என் மலர்
உள்ளூர் செய்திகள்
- நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 52 பேர் பங்கேற்றனர்.
- நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளையும் வென்றேடுப்போம்.
ஊட்டி:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டத்திற்கு கள ஆய்வுக்கு செல்லும் போதும், அந்த பகுதியை சேர்ந்த மாவட்ட தி.மு.க. முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் நேற்று நீலகிரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஊட்டியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 52 பேர் பங்கேற்றனர். ஆலோசனையின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரவிருக்கும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாக வேண்டும். இப்போது இருந்தே தேர்தலுக்கான வேலைகளை தொடங்க வேண்டும் என கூறினார்.
2026-ம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் நாம் தான் வெல்வோம். நீலகிரியில் உள்ள 3 தொகுதிகளையும் வென்றேடுப்போம். அதற்கான பணிகளை நீங்கள் இப்போதே செய்திட வேண்டும்.
நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பூத் கமிட்டி நிர்வாகிகளும் அதற்கான பணியை சிறப்பாக செய்ய வேண்டும்.
தமிழகத்தில் பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம், மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டம், கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை திட்டம் போன்ற பல்வேறு சிறப்பான திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த திட்டங்கள் பற்றி மக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் எடுத்து கூறி தேர்தல் பணியாற்ற வேண்டும். மாவட்டத்தில் நிர்வாகிகள் மேற்கொள்ளும் பணிகளை அவ்வப்போது தலைமைக்கு தெரிவிக்க வேண்டும் என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ.வேலு, சாமிநாதன், மா.சுப்பிரமணியன், ஆ.ராசா எம்.பி., அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் கே.எம்.ராஜூ மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அடினோ வைரஸ் என்ற வைரஸ் பாதிப்பால் ஏற்படுகிறது.
- தும்மல், இருமல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.
சென்னை:
சென்னையில் மெட்ராஸ் - ஐ கண்நோய் பாதிப்பு வேகமாக பரவுகிறது. ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் - ஐ பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
கோடை காலம் தொடங்கி இருப்பதால் தற்போது சென்னையில் மெட்ராஸ் - ஐ எனப்படும் கண் தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கண் எரிச்சல், வெளிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் இருந்து நீர் வந்து கொண்டே இருப்பது, இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் ஆகியவை மெட்ராஸ்-ஐ பாதிப்பின் அறிகுறிகள் ஆகும்.
இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கண் டாக்டரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில், சென்னையில் கண் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் - ஐ பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, கண் சிகிச்சை நிபுணர் டாக்டர் யஷ்வந்த் ஆர்.ராஜகோபால் கூறியதாவது:-
மழை மற்றும் வெயில் காலத்தில் காலநிலை மாறும்போது மெட்ராஸ் - ஐ பாதிப்பு பரவுகிறது. அடினோ வைரஸ் என்ற வைரஸ் பாதிப்பால் இது ஏற்படுகிறது. தும்மல், இருமல் மூலமாக ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவுகிறது.
நோய் பாதிப்பு ஏற்பட்டவரின் கண்களை பார்ப்பதால் இந்த நோய் பரவாது. தொடுதல் மூலமாகவே பரவும். மெட்ராஸ்-ஐ தொண்டை மற்றும் கண் ஆகிய 2 உறுப்புகளையும் பாதிக்கும்.
10 முதல் 14 நாட்களில் இது தானாகவே சரியாகிவிடும். இதை தடுக்க கைகளை கழுவுதல், முகக் கவசம் அணிவது, சத்தான உணவுகளை எடுத்தல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.
மெட்ராஸ் - ஐ நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தானாக மருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது. சிலர் கண்களுக்கு தாய்ப்பால் ஊற்றினால் சரியாகிவிடும் என்று நினைத்து அதை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு செய்தால் பாதிப்பு அதிகரித்துவிடும்.
கூட்டம் கூடும் இடங்களுக்கு செல்லுவதை தவிர்க்க வேண்டும். தற்போது பள்ளி மாணவர்கள் மூலம் அதிகமாக பரவுகிறது. எனவே, மாணவர்களை ஆசிரியர்கள் கண்காணிப்பது அவசியம். மெட்ராஸ் - ஐ பாதிப்பு அறிகுறி தெரியும் பட்சத்தில் அவர்களை உடனடியாக வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.
- கட்சி தலைமை அனுமதியின்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா-வை கடந்த மாதம் சந்தித்து பேசினார்.
எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி சென்று மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்தார்.
அ.தி.மு.க. சார்பில் ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, வேலுமணி உள்ளிட்டோர் அமித்ஷாவை சந்தித்து சென்ற நிலையில் செங்கோட்டையனும் தனியாக சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார். சென்னை சோழா ஓட்டலில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக கூறப்பட்ட சூழலில் சென்னையில் மீண்டும் சந்தித்து பேசி உள்ளார். கட்சி தலைமை அனுமதியின்றி செங்கோட்டையன் தனியே சென்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் மீண்டும் சந்தித்துள்ளது அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
- அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை காணப்படும்.
சென்னை:
வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை காணப்பட்டது.
நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் கோழிப்போர்விளை பகுதியில் 19 செ.மீட்டர் மழை பெய்துள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் மற்றும் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் பகுதியில் தலா 15 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசான மழைக்கு வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
சென்னையில் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் நாளை (திங்கட்கிழமை) முதல் அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் அதிகபட்ச வெப்ப நிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகம் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
- ராமேஸ்வரம் வந்தடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி வரவேற்றார்.
- ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடியை தமிழக அரசு சார்பில் சால்வை அணிவித்து அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- சுங்கத்துறை துணை கமிஷனர் அஜய் பிடாரி, உதவி கமிஷனர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை விமானநிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உள்பட உயரதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
அதன்படி சுங்க இலாகா முதன்மை கமிஷனராக பணியாற்றி வந்த ரமாவதி சீனிவாச நாயக், சென்னை வடக்கு சரக்கு மற்றும் சேவை வரித்துறை முதன்மை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று, கூடுதல் துணை கமிஷனர் பெரியண்ணன், சுங்க இலாகா துணை கமிஷனர்கள் சரவணன், பனீந்திர விஷ்சபியாகாதா, அஸ்வத் பாஜி, பாபுகுமார் ஜேக்கப், சுங்கத்துறை துணை கமிஷனர் அஜய் பிடாரி, உதவி கமிஷனர் சுதாகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் சென்னை-1 கமிஷனராக பணியாற்றி வந்த தமிழ்வளவன் பதவி உயர்வு செய்யப்பட்டு, சென்னை விமானநிலையத்தின் புதிய சுங்க இலாகா முதன்மை கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோன்று டெல்லி, கொல்கத்தா, விஜயவாடா, செகந்திரபாத், வதோதரா. பாட்னா, அகமதாபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பணியாற்றி வந்த 177 அதிகாரிகள் பணி இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரபூர்வமான உத்தரவை மத்திய அரசின் துணை செயலாளர் ஷீரேஷ் குமார் கவுதம் பிறப்பித்துள்ளார்.
- ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மாலை 5.30 மணிக்கு விரைவு ரெயில் புறப்படுகிறது.
- ராமேசுவரத்தில் இருந்து கோவைக்கு வருகிற 9-ந் தேதி இரவு 7.30 மணிக்கு விரைவு ரெயில் புறப்பட்டு செல்கிறது.
ராமேசுவரத்தில் புதிய பாம்பன் ரெயில் பாலம் ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
முன்னதாக, பாலம் கட்டுமான பணி காரணமாக ராமேசுவரம் செல்ல வேண்டிய ரெயில்கள் மண்டபம் வரையில் மட்டுமே இயக்கப்பட்டது.
இந்த நிலையில், ரெயில் பாலம் இன்று திறக்கப்பட உள்ளதால், மீண்டும் ரெயில்கள் ராமேசுவரம் வரையில் இயக்கப்பட உள்ளன. அந்த வகையில், ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு நாளை மதியம் 2.50 மணிக்கு விரைவு ரெயில் புறப்படுகிறது. மறுமார்க்கமாக, திருச்சியில் புறப்படும் விரைவு ரெயில் ராமேசுவரத்துக்கு நாளை பகல் 12.25 மணிக்கு வருகிறது.
அதேபோல், ராமேசுவரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை மாலை 5.30 மணிக்கு விரைவு ரெயில் புறப்படுகிறது. மேலும், கோவையில் புறப்படும் ரெயில் வருகிற 8-ந் தேதி காலை 6.15 மணிக்கு ராமேசுவரத்துக்கு வருகிறது.
ராமேசுவரத்தில் இருந்து கோவைக்கு வருகிற 9-ந் தேதி இரவு 7.30 மணிக்கு விரைவு ரெயில் புறப்பட்டு செல்கிறது. ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயில் நாளை ராமேசுவரத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்படுகிறது. மறுமார்க்கமாக மதுரை-ராமேசுவரம் ரெயில் காலை 10.45 மணிக்கு ராமேசுவரம் வந்தடைகிறது. பின்னர், காலை 11.40 மணிக்கு மீண்டும் மதுரை புறப்பட்டு செல்கிறது. இவைகள் உள்பட மொத்தம் 28 ரெயில் சேவைகள் புதிய பாம்பன் பாலம் வழியே ராமேசுவரத்துக்கு இயக்கப்பட உள்ளன.
- பொருத்தமற்ற பாடப் பகுதிகளை நீக்கி சீரமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
- பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கான பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்னை:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை 2017-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்கள்தான் தற்போது வரையில் நடைமுறையில் இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் புத்தகங்களில் பாடப் பகுதிகள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் மாணவ- மாணவிகள் படிப்பதில் சிரமத்தை சந்திப்பதாகவும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் கல்வித்துறை வசம் வந்து சேர்ந்தன. இதனையடுத்து அந்த பாடப் பகுதிகளை குறைக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து, அதற்கான பணிகளை தொடங்கியது.
குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான தமிழ் பாடப்புத்தகங்களில் உள்ள நீண்ட பாடப் பகுதிகளை குறைக்கவும், பொருத்தமற்ற பாடப் பகுதிகளை நீக்கி சீரமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் அடிப்படையில் அதற்கான வல்லுனர்கள், பாடநூல் உருவாக்க குழுவினர் ஆலோசனை மேற்கொண்டு 1, 2-ம் வகுப்பு பாடநூல்களில் உரிய திருத்தங்கள் மட்டும் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 3, 4 மற்றும் 5-ம் வகுப்பு பாடநூல்களில் அதிக பக்கங்கள் கொண்ட பாடப்பகுதிகளை குறைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.அதேபோல், 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு பாடநூல்களில் உள்ள 9 இயல்களை 8 ஆகவும், 9, 10-ம் வகுப்பு பாடநூல்களில் 9 இயல்களை 7 ஆகவும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பு பாடநூல்களில் உள்ள 8 இயல்களை 6 ஆகவும் குறைத்து இருக்கின்றனர்.
அவ்வாறு சீரமைக்கப்பட்ட 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்கள் அச்சிடுவதற்கான பணிகள் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும், 2025-26-ம் கல்வியாண்டு முதல் இந்த பாடப் புத்தகங்கள் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பிரதமரை அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள்.
- ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் புதிதாக ரெயில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே 100 ஆண்டுகளை கடந்து சேவையாற்றிய பழைய ரெயில் பாலத்துக்கு அருகிலேயே இந்த பாலம் கட்டப்பட்டு உள்ளது. பழைய பாலத்தில் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, சில ஆண்டுகள் ஆகிவிட்டதால் புதிய பாலத்தில் போக்குவரத்து எப்போது தொடங்கும் என தமிழகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய பாலத்தில் ரெயில் போக்குவரத்து இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி, நேரடியாக வந்து திறந்து வைக்கிறார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, அனுராதபுரம் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் இன்று காலை 10.40 மணி அளவில் புறப்படுகிறார். பகல் 11.40 மணி அளவில் அவர் வரும் ஹெலிகாப்டர், மண்டபம் முகாம் தளத்தில் வந்து இறங்குகிறது. பிரதமரை அமைச்சர்கள், அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் வரவேற்கிறார்கள்.
அங்கிருந்து, காரில் பகல் 12 மணி அளவில் பிரதமர் மோடி புறப்படுகிறார். சற்று நேரத்தில் பாம்பன் ரோடு பாலத்தின் மையப்பகுதிக்கு வந்து, அங்கு அமைத்துள்ள மேடையில் இருந்தபடி புதிய ரெயில் பாலத்தை திறந்துவைத்து, ரெயில் போக்குவரத்தையும் தொடங்கி வைக்கிறார்.
அப்போது புதிய தூக்குப்பாலம் திறக்கப்பட்டு இந்திய கடலோர காவல் படையின் ரோந்து கப்பல், பாலத்தை கடப்பதை பார்வையிடுகிறார்.
இதை தொடர்ந்து பகல் 12.25 மணி அளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு 12.40 மணி அளவில் ராமேசுவரம் கோவிலுக்கு செல்கிறார்.
பின்னர் பஸ் நிலையம் அருகே உள்ள மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு 1.30 மணி அளவில் வருகிறார். பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசுகிறார்.
அங்கிருந்தபடி ராமேசுவரம்-தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மண்டபம் ஹெலிகாப்டர் தளத்திற்கு மீண்டும் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதுரைக்கு புறப்படுகிறார்.
மாலை 4 மணி அளவில் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதையொட்டி, மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் வருகையையொட்டி ராமநாதபுரத்தில் இருந்து ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பகல் 11 முதல் பிற்பகல் 3 மணி வரை பொது போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ஆட்சியின்போது மக்களுக்கு இலவசமாக வழங்கிய வண்ண தொலைக்காட்சி பெட்டி.
- பாமரமக்களின் அறியாமையை போக்குவதற்கான மந்திரக்கோல்.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தனது ஆட்சியின்போது மக்களுக்கு இலவசமாக வழங்கிய வண்ண தொலைக்காட்சி பெட்டியை மக்கள் இன்னமும் தங்களின் வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டிருக்கும் புகைப்படத்துடன் கூடிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அத்துடன் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
இலவசம் என்றார்கள்...
பொழுதுபோக்கு என்றார்கள்...
கலைஞருக்கு மட்டுமே தெரிந்தது அது,
பாமரமக்களின் அறியாமையை போக்குவதற்கான மந்திரக்கோல் என்று,
பெண்கள் வெளியுலகை எளிதில் எட்டி பார்ப்பதற்கு உதவும் ஜன்னல் என்று.
உலக செய்திகளை, உலகத்தின் வளர்ச்சியை, மனிதனின் படைப்புகளை தமிழர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஒளிக்கீற்று என்று.
தமிழினத்தை உலகம் போற்றும் மாபெரும் இனமாகவும் தமிழ்நாட்டை உலகே வியந்து பார்க்கும் வளர்ச்சியின் விளைநிலமாகவும் மாற்றக் கூடிய அற்புத விளக்கு என்று.
இலவசம் இல்லங்க அது.
மக்கள் நல திட்டம்.
பொழுதுபோக்கு இல்லைங்க அது,
பொது அறிவுப் பெட்டகம்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- கார் மூலமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டருக்கு சென்றார்.
- நீலகிரிக்கு சென்றுள்ள முதலமைச்சருக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று நீலகிரி மாவட்டத்திற்கு கள ஆய்வுக்காக சென்றுள்ளார்.
இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு கோவை விமான நிலையம் சென்றடைந்தார்.
அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கார் மூலமாக மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டருக்கு சென்றார்.
அங்கு அவர் சிறிது நேரம் தங்கி ஓய்வெடுத்துவிட்டு, மாலை 5 மணிக்கு பிளாக்தண்டரில் இருந்து கார் மூலமாக நீலகிரிக்கு சென்றார்.
நீலகிரிக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரி மாவட்ட தி.மு.க சார்பில் 3 இடங்களில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர், மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலையில் உள்ள குஞ்சப்பனை என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருந்த பகுதியில் நடைபெற்று வரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
- டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.
- சென்னை அணியை தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கேப்டனாக களம் இறங்கினார்.
ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக களம் இறங்கினார். டேவன் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே vs டெல்லி கேப்பிட்டல்ஸ் போட்டியை தோனியின் பெற்றோர் கண்டுகளித்து வருகின்றனர். அவர்களுடன். தோனியின் மனைவி சாக்ஷி மற்றும் அவர்களது மகளும் போட்டியை கண்டு வருகின்றனர்.
சேப்பாக்கத்தில் தோனியின் பெற்றோர் முதல்முறையாக அவரது ஆட்டத்தை நேரில் காண வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






