என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற திமுகவின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
    • ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்பது, தமிழகம் முழுவதும், முதலமைச்சர் குடும்பம் உட்பட திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது போல இந்தித் திணிப்பு அல்ல. இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில்தான்.

    இந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில், இந்தித் திணிப்பு என்று மீண்டும் கூறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மும்மொழிக் கல்வியை இந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுவதன் மூலம், பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற திமுகவின் மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார் அவர்.

    இது தவிர, பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், மொழி வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, கடந்த 2024 -25 நிதியாண்டில் ரூ. 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், 2025 - 26 நிதியாண்டிற்கு, ரூ. 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

    திமுக அரசு, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, முதலமைச்சர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். 



    • பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பழைய பஸ் நிலையத்தில் இருந்து நீடூர் வழியாக பந்தநல்லூர் செல்லும் அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சில் உள்ள ஒரு இருக்கையில் 2½ வயது பெண் குழந்தை மட்டும் தனியாக இருந்துள்ளது. அதை தவிர மற்ற இருக்கைகளில் பயணிகள் ஏறி இடம் பிடித்து அமர்ந்து கொண்டனர்.

    அந்த பஸ்சிற்கு ஒதுக்கப்பட்ட நேரம் வந்ததும் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டது. சிறிது தூரம் சென்றதும் குழந்தை தனியாக இருப்பதை கண்ட சக பயணிகள் குழந்தை யாருடையது? என தெரியாமல் குழம்பினர். பின்னர், உடனடியாக கண்டக்டர் மாதவனிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர்.

    இதனால் பதறிப்போன அவர் டிரைவரிடம் தெரிவித்து, பஸ்சை உடனடியாக பழைய பஸ் நிலையத்திற்கு திருப்பினர். அதனை தொடர்ந்து, பஸ் சுமார் ½ மணி நேரம் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. பஸ்சில் இருந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பயணிகள் சிலர் குழந்தை அழாமல் இருப்பதற்காக சாக்லெட் கொடுத்து கொஞ்சி மகிழ்ந்தனர்.

    இதுகுறித்து, பணிமனை அலுவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் குழந்தையை அமர வைத்திருந்த பஸ்சை காணவில்லை என பதறிப்போன பெற்றோர்கள் ஆட்டோவில் ஏறி பஸ் செல்லும் பாதையை நோக்கி சென்றுள்ளனர். ஒரு கட்டத்தில் அவர்கள் மறுபடியும் பஸ் நிலையத்தையே வந்தடைந்தனர்.

    அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பஸ்சில் இடம் பிடிப்பதற்காக குழந்தையுடன் ஏறிய தந்தை குழந்தையை அமர வைத்து விட்டு, தனது கர்ப்பிணி மனைவியை அழைத்து வருவதற்காக பஸ்சில் இருந்து இறங்கியதும், அதற்குள் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் தெரியவந்தது.

    மேலும், பஸ்சின் பாதையை பின்தொடர்ந்து, சுமார் 5 கி.மீ. வரை சென்றுவிட்டு, மறுபடியும் பஸ் நிலையத்திற்கு வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, நன்கு விசாரித்த போலீசார் குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

    • நேற்றிரவு சிவா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் வெள்ளியங்கிரி மலையேறினர்.
    • உயிரிழந்த சிவா இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.

    வடவள்ளி:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூண்டி அடிவாரத்தில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. மலைகோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 6 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள 7-வது மலையில் சுயம்புலிங்க சுவாமி உள்ளது.

    இந்த மலையில் உள்ள சுயம்பு வடிவ லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    இந்த ஆண்டும் கடந்த மாதம் 1-ந் தேதி முதல் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை துருவம் பகுதியை சேர்ந்தவர் சிவா(வயது43). இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர்.

    சிவா, தனது சகோதரர் மற்றும் நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக திருவண்ணாமலையில் இருந்து நேற்று கோவைக்கு வந்தார்.

    நேற்றிரவு சிவா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் வெள்ளியங்கிரி மலையேறினர். 6 மலைகளை கடந்து 7-வது மலைக்கு சென்ற அவர்கள், அங்கு சாமி தரிசனம் செய்தனர்.

    சாமி தரிசனம் முடித்த பின்னர் இன்று காலை அவர் மலையில் இருந்து கீழே இறங்கி கொண்டிருந்தனர். 3-வது மலையில் வந்தபோது, சிவாவுக்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அவர் அப்படியே மயங்கினார்.

    இதை பார்த்ததும் அதிர்ச்சியான அவரது நண்பர்கள் உடனடியாக டோலி கட்டி அவரை கீழே தூக்கி வந்தனர். பின்னர் அங்கு தயாராக இருந்த ஆம்புலன்சில் சிவாவை ஏற்றினர்.

    அப்போது ஆம்புலன்ஸ் உதவியாளர் அவரை பரிசோதித்தபோது, சிவா உயிரிழந்து விட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆலாந்துறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    உயிரிழந்த சிவா இதயநோயால் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு அவர் ஆஞ்சியோ செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    உயிரிழந்த சிவா, பெங்களூருவில் பல ஆண்டுகளாக பெட்டிக்கடை நடத்தி வந்துள்ளார். 

    • பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.
    • கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியின் பஸ் மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து ஆலங்குடி போலீசார் மாவட்டம் முழுவதும் தகவல் கொடுத்து சோதனை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆலங்குடியில் காணாமல் போன கல்லூரி பஸ், அறந்தாங்கி அருகே நிற்பது தெரிய வந்தது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி போலீசார், ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    பஸ்சை ஓட்டி வந்த நபர்கள், பஸ்சில் டீசல் இல்லாததால் நிறுத்தி விட்டு சென்றுள்ளது தெரிய வந்தது.

    அறந்தாங்கி போலீசாரின் தகவலையடுத்து, ஆலங்குடி போலீசார் அறந்தாங்கி விரைந்து சென்று காணாமல் போன கல்லூரி பஸ்சை மீட்டு வந்தனர்.

    இதனை தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவர்கள் அங்கு நின்ற கல்லூரி பஸ்சை ஓட்டிக்கொண்டு சென்றுள்ளனர்.

    இதுகுறித்து கல்லூரி காவலர் கேட்டபோது, ஸ்பேர் பஸ் எடுத்து வரச் சொன்னதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

    பஸ் வெளியே சென்ற பிறகு தான், அந்த பஸ் அதே கல்லூரி மாணவர் மற்றும் அவரது நண்பர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரிந்துள்ளது.

    இந்த பஸ்சை திட்டமிட்டு கடத்தியதால் ஏதேனும் தவறான எண்ணத்தில் கடத்தி இருப்பார்களோ? என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.

    இச்சம்பவம் குறித்து கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆலங்குடி போலீசார் பஸ்சை கடத்திய மாணவர்கள் 4 பேரையும் தேடி வருகின்றனர். 

    • 3 வகை பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மட்டும் தான் புதிதாக அறிவிக்கப்பட்டவையாகும்.
    • அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    2025-ம் ஆண்டில் மொத்தம் 9 வகையான தேர்வுகளை நடத்தப்போவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அவற்றில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 4000 உதவிப் பேராசிரியர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட 3 தேர்வுகள் கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டிருந்தவை. அவற்றில் இரு போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்ப நடைமுறைகளும் தொடங்கி விட்டன. 1915 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், 1205 பட்டதாரி ஆசிரியர்கள், 51 வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஆகிய 3 வகை பணிகளுக்கான போட்டித்தேர்வுகள் மட்டும் தான் புதிதாக அறிவிக்கப்பட்டவையாகும்.

    தமிழ்நாட்டில் கடந்த 12 ஆண்டுகளில் ஒரே ஒரு இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கூட நியமிக்கப்படவில்லை. கடந்த ஆண்டில் நடத்தப்பட்டத் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் இன்னும் பணி வழங்கப்படவில்லை. இத்தகைய சூழலில் இனியும் ஆசிரியர்களை நியமிக்கப் போவதில்லை என்பதால் எதற்காக தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என நினைத்து விட்டதால் தான் நான்காவது ஆண்டாக நடப்பாண்டிலும் ஆசிரியர் தகுதித் தேர்வுகளை தி.மு.க. அரசு நடத்தவில்லையோ? என எண்ணத் தோன்றுகிறது.

    அரசு பள்ளிகளுக்கு போதிய அளவில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; ஆண்டுக்கு இருமுறை தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • இருட்டில் மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று பயிற்சி மருத்துவரின் முன்பாக வந்து நின்றுள்ளார்.
    • மருத்துவமனை ஊழியர் ஒருவர் அலறல் சத்தம் கேட்ட பகுதியை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.

    சிவகங்கை:

    சிவகங்கையில் அரசு மருத்துவக்கல்லூரி கீழவாணியங்குடி பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகிறார்கள். அதே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அவர்களுக்கான விடுதிகளும் தனித்தனியாக இயங்கி வருகிறது.

    இதில் இறுதியாண்டு படிக்கும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் நேற்று நள்ளிரவில் பணிகளை முடித்துவிட்டு, மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது, இருட்டில் மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று பயிற்சி மருத்துவரின் முன்பாக வந்து நின்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேகமாக விடுதியை நோக்கி நடையை கட்டினார். இருந்தபோதிலும் அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் பயிற்சி மருத்துவரின் முகத்தை தான் வைத்திருந்த துணியால் மூடி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

    உடனடியாக அந்த பயிற்சி மருத்துவர் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட மருத்துவமனை ஊழியர் ஒருவர் அலறல் சத்தம் கேட்ட பகுதியை நோக்கி வேகமாக ஓடி வந்தார். அவரை பார்த்ததும் மர்ம நபர் மாணவியை விட்டுவிட்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தப்பித்து மறைந்தார்.

    இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சத்தியபாமா உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் பாலியல் துன்புறுத்தலுக்கு முயற்சிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்கிடையே, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் நடந்த பாலியல் அத்துமீறல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் சிவகங்கையில் பயிற்சி பெண் மருத்துவரை மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் துணைத்தலைவர் பேசும் போது இருமொழிக் கொள்கை விவகாரத்தில் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.
    • இருமொழி என்பது நமது கொள்கை மட்டும் அல்ல, நமது வழிக்கொள்கையும் விழிக்கொள்கையும் அதுதான்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யாரை சந்தித்தாலும் இருமொழிக்கொள்கையை வலியுறுத்த வேண்டும்.

    * பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வின் துணைத்தலைவர் பேசும் போது இருமொழிக் கொள்கை விவகாரத்தில் உறுதுணையாக இருப்போம் என தெரிவித்துள்ளார்.

    * இருமொழி என்பது நமது கொள்கை மட்டும் அல்ல, நமது வழிக்கொள்கையும் விழிக்கொள்கையும் அதுதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    • ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு பெண் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
    • கட்சி தலைவர் விஜய் செல்வதற்கென தனி வழி அமைக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் பொதுக்குழு கூட்டம் வருகிற 28-ந்தேதி திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்சன் அரங்கத்தில் நடைபெற இருக்கிறது.

    கட்சி தொடங்கி நடைபெறும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கட்சி தலைவர் விஜய் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கூட்டத்துக்கு வரும் அனைவருக்கும் போதிய பாதுகாப்பு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை சிறப்பாக செய்து கொடுக்க விஜய் உத்தர விட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பொதுக்குழு கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கட்சி பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் விஜய் உத்தரவுபடி இரவு பகல் பாராமல் செய்து வருகிறார்.

    பொதுக்குழு கூட்டத்தில் சுமார் 2,500 பேர் பங்கேற்க இருக்கின்றனர். மாவட்டத்திற்கு 15 பேர் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது. மாவட்ட செயலாளர், இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணைச் செயலாளர்கள் என 5 பேரும் 10 பொதுக்குழு உறுப்பினர்களும் பங்கேற்க இருக்கின்றனர்.

    இதுதவிர ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஒரு பெண் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    கூட்டத்தில் பங்கேற்க வரும் அனைவருக்கும் நேற்று கியூ.ஆர். கோர்டுடன் கூடிய டிஜிட்டல் அடையாள அட்டையை அந்தந்த மாவட்ட செயலாளர்களிடம் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் வழங்கினார். இதற்கான பணிகள் நேற்று நள்ளிரவு வரை நடந்தது.

    கூட்ட அரங்குக்குள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அடையாள அட்டை கொடுக்கப்பட்டவர்கள் அதில் உள்ள கியூ.ஆர். கோர்டை ஸ்கேன் செய்தால் மட்டுமே அரங்கிற்குள் செல்ல முடியும்.

    கூட்ட அரங்கம் முற்றிலும் துபாய் பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கின்றனர்.

    பெண்களுக்கு என தனி இடவசதி மற்றும் அடிப்படை வசதி அரங்கத்தில் செய்யப்படுகிறது. கூட்டத்திற்கு வருவதற்கும், செல்வதற்கும் தனித்தனி நுழைவு வாயில்கள் பயன்படுத்தப்பட இருக்கிறது. கட்சி தலைவர் விஜய் செல்வதற்கென தனி வழி அமைக்கப்பட்டு உள்ளது.

    கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் தமிழக மக்கள் பிரச்சனை பற்றியும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கிறது.

    பொதுக்குழு நடைபெறுவதை தொடர்ந்து கூட்டம் நடைபெறும் திருவான்மியூர் சுற்றுப்புற பகுதிகள் அனைத்தும் இப்போதே களை கட்ட தொடங்கி இருக்கிறது. சுவர் விளம் பரங்கள், பேனர்கள், ராட்சத வரவேற்பு பலூன்கள் என பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் கூட்டத்தில் விஜய்யின் அரசியல் அதிரடி பேச்சு பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. கூட்டத்திற்கு இன்னும் 2 தினங்களே இருப்பதால் தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் மிகுந்த உற்சாகம் எழுந்து உள்ளது.

    • தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை.
    • இந்தி மொழி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கின்றனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் மும்மொழிக் கொள்கை திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

    * இருமொழிக்கொள்கை விவகாரத்தில் பா.ஜ.க.வை தவிர்த்து அனைத்து கட்சிகளும் தங்களது உணர்வை வெளிப்படுத்தின.

    * தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டினுடைய இரு மொழிக் கொள்கை. அதில் எந்த மாற்றமும் இல்லை.

    * தமிழகத்துக்கு உரிய நிதியை தராவிட்டாலும் இனமானத்தை அடகு வைக்கும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல.

    * இது பண பிரச்னை அல்ல இன பிரச்னை.

    * இந்தியை ஏற்காவிட்டால் பணம் தர மாட்டோம் என்று மிரட்டினாலும். பணமே வேண்டாம் என தாய்மொழியை காப்போம் என உறுதியாக உள்ளோம்.

    * இந்தி மொழியால் தான் பணம் வரும் என்று கூறினால் அந்த பணமே வேண்டாம் என தீர்மானிப்போம்.

    * திராவிட ஆட்சியில் தமிழ் மொழி காப்பதே இரு கண்கள்.

    * யார் எந்த மொழியை கற்கவும் நாம் தடையாக இருந்ததில்லை. எந்த மொழிக்கும் எதிரானவர் அல்ல நாம்.

    * இன்னொரு மொழியை திணிக்க அனுமதித்தால், அது நம் மொழியை மென்று தின்றுவிடும் என்பதை நாம் அறிவோம்.

    * இந்தி மொழி திணிப்பு மூலம் ஒரு இனத்தை ஆதிக்கம் செய்ய நினைக்கின்றனர்.

    * மாநிலங்களை தங்கள் கொத்தடிமைகளாக நினைப்பதாலேயே மொழியை திணிக்கிறது.

    * மாநில உரிமையை நிலைநாட்டுவதற்கு தமிழ் மொழி காப்பதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன்.

    * மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமையை நிலைநாட்டினால் தான் தமிழ் மொழியை காக்க முடியும் என்றார். 

    • கர்நாடகம், பீகார், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து 5-வது மாநிலமாக ஜார்க்கண்ட் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.
    • இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெற்று நாடகங்களை மட்டுமே நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தெலுங்கானா மாநிலத்தைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்திலும் அடுத்த வாரம் தொடங்கவுள்ள புதிய நிதியாண்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது.

    கர்நாடகம், பீகார், ஒடிசா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து ஐந்தாவது மாநிலமாக ஜார்க்கண்ட் சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள உள்ளது.

    ஆந்திரா உள்ளிட்ட மேலும் சில மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு பல்வேறு நிலைகளில் நிலுவையில் உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெற்று நாடகங்களை மட்டுமே நடத்தி வருவது கண்டிக்கத்தக்கது. எனவே, தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
    • டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தினர்.

    சோதனை முடிவில் பார் உரிமம் வழங்கியது, மதுபானங்கள் கொள்முதல் செய்தது உள்ளிட்டவற்றில் 1,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அமலாக்கத்துறை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    அந்த மனுக்களில், மாநில அரசின் அனுமதி இல்லாமல் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு தடை விதிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவனத்தின் அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். கடந்த 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை மற்றும், அப்போது ஆவணங்களை பறிமுதல் செய்ததையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

    சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எம்.எஸ். ரமேஷ் மற்றும் நீதிபதி என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

    கடந்த 20-ந்தேதி நடந்த விசாரணையின்போது, இந்த வழக்கிற்கு அமலாக்கத்துறை விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.

    அதில், என்ன குற்றச்சாட்டு? அதற்கான முகாந்திரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற வேண்டும் என்று தெரிவித்து வழக்கை 25-ந்தேதிக்கு (இன்று) தள்ளி வைத்தனர்.

    அதுவரை டாஸ்மாக் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கைகளையும் அமலாக்கத்துறை எடுக்கக்கூடாது என்று தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

    இந்த நிலையில், அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில் குமார் அமர்வு அறிவித்துள்ளது.

    எனவே இந்த வழக்கு இனி வேறொரு அமர்வில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த முறை விசாரித்து ஆவணங்களை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்த நிலையில் நீதிபதிகள் விலகல் முடிவை எடுத்துள்ளனர்.

    • 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.
    • தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்று கூறினார்.

    சென்னை:

    பாராளுமன்றத் தொகுதிகளை மறுசீரமைக்க 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    அவ்வாறு தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டில் எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் 39-ல் இருந்து 31-ஆக குறைந்து விடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார். தென் மாநிலங்களில் இதே போல் ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.பி.க்களின் எண்ணிக்கை குறைந்துவிடும் அபாயம் உள்ளதாகவும் எனவே, 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு செய்வதை தள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார்.

    கடந்த சனிக்கிழமை (22-ந்தேதி) நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழுக் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றக் கூட்டத்தொடரில் இதுகுறித்து கூட்டு நடவடிக்கை குழுவின் சார்பில் பிரதமரை சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து சட்டசபையில் நேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்பின்போது பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட நியாயமான தொகுதி மறுசீரமைப்பை பெற்றிட தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறோம் என்று கூறினார். இதைத்தொடர்ந்து பிரதமரை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு தமிழக அரசு சார்பில் இன்று கடிதம் அனுப்பப்படுகிறது.

    பிரதமர் மோடி அடுத்த மாதம் (ஏப்ரல்) முதல் வாரம் வெளிநாடு செல்ல இருப்பதால் அதற்கு முன்னதாகவே இவர்களை சந்திப்பதற்கு அனுமதி கொடுப்பார்களா? என்பது குறித்து இன்று அல்லது நாளை தெரிந்து விடும்.

    ×