என் மலர்
உள்ளூர் செய்திகள்
- மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெற்று வருகிறது.
- இப்புகைப்படங்களை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பகிர்ந்துள்ளார்.
மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி, ஞானவேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்களை சந்தித்து சமுத்திரக்கனி, ஞானவேல் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதனையடுத்து மாநாட்டு மேடையில் வைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையுடன் சமுத்திரக்கனி மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இப்புகைப்படங்களை மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
- நாளை மதியம் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
- அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு மிக அருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நாளை (ஏப்ரல் 05, 2025 ஆம் தேதி) நடைபெற உள்ள "IPL 2025" கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தை வழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
IPL போட்டிகான நுழைவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் (both Digital & Physical) தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில் ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவு மற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம்.
எந்த மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்தும் போட்டி நடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு இடையே மெட்ரோ ரெயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி செல்லும் கடைசி மெட்ரோ ரெயில் 23:27 மணிக்கு புறப்படும். பயணிகள் கடைசி மெட்ரோ ரெயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள், அரசினர் தோட்டம் மெட்ரோ ரெயில் நிலையத்திலிருந்து புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:59 மணிக்கும் மற்றும் அரசினர் தோட்டம் மெட்ரோ நிலையத்திலிருந்து அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு செல்லும் கடைசி இணைப்பு ரெயில் 22:44 மணிக்கும் புறப்படும்.
புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் சலுகை.
- அதிகபட்சமாக 5000 ரூபாய் வரை சிறப்பு சலுகை வழங்கப்படும்.
மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் (அதிகபட்சம் ரூ.5000) சிறப்பு சலுகை வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.
வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள் ஏற்படுத்தும் என்றும், ஏப்ரல் மாத சனி, ஞாயிறுக்கிழமைகளிலும் இந்த மையங்கள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளது.
- மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.
- மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு. தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?
கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிக்கையில் வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
*கச்சத்தீவு மீட்கப்படுவதே மீனவர்கள் பாதுகாப்புக்கான நிரந்தரத் தீர்வு,
*ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனத்தை இலங்கை அரசு எப்போதும் மதித்துக் கடைப்பிடிக்க வேண்டும்.
*மீனவர்களின் உயிரையும் உணர்வையும் பாதுகாப்பதே ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் தலையாய கடமை.
* மீனவர்கள் நலன் மற்றும் கச்சத்தீவு சார்ந்த தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழுத் தீர்மானம் தந்த அழுத்தம், தமிழ்நாடு அரசைத் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடான கச்சத்தீவு மீட்பு மற்றும் மீனவர் பாதுகாப்பு நிலைப்பாடு நோக்கி நகர வைத்துள்ளது.
*1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப் போகக் காரணம், ஆட்சி அதிகாரப் பசி கொண்ட அன்றைய ஆளும்கட்சியான தி.மு.க.தான்.
*1999ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை ஒன்றிய அரசுகள் இயங்கியதே தி.மு.க.வின் தயவினால்தான். அத்தகைய நிலையில், அப்போதெல்லாம் கச்சத்தீவு விவகாரத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, இப்போது மட்டும் தனித் தீர்மானம் என்ற கண்துடைப்பு நாடகம் ஏன்? இந்தக் கேள்வியே தமிழக மக்களிடமும் எழுந்துள்ளது.
*அன்று முதல் இன்றுவரை ஒன்றிய அரசுக்கு, வாஞ்சையோடு வருடிக் கொடுத்து, மறைமுக அன்பை வெளிப்படுத்தும் கடிதம் எழுதும் கபட நாடகம் மட்டுமே இந்த வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மாயாஜால வித்தை.
*அதிகார மையமாக இருக்கும்போதெல்லாம் கை விட்டுவிட்டு, 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால். இப்போது தனித் தீர்மானம் இயற்றும் கபட நாடகத் தி.மு.க. அரசின் அந்தர் பல்டி அரசியலைத் தமிழக வெற்றிக் கழகம் கடுமையாகக் கண்டிக்கிறது.
*இலங்கைக் கடற்படையின் தாக்குதலால் தமிழக மீனவர்கள் இதுவரை 800-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். அவர்களின் உடைமைகளும் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டுவிட்டன.
* குஜராத் போன்ற மற்ற மாநில மீனவர்களுக்காக மட்டும் பாதுகாப்பாக இருக்கும் ஒன்றிய அரசு. எங்கள் தமிழக மீனவர்களை மட்டும் கை விடுவது ஏன்?
*கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு. கச்சத்தீவு மற்றும் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் பாரபட்சத்துடன் பாராமுகமாகவே இருக்கிறது.
*எப்போதும் மீனவ நண்பனாகவே, உண்மையான உறுதியுடனும் உணர்வுடனும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம். ஒன்றிய பா.ஐ.க. அரசின் இந்தப் போக்கைத் தீர்க்கமாகக் கண்டிக்கிறது.
*கச்சத்தீவு மீண்டும் நமது நாட்டுக்குச் சொந்தமாவது மட்டுமே தமிழக மீனவர் பிரச்சினைக்கு ஒரே பரிகாரம் மற்றும் தீர்வு.
*நிரந்தரத் தீர்வை எட்டும் வரை, இடைக்காலத் தீர்வாக 99 வருடக் குத்தகையாகக் கச்சத்தீவைப் பெற வேண்டும். இதற்கான ஒப்பந்தத்தை ஒன்றிய அரசு எவ்விதச் சமரசமும் இன்றி நிறைவேற்ற வேண்டும். ஒன்றிய பிரதமர் மோடி கட்டாயமாக இலங்கை அரசிடம் இதை வலியுறுத்திப் பெற வேண்டும்.
*இலங்கைத் தமிழர்களின் வாழ்வும் பாதுகாப்பும் அமைதியும் நிம்மதியும் நிரந்தரமானதாக இருக்க, பொது வாக்கெடுப்பு மட்டுமே ஒரே தீர்வு.
*நம் கழகத்தின் பொதுக்குழுத் தீர்மானமும், தீர்க்கமான நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பே. இந்நிலையை நோக்கி நகர, சர்வதேசச் சமூகத்தை ஒன்றிய அரசு வலியுறுத்த வேண்டும்.
*போர்க் குற்றங்களுக்காகக் கண்டிப்பதோடு, நடுநிலையான பொது வாக்கெடுப்பு நடத்த. இலங்கை அரசுக்கு ஒன்றிய பிரதமர் அவர்கள், நேரடியான அரசியல் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
*இலங்கை செல்லும் நம் ஒன்றிய பிரதமர், 'கச்சத்தீவு இந்தியாவின் உரிமை நிலம்' என்ற பயணத் திட்டத்தை முதன்மையாக வடிவமைக்க வேண்டும். நமது மீனவர்களின் துயர் நீங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற விதத்தில் பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒன்றிய பிரதமரின் இந்த இலங்கைப் பயணம், தமிழக மீனவர்கள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் ஒளியேற்றுவதாக மட்டுமே இருக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக, சமரசமின்றி இவை அனைத்தையும் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறிப்பிடப்பட்டுள்ளது.
- பாஜக தலைவர் பதவிக்கான இடத்தில் நான் இல்லை.
- புதிய தலைவர் பதவிக்காக யாரையும் கை காட்டவில்லை- அண்ணாமலை
2026 சட்டமன்றத் தேர்தலுக்காக பாஜக- அதிமுக கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் இரு கட்சித் தலைவர்களின் சந்திப்பு அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.
இதற்கிடையே தமிழக பாஜகவுக்கு புதிய மாநிலத் தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. பாஜக-வுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்றால் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அதிமுக கண்டிஷன் போட்டதாக அரசியல் வட்டாரங்கள் கிசுகிசுகின்றன.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் தான் இல்லை என அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார். இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை. புதிய மாநிலத் தலைவர் பதவிக்காக நான் யாரையும் கை காட்டவில்லை. புதிய மாநிலத் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெறும். புதிய மாநிலத் தலைவர் தேர்வான பிறகு நிறைய பேசுவோம். தமிழ்நாட்டு அரசியலில் தொடர்வேன், டெல்லி செல்ல மாட்டேன். என்னுடைய அரசியல் பணி என்றைக்குமே தொடரும்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே மாநில தலைவர் தேர்தலில் போட்டியிடுவீர்களா? என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "பாஜக-வில் தேர்தல் நடைமுறை என்பது கிடையாது. மேலிடம் முடிவு செய்தவதை நாங்கள் பின்பற்றுவோம்" என்றார்.
அடுத்த தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரம், தமிழிசை சவுந்தரராஜன், எல். முருகன், வானதி சீனிவாசன் ஆகியோர் பெயர் அடிபடுகிறது.
- தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாது.
- இது கூட்டாட்சி நியாயத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு உட்படுத்துவதாகும்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுவரையறை நியாயமான முறையில் செய்யப்பட வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.. தற்போது நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் தென்மாநிலங்களுக்கான பாராளுமன்ற தொகுதிகள் கணிசமாக குறையும் என்பது குற்றச்சாட்டு.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவியில் கூறியிருப்பதாவது:-
தெற்கை (தென்இந்திய மாநிலங்கள்) அமைதியாக்குவதற்காக வடக்கு (வடமாநிலங்கள்) மக்கள் தொகை அதிகரிப்பை அரசியல் ஆயுதமாக பயன்படுத்த முடியாது.
தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை கூடாது. இது கூட்டாட்சி நியாயத்தை குறைத்து மதிப்பீடு செய்வதற்கு உட்படுத்துவதாகும். நாங்கள் நியாயமான தொகுதி மறுவரையறையை கோருகிறோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனிநபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும் சமூகமும் பாதிப்பு.
- ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒழுங்குப்படுத்துவது அரசின் பொறுப்பும் கூட.
ஆன்லைன் விளையாட்டுக்கு நேரக்கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள் பின்வருமாறு:-
* ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தனிநபர் மட்டுமல்ல ஒட்டுமொத்த குடும்பமும் சமூகமும் பாதிப்பு.
* ஆன்லைன் ரம்மியை ஒழுங்குப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஒழுங்குப்படுத்துவது அரசின் பொறுப்பும் கூட.
* விளையாடுபவர்களின் விவரங்களை கேட்பதால் அந்தரங்க உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது
* கேண்டி கிரஷ் உள்ளிட்ட விளையாட்டுகளோடு ஆன்லைன் ரம்மியை ஒப்பிடுவது தவறு.
இவ்வாறு தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
- கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியது.
- 8 முதல் 11 பேர் சுழற்சி அடிப்படையில் பாதுகாப்பு வழங்குவார்கள்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் பொது இடங்களுக்கு செல்லும்போது, அதிகப்படியான பொதுமக்கள் கூடுவதால் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்க்கு 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, 'ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக கட்சி அலுவலகத்தில் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்தனர்.
இந்த நிலையில் இன்று முதல் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. Y பிரிவின் பாதுகாப்பின்படி விஜய்க்கு 8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை காமாண்டோக்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு வழங்குவர்.
- மக்களவை தேர்தலின்போது தயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக வழக்கு.
- ஏற்கனவே வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கப்பட்ட நிலையில் தற்போது நீட்டித்துள்ளது.
மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது தயாநிதி மாறனுக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அவதூறு வழக்கு போடப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. இந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
- தலைமறைவாக இருந்த புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த கந்தசாமி மகன் ஆகாசை கைது செய்தனர்.
- பிரேத பரிசோதனை முடிந்ததும் விஜயின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலூர்:
விழுப்புரம்-நாகப்பட்டினம் 4 வழிச்சாலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 3 நபர்களை ஆறு பேர் கொண்ட கும்பல் கத்தியால் வெட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்தனர். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடினர். அப்போது கொள்ளை கும்பல் தலைவனான புதுச்சேரி திலாசுப்பேட்டை வீமன்நகரை சேர்ந்த கோபி மகன் விஜய் என்ற மொட்டை விஜய் (19) எம்.புதூரில் உள்ள முந்திரி தோப்பில் பதுங்கி இருந்ததை பிடிக்க சென்றபோது போலீஸ்காரர்கள் கோபி, கணபதி ஆகியோரை விஜய் அரிவாளால் வெட்டியதால் இன்ஸ்பெக்டர் சந்திரன், தனது தற்காப்புக்காகவும், சக போலீசாரை காப்பாற்றுவதற்காகவும் விஜயை என்கவுண்ட்டரில் சுட்டுக்கொன்றார்.
இதனை தொடர்ந்து விஜயின் கூட்டாளிகளான புதுச்சேரி உழவக்கரையை சேர்ந்த அறிவாசகம் மகன் ரேவந்த்குமார் (21), அண்ணாதுரை மகன் அன்பரசு (20), திருபுவனத்தை சேர்ந்த முசுபூர் ரகுமான் மகன் ரியாஸ் அகமது (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த கந்தசாமி மகன் ஆகாசையும் (20) கைது செய்தனர். இதற்கிடையே என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட விஜயின் உடலை நேற்று மாலை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் முன்னிலையில் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
அவரது உடலை வாங்க, புதுச்சேரியில் இருந்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் திரண்டு வந்ததால் மருத்துவமனை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் பிரேத பரிசோதனை முடிந்ததும் விஜயின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் விஜயின் உடலை அடக்கம் செய்ய புதுச்சேரிக்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் கடந்த2 நாட்களாக என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். என்கவுண்ட்டர் நடந்த எம்.புதூரில் உள்ள முந்திரி தோப்பை மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து முந்திரி தோப்பில் என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் கிடந்த மோட்டார் சைக்கிள், அரிவாள் மற்றும் போலீசார் சுட்டபோது வெளியான தோட்டா பாகங்கள் உள்ளிட்டவைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் என்கவுண்ட்டர் நடந்த சம்பம் குறித்து போலீசார் மாஜிஸ்திரேட் பிரவீன் குமாரிடம் தெரிவித்தனர். அதனை முழுமையாக கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து அந்த பகுதி முழுவதும் மாஜிஸ்திரேட் பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
- ஸ்ரீமுஷ்ணத்தில் குற்றவியல் மற்றும் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும்.
- திருச்சியில் கூடுதலாக குடும்ப நீதிமன்றம் அமைக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் பேசிய அமைச்சர் ரகுபதி, ஸ்ரீபெரும்புதூரில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,
ஸ்ரீமுஷ்ணத்தில் குற்றவியல் மற்றும் சார்பு நீதிமன்றம், திருச்சியில் கூடுதலாக குடும்ப நீதிமன்றம் அமைக்கப்படும். சென்னை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறையில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
மேலும் காஞ்சிபுரம், நாமக்கல், திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
- கடந்த 2015ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த ஒரு வழக்கு ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வருகிறது.
- வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், கண்ணன் கோர்ட்டில் ஆஜராகுமாறு பல முறை அறிவுறுத்தல் வழங்கினார்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் நகர் தெற்கு போலீஸ் நிலையத்தில் கடந்த 2015ம் ஆண்டு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கண்ணன். தற்போது இவர் டி.எஸ்.பி.யாக பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த 2015ம் ஆண்டு திண்டுக்கல்லில் நடந்த ஒரு வழக்கு ஜே.எம்.3 கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், கண்ணன் கோர்ட்டில் ஆஜராகுமாறு பல முறை அறிவுறுத்தல் வழங்கினார்.
ஆனால் அவர் ஆஜராகாமல் இருந்து வந்தார். இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதும், டி.எஸ்.பி. கண்ணன் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.






