என் மலர்
இந்தியா

"குடிகாரர்களுக்கு ஒன்று; இரண்டு திருமணம் செய்பவர்களுக்கு ஒன்று" - இந்து கடவுள்கள் குறித்த ரேவந்த் ரெட்டியின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு
- இந்துக்கள் எத்தனை கடவுள்களை நம்புகிறார்கள்? மூன்று கோடி கடவுள்களா? ஏன் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்?
- கடவுளின் புகைப்படத்துடன் எதையாவது தேடுபவர்கள் இந்துக்கள் அல்ல, பிச்சைக்காரர்கள்.
இந்து தெய்வங்கள் குறித்து கேலியாக பேசியதாக, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ரேவந்த் ரெட்டி மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் பாஜக மற்றும் பிஆர்எஸ் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "இந்துக்கள் எத்தனை கடவுள்களை நம்புகிறார்கள்? மூன்று கோடி கடவுள்களா? ஏன் இவ்வளவு பேர் இருக்கிறார்கள்? திருமணமாகாதவர்களுக்கு ஒரு கடவுள் இருக்கிறார் - அனுமன். இரண்டு முறை திருமணம் செய்பவர்களுக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார். மது அருந்துபவர்களுக்கு இன்னொரு கடவுள் இருக்கிறார். கோழி பலிக்கு ஒன்று இருக்கிறது; பருப்பிற்கும் அரிசிக்கும் ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு கடவுள் இருக்கிறார்," எனக் கூறினார்.
ரேவந்த் ரெட்டியின் இந்த கருத்து அம்மாநில எதிர்க்கட்சியினரிடமிருந்து கண்டனங்களை பெற்றுவருகிறது. அவரின் இந்த பேச்சு இந்து நம்பிக்கைகளை அவமதித்ததாகவும், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. இதுகுறித்து பாஜக தலைவர் பிரவீன் கூறுகையில், ரெட்டியின் கருத்துக்களால் மாநிலம் முழுவதும் உள்ள இந்துக்கள் வெட்கப்படுகிறார்கள். காங்கிரசுக்கும், ரேவந்த் ரெட்டிக்கும் வெட்கமில்லை. எல்லா கூட்டங்களிலும், முஸ்லிம்களால்தான் காங்கிரஸ் உருவானது என்று கூறுகிறார்கள். முதலமைச்சர் மன்னிப்பு கேட்டு தனது கருத்துகளை திரும்பப் பெற வேண்டும்," என்று அவர் கூறினார்.
பி.ஆர்.எஸ் தலைவர் ராகேஷ் ரெட்டி அனுகுலா, இந்து தெய்வங்களை கேலி செய்வது இப்போதெல்லாம் அனைவருக்கும் ஒரு ஃபேஷனாகிவிட்டது என்றார். மேலும், கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் ரேவந்த் ரெட்டி பேசுவது துரதிர்ஷ்டவசமானது. அவர் உடனடியாக இந்துக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்து கடவுள்கள் குறித்த தனது கருத்துடன் ரேவந்த் ரெட்டி சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, பாஜகவைத் தாக்கி, "கடவுளின் புகைப்படத்துடன் எதையாவது தேடுபவர்கள் இந்துக்கள் அல்ல, பிச்சைக்காரர்கள்" என கூறியிருந்தார். "கடவுள் கோயிலில் இருக்க வேண்டும். பக்தி இதயத்தில் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் உண்மையான இந்துக்கள். பாஜக தலைவர்கள் சாலைகளில் கடவுளின் புகைப்படத்தை வைத்து வாக்கு சேகரிக்கிறார்கள்," என பேசியிருந்தார். இதற்கும் கடும் எதிர்ப்பலைகள் எழுந்தன.






