என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் நீலகிரி வருகை
- தி.மு.க சார்பில் 3 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.
ஊட்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி மற்றும் 6-ந்தேதி என 2 நாட்கள் நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக அவர் வருகிற 5-ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கார் மூலமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டருக்கு செல்கிறார்.
அங்கு அவர் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுக்கிறார். மாலை 5 மணிக்கு பிளாக்தண்டரில் இருந்து கார் மூலமாக நீலகிரிக்கு புறப்படுகிறார்.
நீலகிரிக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் 3 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
கோத்தகிரி கஞ்சப்பனை, கட்டபெட்டு, ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் தி.மு.க.வினர் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளனர்.
பின்னர் இரவு 7 மணிக்கு ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் வென்றெடுக்கும் வகையில் பணியாற்ற வேண்டும் என கட்சியினருக்கு, நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.
மறுநாள் 6-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ஊட்டி விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு ஊட்டி பிங்கர் போஸ்ட் பகுதிக்கு காரில் செல்கிறார்.
அங்கு 143.69 கோடி செலவில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கிறார்.
அதனை தொடர்ந்து கார் மூலமாக ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்திற்கு வருகிறார்.
அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி விழா பேரூரையாற்ற உள்ளார். நீலகிரி நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலையில் கோவை வருகிறார்.
பெருந்துறையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடந்த விழாவில் ஒரே நேரத்தில் 16 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்று, வள்ளி கும்மி நடனமாடி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.
கின்னஸ் சாதனை படைத்த 16 ஆயிரம் கலைஞர்களுக்கும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை கொடிசியா மைதானத்தில் பாராட்டு விழா நடக்கிறது.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். அங்கு 10 ஆயிரம் கலைஞர்கள் பங்கேற்கும் வள்ளி கும்மி நடனத்தையும் அவர் பார்வையிடுகிறார்.
பின்னர் நீலகிரி, கோவை நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.






