கழிவறை ஷவரில் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.
- அவர்களில் ஒருவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அகர்வால் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளான்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கடந்த வியாழக்கிழமை அடுக்குமாடி வீட்டில் நடந்த கொலை கொள்ளை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
சைபராபாத் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் 50 வயதான ரேணு அகர்வால் ஸ்டீல் பிஸ்னஸ் செய்யும் தனது கணவர் மற்றும் 26 வயது மகனுடன் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் ரேணு அகர்வால் தனியாக இருந்தபோது இருவர் அவரை பிரஷர் குக்கரால் தலையில் அடித்து பணம் வைக்கப்பட்டுள்ள லாக்கர் பாஸ்வேர்டை கேட்டு சித்ரவதை செய்தனர்.
பின்னர் கத்தி மற்றும் கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு 40 கிராம் தங்கம், 1 லட்சம் பணத்தை திருடிச் சென்றனர். கிளம்புவதற்கு முன் ரத்த கறைகளை நீக்க வீட்டின் கழிவறை ஷவரில் இருவரும் குளித்து விட்டு சென்றுள்ளனர்.
வேலைக்கு சென்ற மகனும், கணவனும் வந்து பார்த்தபோது ரேணு அகர்வால் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
சம்பவத்தன்று 13 வது மாடியில் இருந்து இருவரும் வெளியேறும் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் அவர்களை அடையாளம் கண்டு தேடி வந்தது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் வைத்து குற்றவாளிகளை கைது செய்தனர். இருவரும் ஜார்கண்ட்டை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்களில் ஒருவன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் தான் அகர்வால் வீட்டில் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளான். அதே குடியிருப்பின் அடுத்த தலத்தில் மற்றொரு வீட்டில் வீட்டு வேலை செய்து வந்தவனுடன் சேர்ந்து இந்த கொலை கொள்ளை நிகழ்த்தப்பட்டுள்ளது.






