என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
- இந்த வழக்கு இன்று விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அவதூறு வழக்கு விசாரணைக்காக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜரானார்.
முன்னதாக, கடந்த 2019-ல் விக்கிரவாண்டி சட்டசபை உறுப்பினராக இருந்த ராதாமணி இறந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
அந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரகலதாவை ஆதரித்து கஞ்சனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேமூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அப்போது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சீமான் மீது காங்கிரஸ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட தலைவர் ரமேஷ் விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விக்கிரவாண்டியில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணைக்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜரானார்.
- தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
- ரூ.4 லட்சம் மதிப்பிலான தீக்குச்சி மூடைகள் எரிந்து சாம்பலானது.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் புதுமனை 4-வது தெருவில் நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இந்த தொழிற்சாலையில் மருந்து தடவிய தீக்குச்சிகள் அங்குள்ள குடோனில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று காலை தொழிலா ளர்கள் வேலை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், திடீரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அங்கு வேலை செய்துகொண்டிருந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பதறியடித்து அங்குள்ள பல்வேறு பாதை வழியாக அங்கிருந்து வெளியேறினர்.
இது தொடர்பாக சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ மேலும் கொழுந்து விட்டு எரிந்ததால் கட்டிடத்தின் ஒரு பகுதி சுவரை இடித்து, அதன் வழியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். விபத்தின் போது தொழிலாளர்கள் உடனே வெளியேறியதால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான தீக்குச்சி மூடைகள் எரிந்து சாம்பலானது. விபத்து குறித்து சங்கரன்கோவில் கோட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அவர் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்று விசாரணை நடத்தினார். அப்போது தீப்பெட்டி தொழிற்சாலை உரிய அனுமதியின்றி செயல்பட்டதும், அங்கு பாதுகாப்பு உபகரணங்கள் செயல்படாமல் இருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து தீப்பெட்டி தொழிற்சாலைக்கு சங்கரன்கோவில் தாசில்தார் தலைமையிலான குழுவினர் சீல் வைத்தனர்.
இதனிடையே தகவல் அறிந்து அங்கு ராஜா எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, நகர் மன்ற துணைத்தலைவர் கண்ணன் என்ற ராஜூ ஆகியோர் விரைந்து சென்று அங்கிருந்த தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சுமார் நான்கு மாதங்கள் ஆகியும், இன்று வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை.
- அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கடந்த 2023 ஆம் ஆண்டுக்கான தமிழகக் காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கியதில், பல்வேறு குழப்பங்கள், முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக, இறுதிப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் அதில் இருந்து நீக்கப்பட்ட இளைஞர்கள் குற்றச்சாட்டு எழுப்பியிருக்கின்றனர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு, மே மாதம் 5 ஆம் தேதி அன்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை அறிவித்தது. அதன்படி, ஆண்களுக்கான 469 காலிப் பணியிடங்களுக்கு, 1,45,709 பேர் பெண்களுக்கான 152 காலிப் பணியிடங்களுக்கு 40,901 பேர் என, மொத்தமாக 1,86,610 இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர். மேலும் காவல்துறையினர் மற்றும் காவல்துறை சார்ந்த வாரிசுதாரர்கள் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்ட 20% இடங்களுக்கு, 6,101 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதனை அடுத்து இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26, 27 ஆகிய நாட்களில் நடைபெற்று, எழுத்துத் தேர்வு முடிவுகள் 26.09.2023 அன்று வெளியிடப்பட்டன. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி தேர்வு கடந்த 07.11.2023 முதல் 10.11.2023 வரை நடைபெற்று அவற்றில் தேர்வு பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு கடந்த 19.12.2023 முதல், 10.01.2024 வரை நடைபெற்றது.
நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் பட்டியல் கடந்த 29.01.2024 அன்று தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, அவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு, கைரேகைப் பதிவு உள்ளிட்டவை, 10.02.2024 முதல் 15.02.2024 வரை நடைபெற்றது. மேலும், அவர்களுக்கான கல்விச் சான்றிதழ் மற்றும் நடத்தை சான்றிதழ் உள்ளிட்டவை சரிபார்க்கும் பணிகள், கடந்த 25.02.2024 முதல் 05.03.2024 வரை நடைபெற்றன.
இதற்கிடையே, இந்த உதவி ஆய்வாளர் பணிகளுக்கான தேர்வில், இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில், கடந்த 24.04.2024 அன்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இடஒதுக்கீட்டை முறையாகப் பின்பற்றுமாறு, சென்னை உயர்நீதிமன்றம், கடந்த 21.06.2024 அன்று தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கூடுதலாக, 370 தேர்வாளர்களுக்குக் கடந்த 08.07.2024 அன்று உடற்தகுதித் தேர்வு நடைபெற்று, அவர்களில், 202 பேருக்கு 05.09.2024 முதல் 08.09.2024 வரை நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதன் அடிப்படையில், இரண்டாவது முறையாக இறுதித் தேர்வாளர்கள் பட்டியல், கடந்த 03.10.2024 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில், முதலில் வெளியிடப்பட்ட இறுதிப் பட்டியலில் இருந்த 41 தேர்வாளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.
கடந்த 29.01.2024 அன்று வெளியிடப்பட்டிருந்த முதல் இறுதிப் பட்டியலில், தேர்வு செய்யப்பட்டவர்களின் எழுத்துத் தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு மதிப்பெண் துறை சார்ந்தவர்களுக்கான சிறப்பு மதிப்பெண், பிறந்த தேதி அவர்கள் சார்ந்த சமூகப் பிரிவு உள்ளிட்டவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன. இதன் மூலம், இந்தத் தேர்வு முடிவுகள் வெளிப்படையாக அமைந்திருந்தன.
ஆனால், கடந்த 03.10.2024 அன்று வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட இறுதிப் பட்டியலில், தேர்வாளர்களின் பதிவு எண் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. எதன் அடிப்படையில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டது என்பதில் வெளிப்படைத் தன்மை இல்லை. இதனால், முதல் பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்டு திருத்தப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 41 இளைஞர்கள் முறையான விளக்கம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர்.
இதனை அடுத்து இறுதிப் பட்டியலில் தேர்வு பெற்றவர்கள் குறித்த முழு விவரங்களையும் வெளியிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கடந்த 28.10.2024 அன்று, சென்னை உயர்நீதிமன்றம், காவல் உதவி ஆய்வாளர்கள் பணிக்குத் தேர்ச்சி பெற்றவர்களின், பெயர், பிறந்த தேதி, மதிப்பெண்கள், சமூகப் பிரிவு உள்ளிட்ட 15 விவரங்களையும் இறுதிப் பட்டியலில் வெளியிடுமாறும், அதுவரையிலும், ஏற்கனவே வெளியிடப்பட்ட திருத்தப்பட்ட இறுதிப் பட்டியல் நிறுத்தி வைக்கப்படும் என்றும் தீர்ப்பு அளித்தது.
ஆனால், சுமார் நான்கு மாதங்கள் ஆகியும், இன்று வரை தேர்ச்சி பெற்றவர்களுக்கான முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியல் வெளியிடப்படவில்லை. சுமார் இரண்டு ஆண்டுகளாக, காவல்துறை பணிக்காகத் தங்களைத் தயார் செய்து அனைத்துத் தேர்ச்சி முறைகளிலும் வெற்றி பெற்று பணி ஆணை பெறக் காத்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வலியுறுத்தியும், முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிடத் திமுக அரசு தயங்குவது ஏன்?
அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் பல முறைகேடுகள் நடைபெறுவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. அதற்கு காவல்துறை பணிகளும் விலக்கல்ல என்பதுதான், உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழு விவரங்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை வெளியிட திமுக அரசு, காலதாமதமாக்குவதன் மூலம் தெரிய வருகிறது. தங்கள் கடின உழைப்பைக் கொடுத்து காவல்துறை பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்கள் எதிர்காலம், திமுக அரசுக்கு விளையாட்டாகப் போய்விட்டதா?
திமுக அரசின் தேவையற்ற காலதாமதத்தால், இளைஞர்களின் காவல்துறை பணிக்கான கனவு சிதைந்து போவதை இனியும் அனுமதிக்க முடியாது. இனியும் காலதாமதமாக்காமல், உடனடியாக சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், காவல் உதவி ஆய்வாளர்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு, அவர்களுக்கான பணி ஆணையை வழங்க வேண்டும். இனி வருங்காலங்களிலும், இந்த நடைமுறையைத் தொடர வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள்!
- தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது குடிஅரசு இதழுக்கு வழிகாட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக்கொண்டதும் சிங்காரவேலரைத்தான்!
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் முன்னோடி, சுயமரியாதை இயக்கச் சுடரொளி, ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்த விடுதலைப் போராளி, இதழாசிரியர், எழுத்தாளர், சென்னை மாநகராட்சி உறுப்பினர் எனப் பல நிலைகளில் இருந்து பாட்டாளி மக்களுக்காகவும் இந்நாட்டின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்ட சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் பிறந்தநாள்!
தாம் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது குடிஅரசு இதழுக்கு வழிகாட்டுமாறு தந்தை பெரியார் கேட்டுக்கொண்டதும் சிங்காரவேலரைத்தான்!
"போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி
பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!" எனத் திராவிடப் புரட்சிக்கவி பாரதிதாசனார் போற்றியதும் அவரைத்தான்!
தொழிலாளத் தோழர் சிங்காரவேலருக்கு எம் செவ்வணக்கம்!
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் கிராம் ரூ.7,940-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையில் மாற்றமில்லை.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை வார தொடக்க நாளான நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கும் கிராம் ரூ.7,940-க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,970-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,760-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 108 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து எட்டாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
16-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120
15-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.63,120
14-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,920
13-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-02-2025- ஒரு கிராம் ரூ.108
16-02-2025- ஒரு கிராம் ரூ.108
15-02-2025- ஒரு கிராம் ரூ.108
14-02-2025- ஒரு கிராம் ரூ.108
13-02-2025- ஒரு கிராம் ரூ.107
- அந்தியூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தொடர்ந்து வெற்றி வாகை சூடி இருந்தோம்.
- அ.தி.மு.க.வில் நான் ஒரு சாதாரண தொண்டன் தான்.
திருச்சி:
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவையில் நடந்த பாராட்டு விழாவில் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, பாராட்டு விழா மேடையில் ஜெயலலிதா-எம்.ஜி.ஆர். படங்கள் வைக்கப்படாததால் தான் பங்கேற்கவில்லை என்று கூறினார். ஆனால் செங்கோட்டையன் பங்கேற்காதது அ.தி.மு.க.வில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அந்தியூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தொடர்ந்து வெற்றி வாகை சூடி இருந்தோம். இந்தமுறை சில துரோகிகளால் தோல்வி ஏற்பட்டது என்று தான் கூறினேன். அந்த தொகுதியை குறிப்பிட்டு மட்டும் தான் பேசினேன். மற்றபடி நான் வேறு எதுவும் பேசவில்லை. அரசியலை பொறுத்தவரை அமைதியாக அவரவர் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தால் நல்லது. அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி அமையுமா? என்பது பற்றியெல்லாம் பொதுச்செயலாளரிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்னிடம் கேட்டால் நான் எப்படி பதில் சொல்வேன். அ.தி.மு.க.வில் நான் ஒரு சாதாரண தொண்டன் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது.
- நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பருப்பு, பாமாயில் கிடைக்கும் வகையில் இருப்பு வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம் தோறும் ரேசன் கடைகளில் துவரம் பருப்பு, சமையல் எண்ணெயை (பாமாயில்) மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.
ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், நியாய விலைக்கடைகளுக்கு தேவையான துவரம் பருப்பு, பாமாயிலை கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
நியாய விலைக்கடைகளில் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி பருப்பு, பாமாயில் கிடைக்கும் வகையில் இருப்பு வைத்துக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான 6 கோடி பாமாயில் பாக்கெட், 60 ஆயிரம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது.
- சென்னை சென்ட்ரலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.
- பயணிகள் இந்த நேரத்திற்கு ஏற்ப பயணத்திட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் நீண்ட தூரம் பயணிப்பதற்காக ரெயில் சேவையை பெரும்பாலும் விரும்புகின்றனர். அதனால் சென்னை சென்ட்ரலில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறு இயக்கப்படும் ரெயில்கள் பராமரிப்பு பணி அல்லது வேறு ஏதேனும் காரணங்களுக்காக ரத்து செய்யப்படுவது அல்லது நேரத்தில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று காலை 7 மணிக்கு புறப்பட வேண்டிய ஷாலிமர் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பிற்பகல் 3 மணிக்கு தாமதமாக புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
ரெயில் 8 மணி நேரம் தாமதமாக புறப்படுவதால் பயணிகள் இந்த நேரத்திற்கு ஏற்ப பயணத்திட்டத்தை மாற்றிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அ.தி.மு.க. ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி பதவி வகித்தபோது, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக 33 பேரிடம் ரூ.3 கோடி பணம் வசூல் செய்ததாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட கோரி பணத்தை இழந்தவர்களில் ஒருவரான ரவீந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதன்பேரில் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. எனினும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க ஐகோர்ட் கடந்த மாதம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது. அதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி, மாரியப்பன் ஆகியோர் மீது ஊழல் தடுப்புச் சட்டம், மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அடுத்த கட்டமாக அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள சி.பி.ஐ. நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. வழக்கை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய பா.ஜ.க.வின் மோடி அரசு எடுத்து வருகிறது.
- வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும்.
சென்னை:
நிதி ஒதுக்கீடு செய்ய மறுக்கும், மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் சண்முகம், இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன், மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலாளர் அருணாசலம், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் உரிமைகளைச் சிதைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மத்திய பா.ஜ.க.வின் மோடி அரசு எடுத்து வருகிறது. புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு கல்வித்துறைக்கு நிதி தர முடியாது என மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மிரட்டுகிறார். நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டிற்கான நிதியைத் தருவதில் பாரபட்சம் காட்டி, பட்ஜெட்டில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கான திட்டங்களை புறக்கணிக்கிறார்.
பதவிக்காலம் முடிந்து போன கவர்னரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யு.ஜி.சி. மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பை சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட - தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகிறார்கள்.
தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும், கல்வி - வேலைவாய்ப்பு - சமூகநீதி - வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல் ரீதியாக பா.ஜ.க.வை அண்டவிடாத தமிழ்நாட்டு மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழ்நாட்டை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.
வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழ்நாடு ஒன்றிணையும். எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும்.
அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதல்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று மாலை 4 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது.
தமிழ்நாட்டிடம் இருந்து நிதியைப் பெற்றுக் கொள்ளும் மத்திய அரசு, தமிழ்நாட்டை வஞ்சிப்பது ஏன்? என உரக்கக் குரல் எழுப்புவோம். தமிழ்நாட்டின் உரிமைகள் மீது கை வைத்தால் சிலிர்த்து எழுவோம் என்பதை உணர்த்துவோம். ஒன்றிணைவோம், உரக்கக் குரல் எழுப்புவோம், உரிமைகளை மீட்போம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை.
- போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் தகுதிச் சான்று ரத்து செய்யப்படும்.
கல்வி நிறுவனங்களில் பாலியல் குற்றங்களை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் இப்பொருள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தனியார், அரசு பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்கள் பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களின் பள்ளி மற்றும் உயர்கல்வி சான்றிதழ்கள் தகுந்த விதிமுறைகளை பின்பற்றி ரத்து செய்யப்படும்.
கல்வி நிறுவனங்களில் புதியதாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களை (தற்காலிக மற்றும் நிரந்தர) பணி நியமனம் செய்யும் முன் காவல்துறை சரிபார்ப்பு சான்று (Police verification certificate) பெறுவது கட்டாயமாக்கப்படும்.
பணியாளர்கள் அனைவரும் "குழந்தை பாதுகாப்பு உறுதி மொழி " ஆவணத்தில் (Child Safeguarding Declaration Document) கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்படும்.
அனைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது குறித்து "சுய பாதுகாப்பு கல்வி" (Personal Safety Education) அளிக்கப்பட வேண்டும்.
குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்க்கவும், அவர்கள் உள்ள சூழலில், எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை அறியவும், பிரச்னை ஏற்படும் சூழலில், எவ்வாறு, யாரிடம் உதவியை நாடுவது போன்றவற்றிக்கு இக்கல்வியானது உதவுகிறது.
இதனை திறம்பட நடைமுறைப்படுத்த முதலில் நிபுணர்களால் (NGO's and Subject matter experts) கையேடு தயாரிக்கப்பட்டு, அவர்களால் முதன்மை பயிற்சியாளர்கள் (Master Trainers) தயார் செய்யப்படுவார்கள். பின்னர், முதன்மை பயிற்சியாளர்கள் மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
ஆசிரியர்கள் இதனை குழந்தைகளுக்கு முழுமையாக கற்பிக்க வேண்டும். இப்பயிற்சி மூன்று மாதத்திற்கு ஒரு முறை கட்டாயமாக்கபட வேண்டும்.
அனைத்து ஆசிரியர் பட்டய/ பட்டப்படிப்பு பாடத்திட்டங்களில் குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகளை தடுப்பது குறித்த பாடத்திட்டம் (Education on Child Protection against Sexual Abuse) சேர்க்கப்படும். மேலும், அனைத்து ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வழங்கப்படும்.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும் போக்சோ வழக்குகள் தொடர்பான அனைத்து விவரங்கள் பற்றி தொகுக்கவும் மற்றும் கண்காணிக்கவும், சம்பந்தப்பட்ட துறை அலுவலராக தொடர்பு அலுவலர் (Nodal officer) நியமிக்கப்படுவார்கள்.
மாணவிகள் பயணம் செய்யும் பள்ளி வாகனங்களில் பெண் உதவியாளர்கள் பணியமர்த்தப்படவேண்டும்.
இருபாலர்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களில் பெண் உயர்கல்வி ஆசிரியைகள் நியமனம் செய்யப்படவேண்டும்.
விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், கல்விச் சுற்றுலா போன்ற நிகழ்ச்சிகளுக்கு பெண் ஆசிரியர்களே மாணவிகளை அழைத்துச் செல்ல வேண்டும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வெளியே முகாம்களில் தங்க நேரும் பட்சத்தில் மாணவிகளுடன் பெண் ஆசிரியர்கள் மட்டுமே தங்குவது உறுதி செய்யப்படவேண்டும்.
மாணவிகள் விடுதிகளுக்குள் வெளிநபர்கள் அனுமதிக்கப்படக்கூடாது. விடுதி பராமரிப்பு பணி பெண் விடுதி காப்பாளர்கள் மேற்பார்வையில் மட்டுமே மேற்கொள்ளப்படவேண்டும்.
அனைத்து கல்வி நிறுவனங்களிலும், 1098 & 14417 ஆகிய உதவி எண்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகள் கூடுதலாக அமைக்கப்படவேண்டும்.
பாலியல் குற்றங்கள் பற்றி தெரிய வந்தால் அப்பள்ளியின் ஆசிரியர்கள்/ தலைமை ஆசிரியர்கள் உடனடியாக காவல் துறைக்கு புகார் அளித்து அதன் விவரத்தினை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
புகார் அளிக்கும் மாணவன்/மாணவியின் பெயர் விவரம் எக்காரணம் கொண்டும் வெளிவரக்கூடாது. இதற்கு அந்த கல்வி நிலைய தலைமை ஆசிரியர் பொறுப்பாவார்.
"மாணவர் மனசு புகார் பெட்டி" அனைத்து பள்ளிகளிலும் இருப்பது உறுதி செய்யப்படவேண்டும்.
அனைத்து திங்கட்கிழமைகளிலும், காலையில் நடக்கும் கூட்டங்களில் (School Assembly) தலைமை ஆசிரியர்களும், அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு, "மாணவர் மனசு புகார் பெட்டி" மற்றும் குழந்தை பாலியல் வன்கொடுமை பற்றி புகார் அளிக்கும் முறை, குழந்தைகள் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாணவ/ மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்படவேண்டும். தனிப்பட்ட புகார்கள் குறித்து அங்கு குறிப்பிடவே கூடாது.
அனைத்து பள்ளிகளிலும் முக்கியமான இடங்களில் CCTV கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது உறுதிப்படுத்தப்படவேண்டும்.
மேற்கண்ட அனைத்து பரிந்துரைகளையும் தனியார் மற்றும் அரசுக் கல்வி நிறுவனங்கள் /உயர் கல்வி நிறுவனங்கள் கண்டிப்பாக பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- கரூரில் 13 வயது சிறுமி பள்ளி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
- இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டம் ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 13 வயது சிறுமி மாடியில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராயனூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாவின் மகள் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இன்று வழக்கம் போல் பள்ளி சென்ற மாணவி 2வது தளத்தில் இருந்து விழுந்து விட்டதாக பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கால்கள் செயல்படாமல் போய் விட்டதாக அவரது பெற்றோர் கண்ணீர்விட்டு கதறி அழுகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






