என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
    • திமுக எம்பி கனிமொழி இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

    அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார்.

    அப்போது அவர்," அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என்றார்.

    இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, அதிமுக- பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

    அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கனிமொழி ஆதங்கத்துடன் பதில் அளித்தார்.

    அப்போது அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழகத் தலைவராக அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ஒருவருக்கு எத்தனை முறை தண்டனை தருவது என்ற கேள்வி இருக்கிறது. எதுவாக இருந்தாலும் முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.

    • அண்ணா, ஜெயலலிதா இழிவுபடுத்தியவரை அழைத்து எடப்பாடி பழனிசாமி விருந்து கொடுத்துள்ளார்.
    • மத்திய பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணிய வைக்கிறது.

    தமிழகத்தில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் என்டிஏ கூட்டணி அமைத்து மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று அறிவித்தார்.

    இந்நிலையில், அதிமுக- பாஜக குறித்து திமுக எம்பி கனிமொழி விமர்சனம் செய்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    பாஜகவுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி வைத்தது அதிமுகவுக்கு செய்துள்ள் மிகப்பெரிய துரோகம். அதிமுக மட்டுமல்ல தமிழ்நாடு மக்களுக்கும் இபிஎஸ் துரோகம் இழைத்துள்ளார்.

    அதிமுக- பாஜக இடையே கள்ளக் கூட்டணி இருந்தது என்பது உண்மையாகிவிட்டது. வக்பு மசோதாவை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு அதை நிறைவேற்றியவர்களுடன் இபிஎஸ் கூட்டணி வைத்துள்ளார்.

    பாஜகவுடன் கூட்டணி வைத்ததன் மூலம் சிறுபான்மையினருக்கு எதிரானவர் இபிஎஸ் என்பது உறுதியாகியுள்ளது. அண்ணா, ஜெயலலிதா இழிவுபடுத்தியவரை அழைத்து எடப்பாடி பழனிசாமி விருந்து கொடுத்துள்ளார்.

    மத்திய பாஜக அரசு சிபிஐ, அமலாக்கத்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணிய வைக்கிறது. அதிமுக தலைமையில் கூட்டணி என்பது உண்மையில் கண்துடைப்பு. கூட்டணிக்கு தலைமை என கூறிவிட்டு செய்தியாளர் சந்திப்பில் இபிஎஸ்க்கு பேசக் கூட அனுமதி இல்லை.

    அமித் ஷா கூட்டணி பற்றி அறிவிக்க எடப்பாடி பழனிசாமி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்தான் கூட்டணி அறிவிப்பார்கள். ஆனால், எடப்பாடி பழனிசாமி மவுனம் காத்தது ஏன்?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
    • தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு.

    சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

    அப்போது, அமித் ஷா உடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர்.

    இந்நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமித் ஷா அறிவித்தார்.

    அதிமுக- பாஜக கூட்டணி குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    அதிமுக - பாஜக கூட்டணிதான் அமையும் என்பது ஏற்கனவே எல்லோரும் யூகித்த ஒன்றுதான். அது இன்று நிறைவேறி இருக்கிறது.

    விஜய் போன்ற புதிய அரசியல் கட்சி மற்றும் மற்ற அமைப்புகளுடன் இணைந்து அதிமுக கூட்டணி அமைக்கக் கூடாது என்பதில் பாஜக, ஆர்எஸ்எஸ் மிக கவனமாக இருந்தது.

    இன்று ஒரு அழுத்தம், நெருக்கடியின் அடிப்படையில்தான் அதிமுக - பாஜகவுடன் இணையும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழகத்தில் ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளது.
    • மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே நீட் தேர்வு விவகாரத்தை திமுக பேசுகிறது.

    திமுக ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

    மேலும், செய்தியாளர்கள் சந்திப்பின்போது திமுக மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் ஊழலை மறைக்கவே மும்மொழிக்கொள்கை பிரச்சினையை திமுக கையில் எடுத்துள்ளது. மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பவே நீட் தேர்வு விவகாரத்தை திமுக பேசுகிறது.

    திமுக ரூ.39 ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது. ரூ.39,000 கோடி டாஸ்மாக் ஊழல் உள்ளிட்டவற்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதலமைச்சர் உதயநிதி பதில் சொல்ல வேண்டும்.

    இலவச வேட்டி வழங்குவதிலும் ஊழல், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திலும் ஊழல் செய்துள்ளது. மணல் ஊழல், எரிசக்தி ஊழல் என பல்வேறு ஊழல்களை திமுக செய்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜகவின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சென்ற அண்ணாமலையின் பணி முன் உதாரணமானது.
    • பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே விருப்ப மனு பெறப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்காக அண்ணாமலை ஆற்றிய பணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் புகழ்ந்து பகிர்ந்துள்ளார்.

    அப்போது, பாஜகவின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் என அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், பாஜகவின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சென்ற அண்ணாமலையின் பணி முன் உதாரணமானது.

    பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

    இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் அமித் ஷா கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே விருப்ப மனு பெறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பாஜக பிரிவின் தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பரியது.

    பாஜக கட்சியின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திமுக அரசு சானாதனம், மும்மொழிக் கொள்ளை, தொகுதி மறுசீரமைப்பு போன்ற பிரச்சினைகள் எழுப்பி கொண்டிருக்கிறது.
    • மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே நீட் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினைகளை பயன்படுத்துகிறது.

    மத்திய உள்துறை அமைச்சர் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி 2026 தேர்தல் சந்திக்கும் என்றார். இதன்மூலம் அதிமுக- பாஜக கூட்டணியை உறுதி செய்தார்.

    ஓ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் குறித்த கேள்விக்கு அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிட விரும்பவில்ல என்றார்.

    மேலும், நீட் தேர்வு பிரச்சனையை திமுக தொடர்ந்து எழுப்பி வருகிறதே? என்ற கேள்விக்கு அமித் ஷா "திமுக அரசு சானாதனம், மும்மொழிக் கொள்ளை, தொகுதி மறுசீரமைப்பு போன்ற பிரச்சினைகள் எழுப்பி கொண்டிருக்கிறது.

    ஊழல், மோசடி போன்ற முக்கிய பிரச்சினைகளை திசை திருப்புவதற்காக இது போன்ற பிரச்சனைகளை எழுப்பி வருகிறது.

    மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக மட்டுமே நீட் மற்றும் தொகுதி மறுசீரமைப்பு பிரச்சினைகளை பயன்படுத்துகிறது" என்றார்.

    • 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டி என அறிவிப்பு.
    • யார், யாருக்கு எத்தனை தொகுதி, ஆட்சியமைக்கும் முறை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

    அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணியில் போட்டி என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அமித்ஷா மேலும் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    தேசிய அளவில் மோடி தலைமையிலும் மாநில அளவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் தேர்தலை சந்திக்க உள்ளோம்.

    பாஜக, அதிமுக கூட்டணி நிச்சயம் தமிழகத்தில் ஆட்சியமைக்கும். ஜெயலலிதா காலம் முதலே, அதிமுகவுடன் இணைந்து பாஜக பயணித்து வருகிறது.

    அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் பாஜக உறுப்பினர் அமைச்சர் ஆவாரா என்ற கேள்விக்கு வெற்றிப்பெற்ற பிறகு பதில் சொல்கிறோம்.

    அதிமுக தரப்பில் இருந்து எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. ஓபிஎஸ், டிடிவி தினகரன் கூட்டணி என்பது அதிமுகவின் தனிப்பட்ட பிரச்சினை. அதில் தலையிட முடியாது.

    அதிமுகவின் தனிப்பட்ட கட்சி விஷயங்களில் பாஜக பங்கேற்காது, தேர்தல் விவகாரத்தில் மட்டுமே பங்கேற்போம்.

    யார், யாருக்கு எத்தனை தொகுதி, ஆட்சியமைக்கும் முறை குறித்து பின்னர் முடிவு எடுக்கப்படும்.

    அதிமுக பாஜக கூட்டணியால் இருவருக்குமே பலன் கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
    • பாஜக அதிமுக கூட்டணி அமைந்து விட்டதாக அமித்ஷா அறிவித்துள்ளார்.

    சென்னை ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.

    அப்போது, பேசிய அமித்ஷா பங்குனி உத்திர நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும், பாஜக அதிமுக கூட்டணி அமைந்து விட்டதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

    மேலும், தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    • அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்தார் ராமதாஸ்.
    • பாமக நிறுவனர் ராமதாசை சமாதானப்படுத்தும் வகையில் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    பாட்டாளி மக்கள் கட்சி அரசியல் பேரியக்கத்தை தொடங்கிய நிறுவனர் ராமதாஸ் ஆகிய நான், நிறுவனர் என்பதோடு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பொறுப்பையும் நானே ஏற்றுகொள்கிறேன்.

    தேர்தலின் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்துவரும் அன்புமணி ராமதாசை பாட்டாளி மக்கள் கட்சியின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன் என்று நேற்று அவர் அறிவித்தார்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாசின் இந்த அறிவிப்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அன்புமணியை கட்சி தலைவர் பதவியில் நீக்கியது தொடர்பாக தலைவர் ராமதாசை சந்தித்து சமாதானம் செய்வதற்காக தைலாபுரத்திற்கு ஜி.கே.மணி சென்றார்.

    பாமக நிறுவனர் ராமதாசை சமாதானப்படுத்தும் வகையில் ஜி.கே.மணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே.மணி கூறுகையில், "ராமதாசுடன் என்ன பேசினேன் என்பது குறித்து வெளியில் சொல்ல முடியாது. விரைவில் நல்ல அறிவிப்பு வரும்.

    நான் சொன்ன அனைத்தையும் ராமதாஸ் கேட்டுக் கொண்டார்" என்றார்.

    • சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
    • மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு சென்னை வந்தார். இதனை தொடர்ந்து இன்று மதியம் 12 மணிஅளவில் அமித்ஷா செய்தியாளர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    பின்னர், மயிலாப்பூரில் அமைந்துள்ள ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கு அமித்ஷா சென்றார். சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக குருமூர்த்தி- அமித்ஷா இருவர் மட்டுமே ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்போது கூட்டணி தொடர்பாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதைதெடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்திப்பார் என்று கூறப்பட்டது.

    இதற்காக, செய்தியாளர் சந்திப்பு அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி. பேனரில் நயினார் நாகேந்திரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. எல்.இ.டி. திரையில் ஜெ.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

    அதனால், செய்தியாளர் சந்திப்பு அரங்கில் இதுவரை யாரும் வராததால் குழப்பம் நீடித்து வருகிறது.

    இந்நிலையில், மத்திய அமைச்சர் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு.
    • வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தகவல்.

    தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான அருண் நேரு மற்றும் அமைச்சரின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு தொடர்புடைய 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள கே.என். ரவிச்சந்திரன் வீட்டில் 3 நாளாக நடைபெற்று வந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.

    அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்து சென்றதாக தகவல் வெளியானது.

    சோதனைகள் முடிவடைந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அலுவலகத்திற்கு அழைத்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

    இந்த நிலையில் நெஞ்சுவலி மற்றும் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.
    • ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வௌியாகிறது.

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    அண்ணாமலை மாற்றப்படுவாரா? அல்லது அவரே தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்ற பேச்சும் பலமாக அடிபட்டது. அதுக்கு காரணம் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சிப்பதுதான்.

    இதுதொடர்பாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தலைமையில் கூட்டணிக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலையையும் அமித்ஷா அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதைதொடர்ந்து, அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபட்டதை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்தித்தார்.

    இதற்கிடையே, தேர்தலில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.

    இந்த பரபரப்புக்கு இடையில் இன்று தமிழக பாஜக தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.

    இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.

    தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாநில துணை தலைவருமான சக்கரவர்த்தியிடம் நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை வழங்கினார். நயினார் நாகேந்திரன் தவிர வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செயயப்படவில்லை.

    இதனால், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவர் குறித்து நாளை மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வௌியாகிறது.

    ×