என் மலர்
உள்ளூர் செய்திகள்
- திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய சுஜாதா ஈரோடு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஈரோடு எஸ்.பி.யாக பணியாற்றிய ஜவகர் சிபிசிஐடி சென்னை வடக்கு மண்டல எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் 10 காவல் அதிகாரிகள் பணியிட் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஜாகீர் உசேன் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து நெல்லை சரக டிஐஜி மூர்த்தி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டி.ஐ.ஜி. பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மதுரை சரக டி.ஐ.ஜி.யாக அபினவ் குமார் நியமனம், ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.யாக மூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக பணியாற்றிய சுஜாதா ஈரோடு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு எஸ்.பி.யாக பணியாற்றிய ஜவகர் சிபிசிஐடி சென்னை வடக்கு மண்டல எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரிகிரணம் பிரசாத் மயிலாப்பூர் நலப்பிரிவு துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை!
- இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை!
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நிதிக்காக இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகளின் ஆட்சியல்ல இது; தடைக்கற்களை உடைத்தெறியும் தடந்தோள்கள் கொண்ட திராவிட மாடல் ஆட்சி இது!
இருமொழிக் கொள்கை என்பது நம் உயிர்க் கொள்கை!
இது பணப்பிரச்சினை அல்ல; இனப் பிரச்சினை!
தமிழ் காக்க - தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்ட - தமிழினம் உயர - மாநில சுயாட்சியை உறுதிசெய்ய விரைவில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது காலியாக உள்ள பதவியிடங்களுக்கு இடைக்கால தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு ஆயத்தம் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 பதவியிடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தென்காசி, நெல்லைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
சென்னை மாநகராட்சியில் 4 வார்டு கவுன்சிலர்களுக்கான காலி பதவியிடங்கள் உள்பட 133 பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில், மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த மாவட்ட அளவில் தேர்தல் முன்னேற்பாடுகளை விரைந்து முடிக்க மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
- சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சவுக்கு சங்கரின் வீடுசூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடி கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தனது வீடு சூறையாடப்பட்டதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், போலீஸ் கமிஷ்னர் அருணும் தான் காரணம் என சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், சவுக்கு சங்கர் வீட்டில் கழிவுநீர் ஊற்றப்பட்டு, சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சவுக்கு சனகர் குற்றசாட்டு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "சவுக்கு சனகர் வீட்டில் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவத்தை நான் கண்டிக்கிறேன். அதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. தூய்மை பணியாளர்களை கொச்சைப்படுத்தி அவர் பேசியதை ஏற்கமுடியாது. சவுக்கு சங்கர் வேண்டுமென்றே குற்றம் சாட்டுகிறார். சவுக்கு சங்கருக்கு வேண்டியவரை காங்கிரஸ் தலைவராக்க இதனை அவர் செய்கிறார். அவரது வீட்டில் கழிவுகளை வீசியவர்கள் காங்கிரஸ் உறுப்பினர் என்றால் நிரூபிக்கட்டும்" என்று தெரிவித்தார்.
- நெல்லை மாவட்டத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
- காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயிரிழந்தவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
நெல்லை:
நெல்லை டவுன் தொட்டிப்பாலம் தெருவை சேர்ந்தவர் ஜாகீர்உசேன் பிஜிலி (வயது 60). ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான இவர் இடப்பிரச்சனை காரணமாக கடந்த 18-ந்தேதி ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக டவுனை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அவரது சகோதரர் கார்த்திக், அவரது மைத்துனர் அக்பர்ஷா மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர்.
முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூர்நிஷாவின் மற்றொரு சகோதரர் பீர்முகம்மதுவும் கைது செய்யப்பட்டார். நூர்நிஷாவை பிடிக்க பெண் போலீசார் அடங்கிய தனிப்படை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜாகீர்உசேன் பிஜிலி கொலை தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க எடுத்துள்ளது.
இதுகுறித்து 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக டி.ஜி.பி., நெல்லை மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டத்தில் 4 பேர் கொண்ட கும்பலால் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர் அந்த பகுதியில் வக்பு நிலத்தை ஆக்கிரமித்ததற்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி உள்ளார்.
இதனால் சிலரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் உயிரிழந்தவர் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே இந்த விவகாரம் குறித்து 4 வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு டி.ஜி.பி. மற்றும் நெல்லை மாவட்ட கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு காலதாமதானது என்பது உண்மையா?
- பெரிய அளவில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்விலும் கண்டுபிடிக்கப்பட்டதா?
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினேன்!
2024 ஆம் ஆண்டு இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் தேர்வை நடத்துவதற்கு காலதாமதானது என்பது உண்மையா?
பெரிய அளவில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் போன்றவை கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து நீட் தேர்விலும் கண்டுபிடிக்கப்பட்டதா? அப்படியானால் அதன் விவரங்கள்?
ஆகிய கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினேன்.
அதற்கு மாண்புமிகு இந்திய ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் அவர்கள் பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விடையளித்தார்.
" தேசிய தேர்வு முகமை (NTA) என்னும் சிறப்பு அமைப்பானது உயர்கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான நுழைவு தேர்வை நடத்துகிறது. பிப்ரவரி 9 2024 அன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டது போலவே மே 5 2024 அன்று நீட் தேர்வு நடைபெற்றது.
2019ஆம் ஆண்டிலிருந்து சுகாதாரத் துறை அமைச்சகத்தின் சார்பில் தேசிய கல்வி முகமை நீட் தேர்வை நடத்தி வருகிறது. 2024ஆம் ஆண்டு இளநிலை மருத்துவக் கல்விக்கான நீட் தேர்வு நடந்த பின்னர் தேர்வில் வழக்கத்துக்கு மாறான முறைகேடுகள்/ ஏமாற்றும் நடவடிக்கைகள் ஆகியவை நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இத்தேர்வில் நடைபெற்றுள்ள முறைகேடுகள், சதித்திட்டம், நம்பிக்கை துரோகம் ஆகியவற்றை கண்டறிந்திடும் வகையில் விரிவான விசாரணையை நடத்திட சிபிஐ யை ஒன்றிய கல்வி அமைச்சகம் கேட்டுள்ளது.
ஆகத்து 2, 2024 மாண்புமிகு உச்சநீதிமன்ற தீர்ப்பு wp (civil) 335/2024 பத்தி 84ல் " முறையான முறைகேடுகள் நடந்ததை குறிக்கும் போதிய ஆதாரப்பதிவுகள் ஏதும் இப்போதைக்கு இல்லை. இத்தேர்வின் நேர்மையை கேள்விக்குள்ளாக்கும் அளவுக்கு முறைகேடுகள் பரவலாக நடந்தது என்னும் குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரப்பதிவுகள் ஏதும் இல்லை." இதே வழக்கில் 23 ஜூலை 2024 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி 26 ஜூலை 2024ல் சரிபார்க்கப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
22.11.2024 அன்று 2024 நீட் தேர்வில் கேள்வித்தாள் திருட்டு குறித்த வழக்கில் மொத்தம் 45 குற்றவாளிகளுக்கு எதிராக 5 குற்றப்பத்திரிகைகளை தாக்கல் செய்தது. இந்த நீட் தேர்வு தாள் திருட்டு வழக்கில் ஈடுபட்ட பயனாளிகள் பெயர்களையும், கேள்வித்தாளுக்கு விடையளித்த மருத்துவ மாணவர்களின் பெயர்களையும், தேர்வில் ஆள்மாறட்டம் செய்தவர்களின் பெயர்களையும் கண்டறிந்து உரிய அமைப்பிடம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள கொடுத்துள்ளோம்." என மாண்புமிகு இந்திய ஒன்றிய இணை கல்வி அமைச்சர் சுகந்தா மஜும்தார் அவர்கள் பின்வருமாறு எழுத்துப்பூர்வமாக விடையளித்தார்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம் அவரிடம் பேசி உள்ளார்.
- லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுப்பிரமணியத்தை கைது செய்தனர்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நகரமைப்பு பிரிவில் உதவியாளராக சுப்பிரமணியம் என்பவர் (48) பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்த சிவில் என்ஜினீயர் வருண் என்பவர் புதிதாக கட்டிடம் கட்டுவது தொடர்பாக சுப்பிரமணியனை சந்தித்துள்ளார். அப்போது புதிய கட்டிடம் கட்ட அனுமதி கொடுப்பதற்கு ரூ.40 ஆயிரம் வேண்டும் என சுப்பிரமணியம் அவரிடம் பேசி உள்ளார்.
பின்னர் இறுதியாக ரூ.30 ஆயிரம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது. எனினும் லஞ்ச பணம் கொடுக்க மனம் இல்லாத வருண் இது குறித்து ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுறுத்தல்படி வருண் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு சென்றார். வருண் ரசாயனம் தடவிய பணத்தை சுப்பிரமணியனிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்பு துறை ஏ.டி.எஸ்.பி. ராஜேஷ், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சுப்பிரமணியத்தை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சுப்பிரமணியத்தை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் கோபிசெட்டிபாளையம் நகராட்சி அலுவலகம் இன்று பரபரப்புடன் காணப்பட்டது.
- பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி முன்னிலை வகித்தார்.
- விழாவில் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
வடவள்ளி:
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழகத்தில் உள்ள பட்டமளிப்பு விழா அரங்கில் இன்று நடந்தது.
விழாவுக்கு கவர்னரும், வேளாண் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார். பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி முன்னிலை வகித்தார்.
இதில் முதன்மை விருந்தினராக, சென்னை தோல் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக இயக்குனர் செல்வம் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் மொத்தம் 4 ஆயிரத்து 434 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
அதன்படி இளம் அறிவியல் பிரிவில் 1,263 பேரும், முதுநிலை பிரிவில் 225 பேர், முனைவர் படிப்பில் 48 பேர் என மொத்தம் 1,536 மாணவ, மாணவிகளும், உறுப்பு மற்றும் இணைக்கல்லூரிகளில் இளம் அறிவியல் பிரிவில் 2,877 பேரும், முதுநிலை பிரிவில் 13 பேரும், முனைவர் படிப்பில் 6 பேர் என மொத்தம் 2,898 பேர் என இன்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 434 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
விழாவில் மாணவ, மாணவிகள், மாணவர்களின் பெற்றோர், பேராசிரியர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சரும், இணை வேந்தருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை.
- தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது.
- தஞ்சை பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து 25 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, வடக்கே தாஜ்மகால் இருப்பது போல் தென் மாநிலங்களில் தஞ்சை பெரிய கோவில் பிரபலமானது. அந்த கோவில் மேம்படுத்தப்படுமா? என தஞ்சை சட்டசபை உறுப்பினர் நீலமேகம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திரன், தஞ்சை பெரிய கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தஞ்சை பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து 25 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளார்.
அந்த நிதியை பயன்படுத்தி தமிழக சுற்றுலா, இந்து சமய அறநிலையத்துறை இணைந்து தஞ்சை பெரிய கோவிலில் மேம்பாட்டுப் பணியை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.
- தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன.
- ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது, ஆவின் பொருட்கள் சிறிய கிராமங்களில் விற்பனை செய்ய முடியாத சூழல் உள்ளது. அதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன், தமிழ்நாடு முழுவதும் 300 கூட்டுறவு நிலையங்கள் உள்ளன. இந்த வருடம் அதிகமாக கொண்டு வரப்பட்டுள்ளது. ஆவின் நெய் உலகத்தரம் வாய்ந்தது.
அமெரிக்காவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விலை கூடுதலாக இருந்தாலும் அமெரிக்க மக்கள் ஆவின் நெய்யை தான் விரும்புகிறார்கள். ஆவின் பொருட்கள் கிராமங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
- பனை மரம் வளர்ப்போர் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார்.
- பனை பொருட்கள் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
நாங்குநேரியில் பனைப் பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்கப்படுமா? என்று சட்டசபையில் காங்கிரஸ் உறுப்பினர் ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி கூறியதாவது:-
பனை மரம் வளர்ப்போர் வளர்ச்சிக்கு முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார். அதுபோல் நாங்குநேரியில் பனை பொருட்களுக்கான நவீன விற்பனை காட்சிக்கூடம் அமைக்க அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பனை கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்க அரசு முன்வருமா? என்று ரூபி மனோகரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, பனையில் இருந்து பதநீர் இறக்கும்போது கலக்க வேண்டியதை கலந்து விட்டால் போதை பொருளாக மாறிவிடும். பனை பொருட்கள் இணையதளம் மற்றும் செயலி வாயிலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கள் இறக்குவது குறித்து முதலமைச்சர் எதிர்காலத்தில் பரிசீலிப்பார் என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கேள்வி எழுப்பிய அசோகன், பதநீர் 2 நாட்களை கடந்தால் கள்ளாக மாறுகிறது. இதனால் கள் என்று வழக்கு போடாமல், தற்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்வதாக வழக்கு போடுகிறார்கள். இதனை கவனத்தில் கொண்டு, வழக்கு போடுவதை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, கைது செய்பவர்கள் குறித்து முதலமைச்சரிடம் கலந்து பேசி நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
- ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன.
- போலீசில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கிறார்கள்.
சென்னையில் இன்று காலை ஒரு மணிநேரத்தில் 7 பெண்களிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து உடனடியாக தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் தப்பி சென்ற வழிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணையை தொடங்கினர்.
இதில் நகை பறித்து தப்பியவர்கள் விமான நிலையம் நோக்கி சென்று இருப்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து காலையில் குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் பற்றிய விபரங்களை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
இதில் ஐதராபாத் மற்றும் மும்பை செல்லும் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. இதில் சந்தேகம் அடைந்த போலீசார் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த விமானங்கள் புறப்படுவதை நிறுத்தினர்.
மேலும் விரைந்து சென்று ஐதராபாத் செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் ஏறி சந்தேகத்திற்கு இடமாக இருந்த ஒரு வாலிபரை பிடித்தனர். இதேபோல் மும்பை செல்ல தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இருந்த மற்றொரு வாலிபரையும் பிடித்து விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விசாரணையில் பிடிபட்ட வாலிபர்கள் 2 பேரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்கள் நன்கு திட்டமிட்டு இந்த நகை பறிப்பில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்து உள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் நகை பறிப்பில் ஈடுபட்டு விட்டு விமானத்தில் தப்பி செல்ல முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்து வைத்து இருக்கிறார்கள். மேலும் போலீசில் சிக்காமல் இருக்க தனித்தனி விமானத்தில் டிக்கெட் எடுத்து இருக்கிறார்கள். அவர்கள் இதுபோல் பலமுறை வந்து நகை பறிப்பில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
மேலும் அவர்களுடன் மேலும் சிலரும் சேர்ந்து இந்த நகைபறிப்பு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. இதையடுத்து சென்னையில் உள்ள அவர்களது கூட்டாளிகள் பற்றிய விபரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, இன்று நடைபெற்ற நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக 2 வடமாநில வாலிபர்கள் பிடிபட்டு உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
விசாரணைக்கு பின்னரே அவர்களுடன் தொடர்பில் உள்ள கொள்ளைகும்பல் மற்றும் இது போல் அவர்கள் ஏற்கனவே நகைபறிப்பு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனரா? என்பது தெரிய வரும் என்றனர். சென்னையில் நகை பறித்து விட்டு விமானத்தில் தப்பி செல்ல முயன்ற கொள்ளையர்கள் பிடிபட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






