என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் குறிப்பிட்டு முதலமைச்சர் கடிதம்.
    • தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும்.

    கச்சத்தீவை மீட்பதற்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளையும் நல்லெண்ண அடிப்படையில் மீட்டுக் கொண்டு வரவேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கச்சத்தீவு மீட்பு தொடர்பாக சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் குறிப்பிட்டு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

    மேலும் அவர்," தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிரந்தரமாக பாதுகாக்க வேண்டும். இந்திய இலங்கை ஒப்பந்தத்தை விரைவில் மறு ஆய்வு செய்து கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

    • தர்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை.
    • தர்பூசணி பழங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவை. அவற்றை தாராளமாக சாப்பிடலாம்.

    தர்பூசணி பழங்களில் ரசாயனங்கள் கலப்பதாக வெளியாகும் வதந்திகளை நம்பாதீர்கள் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் தெரிவித்துள்ளார்.

    நல்ல தர்பூசணிக்கும் ரசாயன நிறம் கலந்த தர்பூசணிக்கும் உள்ள வேறுபாடு குறித்து அவர் விளக்கினார்.

    இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஷ் கூறியிருப்பதாவது:-

    தர்பூசணியில் எல்லா வியாபாரிகளும் ரசாயனம் கலப்பதாக நாங்கள் சொல்லவே இல்லை. தர்பூசணி பழங்கள் உடல்நலத்திற்கு ஏற்றவை. அவற்றை தாராளமாக சாப்பிடலாம்.

    சென்னையில் ஊசி மூலமாக ரசாயனம் செலுத்தி செயற்கையாக நிறமூட்டப்படுவதாக எங்கும் கண்டறியப்படவில்லை.

    சென்னையின் ஒரு சில இடங்களில் கெட்டுப் போன பழங்கள் விற்கப்படுவது மட்டுமே ஆய்வில் கண்டறியப்பட்டது. எல்லா இடங்களிலும் தர்பூசணிகளில் நிறமூட்டி பயன்படுத்துவதாக கருதுவது தவறு.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொதுமக்களிடம் தர்பூசணி பழம் குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
    • தர்பூசணி விற்பனை பெருமளவில் குறைந்து விட்டதால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அர்த்தமற்ற வதந்திகளால் உழவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது அதனால் தர்பூசணி பழம் குறித்து மக்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோடைக்காலத்தில் வெப்பத்தின் கடுமையைப் போக்கவும், உடலுக்கு குளிர்ச்சி சேர்க்கவும் சாப்பிடப்படும் தர்பூசணி பழங்கள் குறித்து ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பரப்பப்படும் உண்மையற்ற செய்திகளால் பொதுமக்களிடம் தர்பூசணி பழம் குறித்த அச்சம் ஏற்பட்டிருக்கிறது.

    அதனால், தர்பூசணி விற்பனை பெருமளவில் குறைந்து விட்டதால் உழவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தர்பூசணி பழங்கள் இயல்பாக இளஞ்சிவப்பு நிறத்தில் தான் இருக்கும் என்றும், இராசாயனம் கலந்த தர்பூசணி தான் அடர்சிவப்பு நிறத்தில் இருக்கும் என்று உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் வெளியிட்ட விழிப்புணர்வு காணொலி தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும்.

    இதைத் தொடர்ந்து தர்பூசணி பழங்கங்களை சாப்பிட மக்கள் தயங்குவதால் அதன் விற்பனை பெருமளவில் குறைந்து விட்டது. சில வாரங்களுக்கு முன் ஒரு டன் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப் பட்ட தர்பூசணி பழங்களை இப்போது ரூ.3 ஆயிரத்திற்குக் கூட வாங்குவதற்கு எவரும் முன்வருவதில்லை.

    தமிழ்நாடு முழுவதும் 80 ஆயிரத்திற்கும் கூடுதலான பரப்பளவில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அவற்றில் 50 ஆயிரம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பளவில் இன்னும் அறுவடை செய்யப்படவில்லை.

    தர்பூசணி பழங்கள் குறித்த மக்களின் அச்சம் விலகி, அதன் விற்பனை அதிகரிக்காத பட்சத்தில் அனைத்து உழவர்களும் தாங்க முடியாத இழப்பை சந்திக்க நேரிடும். இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

    தர்பூசணி பழங்கள் அறுவடை செய்யும் போது மட்டும் தான் இளஞ்சிவப்பாக இருக்கும். அறுவடை செய்யப்பட்டு 5 நாட்களுக்குப் பிறகு அடர்சிவப்பாக மாறிவிடும். அறுவடை செய்யப்படும் தர்பூசணி பழங்கள் சந்தைக்கு வருவதற்கு குறைந்தது 3 நாட்கள் ஆகி விடும்.

    அதன்பின் பொதுமக்கள் தர்பூசணியை வீட்டுக்கு வாங்கி வந்து சாப்பிடும் போது அடர்சிவப்பாகத் தான் இருக்கும். இது தான் தர்பூசணியின் இயல்பு. இதில் அச்சப்படுவதற்கு எதுவும் இல்லை.

    ஆனால், உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அடர்சிவப்பு நிறத்தில் உள்ள தர்பூசணி பழங்கள் அனைத்துமே இரசாயனம் கலக்கப்பட்டவை என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டு விட்டது. அதனால், தர்பூசணி வணிகம் குறைந்து விட்டது. இந்த எண்ணத்தைப் போக்க ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.

    உழவர்களின் தர்பூசணித் தோட்டங்களுக்கு சென்ற தோட்டக்கலை அதிகாரிகள், அங்குள்ள பழங்களை ஆய்வு செய்து அவை தரமானவை என்றும், அடர்சிவப்பு நிறத்தில் இருந்தாலும் அச்சமின்றி உண்ணலாம் என்றும் விளக்கமளித்துள்ளனர்.

    டன் கணக்கில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும் தர்ப்பூசணி பழங்களில் நிறமிகளை ஊசி மூலம் செலுத்துவது சாத்தியமற்றது என்று கூறியுள்ளனர்.

    தொடக்கத்தில் காணொலி வெளியிட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரியும், "விவசாய நிலங்களில் 99.9% தவறு நடப்பதில்லை. யாரோ சிலர் மட்டும் தான் தவறு செய்துள்ளனர். இரசாயனம் கலந்த தர்பூசணி எங்கும் விற்பனை செய்யப்படவில்லை" என்று விளக்கம் அளித்தும் கூட மக்களிடம் ஏற்பட்ட அச்சம் விலகவில்லை.

    எனவே, தர்பூசணி பழங்கள் தொடர்பாக நிலவும் அர்த்தமற்ற அச்சங்களை போக்கும் வகையில், தர்பூசணி பழங்களின் நன்மைகள் குறித்தும், அவற்றின் தன்மை குறித்தும் தமிழக அரசு ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் தர்பூசணி உழவர்களை பேரிழப்பிலிருந்து காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழக பாஜக மாநிலத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு 9ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.
    • பிரதமர் மோடி வரும் 6ம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில் அவரை சந்திக்க இபிஎஸ்க்கு அனுமதி.

    தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வரும் 7ம் தேதி டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார்.

    அங்கு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்களுக்கான தலைவர் நியமனம் குறித்து ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    அண்ணாமலையுடன் அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியவரும் சந்திக்க உள்ளார்.

    தமிழக பாஜக மாநிலத் தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு 9ம் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

    இதற்கிடையே, பிரதமர் மோடி வரும் 6ம் தேதி தமிழகம் வர உள்ள நிலையில் அவரை சந்திக்க இபிஎஸ்க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    • நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் கயவர்களால் களவாடப்பட்டுள்ளது.
    • தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை.

    மருதமலை கோவிலில் வெள்ளிவேல் திருட்டு நடக்கவில்லை என்றும் அடிவாரத்தில் தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபத்தில் திருட்டு நடந்துள்ளது என்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    கோவை மாவட்டம், மருதமலை. அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஐள குடமுழுக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருட்டு என்று சில தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளிவருகின்றன.

    கோவை மாவட்டம், பேரூர் வட்டம் மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள மருதமலை அடிவார வேல் கோட்ட தியான மண்டபத்தில் நேற்று இரவு சுமார் 11.45 மணியளவில் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் கயவர்களால் களவாடப்பட்டுள்ளது.

    இது தனியாருக்கு பாத்தியப்பட்ட தியான மண்டபம் ஆகும். இதன் நிர்வாகியாக குருநாதசாமி என்பவர் இருந்து வருகிறார்.

    இந்த தியான மண்டபத்தில் வெள்ளி வேல் மட்டுமே இருந்து தியானம் செய்யப்பட்டு வந்துள்ளது.

    மேற்கண்ட தியான மண்டபமானது இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான தியான மண்டபம் இல்லை.

    மேலும், இந்த சம்பவம் மருதமலை திருக்கோயிலில் நடைபெறவில்லை என கோவை மண்டல இணை ஆணையர் பி.ரமேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • தி.மு.க சார்பில் 3 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.

    ஊட்டி:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி மற்றும் 6-ந்தேதி என 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

    இதற்காக அவர் வருகிற 5-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கார் மூலமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டருக்கு செல்கிறார்.

    அங்கு அவர் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கிறார். மாலை 5 மணிக்கு பிளாக்தண்டரில் இருந்து கார் மூலமாக நீலகிரிக்கு புறப்படுகிறார்.

    நீலகிரிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் 3 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    கோத்தகிரி கஞ்சப்பனை, கட்டபெட்டு, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    பின்னர் இரவு 7 மணிக்கு ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

    இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வென்றெடுக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என கட்சியினருக்கு, நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.

    மறுநாள் 6-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஊட்டி விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதிக்கு காரில் செல்கிறார்.

    அங்கு 143.69 கோடி செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    அதனை தொடர்ந்து கார் மூலமாக ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்திற்கு வருகிறார்.

    அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.

    தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்ற உள்ளார். நீலகிரி நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் கோவை வருகிறார்.

    பெருந்துறையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடந்த விழாவில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று, வள்ளி கும்மி நடனமாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.

    கின்னஸ் சாதனை படைத்த 16 ஆயிரம் கலைஞர்களுக்கும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை கொடிசியா மைதானத்தில் பாராட்டு விழா நடக்கிறது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். அங்கு 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கும் வள்ளி கும்மி நடனத்தையும் அவர் பார்வையிடுகிறார்.

    பின்னர் நீலகிரி, கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.

    • வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் புயல் கண்காணிப்பிற்கு புதிய ரேடார்கள் நிறுவப்பட உள்ளது.
    • வானிலை முன்னெச்சரிக்கை துல்லியத்தை மேம்படுத்த ஏற்காடு, ராமநாதபுரத்தில் டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படும்.

    தமிழ்நாட்டில் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் புயல் கண்காணிப்பிற்கு புதிய ரேடார்கள் நிறுவப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வானிலை முன்னெச்சரிக்கை துல்லியத்தை மேம்படுத்த ஏற்காடு, ராமநாதபுரத்தில் டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படும். ரூ.56 கோடி மதிப்பில் சி பேண்டு டாப்ளர் ரேடார்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் ராமநாதபுரம், ஏற்காடு ஆகிய 2 இடங்களில் புதிதாக அதிநவீன ரேடார்கள் நிறுவினால் தமிழகத்தின் தென்பகுதி மற்றும் வடமேற்கு பகுதிகளை இயற்கை சீற்றத்தில் இருந்து முழுமையாக தடுக்க முடியும்.

    கேரள மாநிலம் கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் நிறுவப்பட்டுள்ள ரேடார்கள் மூலம் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் நிலவும் பருவ நிலைகள் ஓரளவுக்கு கண்காணிக்கப்படுகிறது. ஆனாலும் பல பகுதிகளை இதன் மூலம் கண்காணிப்பதில் சிக்கல்கள் இருந்து வருகிறது. இதனை சரிசெய்யும் வகையிலும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவும் பருவநிலைகளை முன்கூட்டியே கண்காணிக்க வசதியாகவும் 2 புதிய ரேடார்கள் நிறுவப்படுகின்றன.

    இதன் மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பருவ நிலைகளை முன்கூட்டியே கண்டறிந்து இயற்கை சீற்றங்களில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தேவையான முன்னேற்பாடுகளை செய்ய முடியும். 

    • 2026-ல் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
    • ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவனால் அமைதி உருவாகும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்று வருகிது. விழாவில் இந்திய கூடைப்பந்து கூட்டமைப்பு தலைவரும், தமிழக வெற்றிக் கழக தேர்தல் பிரசார பொதுச் செயலாளருமான ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு பேசியதாவது:-


    தமிழக வெற்றி கழகம் என்றதும் மாணவர்கள் மத்தியிலுள்ள ஆர்வம் எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. உங்களது வரவேற்புக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கல்லூரி விழா என்பதால் தமிழக வெற்றி கழக நிர்வாகிகளிடம் சொல்லாமல் இந்த விழாவில் கலந்து கொள்ள வருகை தந்தேன். ஆனால் விழாவில் விஜய் என்று கூறியதும் மாணவர்கள் மத்தியில் கடும் எழுச்சி தெரிகிறது.

    தமிழகத்தில் எத்தனையோ கட்சி உள்ளது. 2026 ஆட்சி விஜய்யின் ஆட்சியாக அமையும். மாணவர்களின் எழுச்சி எனக்கு உற்சாகத்தை தருகிறது. இந்த கல்லூரி நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லூரி ஆகும். ஆண், பெண் பாகுபாடு இன்றி இந்த கல்லூரி உள்ளது. தரமான கல்வியை இந்த கல்லூரி வழங்கி வருகிறது என்றார்.

    இதை தொடர்ந்து மாண வர்களுடன் அவர் கலந்து ரையாடினார். அப்போது மாணவ-மாணவிகள், கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்து ஆதவ் அர்ஜூனா பேசிய தாவது:-

    நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். சாதிக்க வேண்டும் என்ற உணர்வு டன் படித்தேன். பொலிட்டி க்கல் சைன்ஸ் படித்ததுடன் விளையாட்டிலும் அதிக கவனம் செலுத்தி வந்தேன்.எல்லா விஷயங்களையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாடும் மண்ணும் முன்னேற நல்ல தலைவர்கள் வேண்டும்.

    அரசியல் என்பது சயின்ஸாகும். தலித் மக்கள் பொருளாதார ரீதியில் பின்தங்கி உள்ளார்கள்.சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி யில் நானும் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டோம். அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் பிறகு தான் நான் விஜய் உடன் இணைந்து பயணிக்க விரும்பினேன்.

    அவரிடம் கற்றுக்கொண்ட நல்ல விஷயம் என்ன வென்றால் எல்லோரும் சமம் என்று கூறுகிறார். மதத்தால் ஜாதியால் அனைவரும் ஒன்றே என்று விஜய் கூறி வருகிறார். இளைஞர்களை நம்பி மாற்றத்தை உருவாக்கும் கட்சியாக விஜய் கட்சி உருவெடுத்து உள்ளது. 2026-ல் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அமைதியாக இந்த கட்சி உருவாகி வருகிறது.

    விஜய் என்று கூறியதும் இளைஞர்கள் மத்தியில் அவரது குரல் எதிரொலிக்கிறது. இந்த கல்லூரியில் பார்க்கும் போதும் மாணவர்களின் குரல் ஒலிப்பதை பார்க்க முடிகிறது. நம்முடைய தாய்மொழி தமிழை எல்லோரும் படிக்க வேண்டும்.

    வணிக ரீதியான மொழி, வெற்றியடைய கூடிய மொழி, உலகம் முழுவதும் உள்ள மொழி ஆங்கிலம் ஆகும். இந்தி என்பது தேசிய மொழி கிடையாது.

    ஒரு நாட்டிற்கு சென்றால் ஒவ்வொருவரும் அவரவர் மொழியையே பேசி வருகிறார்கள். அந்த மொழியை எடுத்து வந்து நம்மிடம் திணிக்க பார்க்கிறார்கள். நாம் எல்லா மொழிகளையும் வரவேற்போம்.

    ஆனால் நம்மிடம் ஒரு மொழியை திணிக்க கூடாது. முதல்வர், அமைச்சர் பதவியை விட கொள்கை ரீதியான பயணத்தை தமிழகம் முழுவதும் உருவாக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம்.

    தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு ஊழல் செய்து விட்டு ஓட்டுக்கு ரூ.3 ஆயிரம் கொடுப்பது சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. மக்களின் சமூக கொள்கையை நோக்கி எனது பயணம் இருக்கும்.

    2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. நிச்சயமாக வெற்றி பெறும். அதில் சந்தேகம் இல்லை. 2 மாதம் நீங்கள் பிரச்சாரம் செய்ய வேண்டும். மாணவர்கள் இறங்கினால் என்ன ஆகும் என்று எல்லோருக்கும் தெரியும்.

    கனிமவளங்கள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கனிம வளங்கள் தனியார் வசம் இருப்பதை தடுத்து நிறுத்தி அரசுடமையாக்கப்படும். அதன் மூலமாக வரும் வருவாய் ஏழை-எளிய மக்களுக்கு பயன்படுத்தப்படும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

    டாஸ்மாக் மூட நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் உருவனால் அமைதி உருவாகும். நீங்கள் த.வெ.க உறுப்பினராக வேண்டும். த.வெ.க. தலைவர் , நிர்வாகிகளை நியமனம் செய்யும்போது எத்தனை வருடமாக இவர் நம்முடன் பயணம் செய்தவர்? யார் என்பதை அறிந்து தான் அவர்களுக்கு பதவி வழங்கியுள்ளார்.

    விஜய் கட்சியில் சென்னை மாவட்ட தலைவர், ஆட்டோ டிரைவராக உள்ளார். நீங்கள் அனைவரும் த.வெ.க.வில் உறுப்பினராக சேரலாம். பிரதமரிடம் கூட நீங்கள் கேள்வி கேட்கலாம். ஏற்றத்தாழ்வு இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?
    • வழக்கு தொடர்பான விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு.

    மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக நடிகர் பிரபு தாக்கல் செய்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, "சகோதரர் ராம்குமார் பெற்ற கடனுக்கான எனக்கு சொந்தமான ரூ150 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என் வாழ்நாளில் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கியது இல்லை" பிரபு தரப்பு தெரிவிக்கப்பட்டது.

    இதற்கு, "ராம்குமார் உங்களுடைய சகோதரர்தானே? இப்போது அந்தக் கடன்களை நீங்கள் செலுத்திவிட்டு பிறகு அவரிடம் பெற்றுக்கொள்ளலாமே?" என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதில் அளித்த பிரபு தரப்பினர்,"நிறைய பேரிடம் ராம்குமார் கடன் வாங்கியுள்ளார். நாங்கள் உதவ முடியாது" என குறிப்பிட்டுள்ளார்.

    இரு தரப்பு வாதங்களை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    • கட்சியினர், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    நாகப்பட்டினம்:

    வருகிற 2026-ம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.

    இந்த நிலையில் த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் விஜய், தமிழகத்தில் த.வெ.க. மற்றும் தி.மு.க. இடையே தான் போட்டி என கூறினார். இதனால் த.வெ.க. தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதைத்தொடர்ந்து கட்சியினர், பூத் கமிட்டி அமைப்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தச்சூழலில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற வேண்டுதலோடு, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் த.வெ.க. தொண்டர் ஒருவர் கடும் வெயிலில் மணலில் முழங்காலால் மண்டியிட்டு 750 மீட்டர் தூரம் சென்று வழிபாடு செய்யும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    இந்த வீடியோவில் உள்ள நபர் சென்னை ஆலந்தூர், அய்யப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்த த.வெ.க. கட்சியை சேர்ந்த தொண்டர் ஆறுமுகம் ஆவார். இவர் வேளாங்கண்ணி புதிய பேராலயத்தில் இருந்து, பழைய மாதா கோவில் சிலுவை பாதை வரை கடும் வெயிலில் முழங்காலால் மண்டியிட்டு சென்று வழிபாடு நடத்தினார். மேலும் அப்போது அவர் கையில் த.வெ.க. கட்சிக்கொடியை ஏந்தி சென்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்காக பிரார்த்தனையும் செய்தார்.

    அப்போது ஆறுமுகத்திற்கு சிலர் கைகுலுக்கி வாழ்த்தும் தெரிவித்தனர். இந்த காட்சிகள் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்படும்.
    • தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் ரூ.20 கோடியில் விரிவுப்படுத்தப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் கால்நடை பராமரிப்பு மற்றும் மீன் வளத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் முடிவில் அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பேசியதாவது:-

    இன்று கிராமப்புற பொருளாதாரம் சிறப்பாக இருப்பதற்கு கால்நடை வளர்ப்பே முக்கிய காரணமாக உள்ளது. 3 பசுமாடுகளை வளர்த்தால் ஒரு குடும்பமே நல்ல பயனை பெற முடியும். ஆடுகள் வளர்ப்பின் மூலம் விவசாயிகள் தங்கள் தேவைக்காக உடனடியாக அவைகளை விற்று தங்களது பண தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிகிறது.

    இதனை கருத்தில் கொண்டு ஆடுகள், மாடுகள், கோழிகளை வளர்ப்பதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் சினையுற்ற கறவை பசுக்களுக்கு ரூ.6.65 கோடி நிதி ஒதுக்கீட்டில் 50 சதவீத மானியத்துடன் ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

    கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ரூ.30 லட்சம் நிதி ஒதுக்கப்படும். சென்னை அடையாறில் உள்ள செல்லப் பிராணிகள் சிகிச்சை மையம் ரூ.5 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

    செல்லப் பிராணிகளை மனிதாபிமானத்துடன் நடத்துவதற்கு வசதியாக சென்னை மற்றும் கோவையில் ரூ.5 கோடியில் செல்லப்பிராணி பூங்கா, தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

    தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பணிகள் ரூ.20 கோடியில் விரிவுப்படுத்தப்படும்.

    கால்நடை விவசாயிகள், கால்நடை வளர்ப்பு குறித்த பல்வேறு நடைமுறைகளை தெரிந்து கொள்ளும் முறையில் அவர்கள் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள ரூ.1 கோடி நிதி ஒதுக்கி ஏற்பாடு செய்யப்படும்.

    கிராமப்புறங்களில் நிலமற்ற தினக்கூலி தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், நாட்டின கோழி குஞ்சு வழங்கும் திட்டம்50 சதவீத மானியத்தில் செயல்படுத்தப்படும். காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் 16 மீனவ கிராமங்கள் ரூ.32 கோடி செலவில் மேம்படுத்தப்படும். தரமான மீன் மற்றும் மீன் உணவு பொருட்களை நியாயமான முறையில் வழங்குவதற்கு கயல் திட்டம் தொடங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
    • இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு வந்தது.

    மதுரை:

    தென்காசி சேர்ந்த நம்பிராஜன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவிலின் செயல் அலுவலர் முருகனின் வாய்மொழி உத்தரவின் பேரில் கோவில் பகுதியில் இருந்து 100 டிராக்டருக்கும் அதிகமான மண் அள்ளப்பட்டது. இதனால் கோவிலின் கட்டிடம் உறுதியிழந்து உள்ளது.

    காசி விஸ்வநாதர் கோவிலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2023 ஆம் ஆண்டு கூட்டம் போடப்பட்டு, கோவிலை மறுசீரமைப்பு செய்வதற்காக அரசு தரப்பிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அந்த நிதி முறையாக பயன்படுத்தப்படவில்லை. இதனால் பழமையான கோவிலை இழக்கும் நிலையும், பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையும் உள்ளது. இது தொடர்பாக தென்காசி மாவட்ட உதவி ஆணையர் ஆய்வு செய்ததில் பணிகள் முழுமை செய்யப்படாததும், அரசின் பணம் மோசடி செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதோடு நாள்தோறும் பணிகளை செய்தால் மட்டுமே ஏப்ரல் 7-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பாக பணிகளை முடிக்க இயலும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, புனரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை கும்பாபிஷேகம் நடத்த இடைக்கால தடை விதிப்பதோடு, தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்தும், அரசு வழங்கிய நிதியை மோசடி செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் நிஷாபானு, ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் கும்பாபிஷேகத்திற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளனர்.

    ×