என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து பொதுச்செயலாளரிடம் தான் கேட்க வேண்டும்- செங்கோட்டையன்
- அந்தியூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தொடர்ந்து வெற்றி வாகை சூடி இருந்தோம்.
- அ.தி.மு.க.வில் நான் ஒரு சாதாரண தொண்டன் தான்.
திருச்சி:
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவையில் நடந்த பாராட்டு விழாவில் அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகியான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக அவரிடம் கேட்டதற்கு, பாராட்டு விழா மேடையில் ஜெயலலிதா-எம்.ஜி.ஆர். படங்கள் வைக்கப்படாததால் தான் பங்கேற்கவில்லை என்று கூறினார். ஆனால் செங்கோட்டையன் பங்கேற்காதது அ.தி.மு.க.வில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-
அந்தியூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை தொடர்ந்து வெற்றி வாகை சூடி இருந்தோம். இந்தமுறை சில துரோகிகளால் தோல்வி ஏற்பட்டது என்று தான் கூறினேன். அந்த தொகுதியை குறிப்பிட்டு மட்டும் தான் பேசினேன். மற்றபடி நான் வேறு எதுவும் பேசவில்லை. அரசியலை பொறுத்தவரை அமைதியாக அவரவர் வேலைகளை பார்த்து கொண்டு இருந்தால் நல்லது. அ.தி.மு.க.-பா.ஜ.க. இடையே கூட்டணி அமையுமா? என்பது பற்றியெல்லாம் பொதுச்செயலாளரிடம் கேட்க வேண்டிய கேள்வி. என்னிடம் கேட்டால் நான் எப்படி பதில் சொல்வேன். அ.தி.மு.க.வில் நான் ஒரு சாதாரண தொண்டன் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.






