என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
    • குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல.

    சென்னை:

    கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இருப்பினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார்.

    இதனை தொடர்ந்து, அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே, சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் பொன்முடி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யக்கோரி வழக்கறிஞர் ஜெகநாத் என்பர் உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் மக்கள் பிரதிநிதி என்ற முறையில் பொன்முடியின் பேச்சு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பொன்முடியின் பேச்சு கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது. குறிப்பிட்ட மதத்தை பற்றி அவதூறாக பேசுவது கருத்து சுதந்திரம் அல்ல. மக்கள் பிரதிநிதி என்ற முறையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது. பொன்முடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் அளித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இம்மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இளம்பெண் வந்த பஸ்சை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    நெல்லை:

    கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண் பயணம் செய்தார்.

    அந்த இளம்பெண் கோவையில் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில், விடுமுறையில் ஊருக்கு வந்து கொண்டிருந்தார். அந்த பஸ்சில் கண்டக்டராக கோவையை சேர்ந்த மகாலிங்கம் (வயது 43) என்பவர் பணியில் இருந்தார்.

    இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் அந்த ஐ.டி. நிறுவன பெண்ணுக்கு பஸ் கண்டக்டர் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், செல்போனில் தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் உறவினர்களுடன் புறப்பட்டு நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்துள்ளனர்.

    இந்நிலையில் பஸ் இன்று அதிகாலை 4 மணி அளவில் நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. உடனே இளம்பெண் வந்த பஸ்சை அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

    தகவல் அறிந்து அங்கு புறக்காவல் நிலைய பணியில் இருந்த போலீசார் விரைந்து வந்தனர். கண்டக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகாரையடுத்து மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனே போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணிடம் விசாரித்தனர். அதில் கண்டக்டர் மகாலிங்கம் அந்த இளம்பெண்ணுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து மகாலிங்கத்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு அரசு பஸ் கண்டக்டர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறினாள்.
    • குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் அடுத்த கன்னிவாடி அருகே உள்ள சுரைக்காய் பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சினேகா. இவர்களது மகள் தர்ஷிகா ஸ்ரீ (வயது2½). அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடியில் தர்ஷிகாஸ்ரீ படித்து வருகிறார். இங்கு அதே பகுதியைச் சேர்ந்த 13 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    தர்மத்துப்பட்டியை சேர்ந்த பாப்பாத்தி பணியாளராக உள்ளார். அவருக்கு உதவியாளராக சுரக்காய்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் இருந்து வருகிறார். தினந்தோறும் சினேகா, தனது மகள் தர்ஷிகா ஸ்ரீயை காலையில் அங்கன்வாடிக்கு அழைத்து சென்றும் மாலை 3 மணிக்கு மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று அங்கன்வாடியில் இருந்து வீட்டிற்கு வந்த தர்ஷிகா ஸ்ரீ சோர்வடைந்து காணப்பட்டாள். இரவு வீட்டிற்கு வந்த தந்தை ராஜபாண்டியிடம், அழுது கொண்டே ஆயம்மா கழுத்தில் கரண்டியால் சூடு வைத்ததாக கூறினாள்.

    இதயைடுத்து காயத்திற்கு மருந்து தடவி தூங்க வைத்தனர். இதனையடுத்து செல்லாம்மாள் வீட்டிற்கு சென்று குழந்தையின் பெற்றோர் இது குறித்து கேட்டபோது, ஆமாம், உனது குழந்தை சேட்டை செய்ததால் சூடு வைத்தேன் என்று தெரிவித்தார். இதனையடுத்து ராஜபாண்டி, கன்னிவாடி போலீசில் இதுகுறித்து புகார் அளித்தார்.

    அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே குழந்தைக்கு சூடு வைத்த சம்பவம் மற்ற குழந்தைகளின் பெற்றோருக்கும் தெரிந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்பு வழிபாட்டுடன் பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தார்.
    • நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அடுத்த மாதம் 11-ந்தேதி மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழா மாநாடு-2025 நடைபெற உள்ளது.

    இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 52 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

    இந்தநிலையில் சித்திரை முழுநிலவு இளைஞர் பெருவிழாவை முன்னிட்டு இன்று காலை திருவிடந்தையில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று சிறப்பு வழிபாட்டுடன் பந்தல்கால் நட்டு தொடங்கி வைத்தார்.

    இதில் கட்சியின் பொது செயலாளர் வடிவேல் ராமன், கவுரவ தலைவர் ஜி.கே.மணி, வழக்கறிஞர் பாலு, பொருளாளர் திலகபாமா, முன்னாள் எம்.பி. ஏ.கே.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்தித்தார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இந்த கேள்விகளுக்கு எல்லாம் இன்னொரு நாள் பதில் சொல்றேன் என்று கூறி நழுவிச் சென்றார். 

    • வீட்டையும், நிலத்தையும் கேட்டு தகராறு.
    • கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் குமரன் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 39). லாரி டிரைவர். இவரது முதல் மனைவி ரேவதி (32). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்நிலையில் கார்த்தி 2-வதாக சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவுடன் கார்த்தி வசித்து வருகிறார். இதனால் ரேவதி கடந்த 4 ஆண்டுகளாக கணவனை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் ரேவதியின் திருமணத்தின்போது அவரது பெயரில் கார்த்தி நிலம் வாங்கி வீடு கட்டி கொடுத்திருந்தார். இதனால் வீடு, சொத்து ரேவதியின் பெயரில் உள்ளது. தற்போது இந்த வீட்டையும், நிலத்தையும் ரேவதியிடம் திருப்பி கேட்டு கார்த்தி தகராறு செய்து வந்தார்.

    கார்த்தியிடம் ரேவதி தனது 2 குழந்தைகளுக்கும் இந்த வீடு, நிலம் பயன்படும். சொத்து, வீடு அவர்களுக்கு இல்லை என்றால் அவர்களின் எதிர்காலம் என்ன ஆவது?, அவற்றை எழுதி கொடுத்தால் 2-வது மனைவி சங்கீதாவுக்கு கொடுத்து விடுவாய்.

    மேலும் என்னையும், குழந்தையையும் வீட்டை விட்டு துரத்தி விடுவாய் என கூறி சொத்து மற்றும் பட்டா உள்ளிட்டவை மாற்றம் செய்து தர முடியாது என மறுத்து விட்டார். ஆனால் நான் வாங்கி கொடுத்த நிலத்தையும், வீட்டையும் எனது பெயரில் மாற்றி எழுதி கொடு என்று கார்த்தி அடிக்கடி தொல்லை கொடுத்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று அதிகாலையில் ரேவதியின் வீட்டிற்கு கார்த்தி வந்ததாக கூறப்படுகிறது. அப்போது சொத்து தொடர்பாக கணவன்-மனைவி இடையே மோதல் வெடித்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கார்த்தி அரிவாளால் ரேவதியின் தலையில் வெட்டி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிகிறது.

    இதில் மூளை சிதறிய நிலையில் ரேவதி ரத்த வெள்ளத்தில் வீட்டிற்குள் பிணமாக கிடந்தார். அவரது 2 குழந்தைகளும் பயத்தில் அழுதனர்.

    ரேவதியின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் தொடர்பாக மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜ் மற்றும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீசார் கூறுகையில் கார்த்தி தலைமறைவாக உள்ளார். ஆகவே ரேவதியை அவர் தான் கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் உள்ளது. தலைமறைவாக உள்ள அவரை வலைவீசி தேடி வருகிறோம். அவர் பிடிபட்ட பிறகு தான் இந்த கொலையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது? என முழு விபரங்களும் தெரியவரும் என்றனர்.

    முதல் மனைவியை சொத்துக்காக கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் மேட்டூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    ஒகேனக்கல்:

    கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து கடந்த ஒரு வாரமாக குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 1500 கனஅடியாக வந்தது.

    தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல், பிலிகுண்டுலு உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.

    இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 2 ஆயிரம் கன அடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் பாறைகளுக்கு நடுவே விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • சென்னையில் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது
    • காலை அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

    தலைநகர் சென்னையில் கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதனால் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

    இந்நிலையில், சென்னையில் அடுத்த 1 மணி நேரத்தில் மிதமானது முதல் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

    • கடந்த 10-ந்தேதி பூக்குழி இறங்குதல் விமரிசையாக நடந்தது.
    • பூக்குழியில் நிலைதடுமாறி விழுந்தார்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை தெற்கு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கேசவன் (வயது 56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதற்கிடையே அந்த பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடை பெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 10-ந்தேதி பூக்குழி இறங்குதல் விமரிசையாக நடந்தது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    அதேபோல் ரியல் எஸ்டேட் அதிபரான கேசவனும் வேண்டுதல் நிறைவேற பூக்குழி இறங்கினார். அப்போது அவர் நெருப்புடன் கூடிய மரக்கட்டைகள் நிரப்பப்பட்டு இருந்த பூக்குழியில் நிலைதடுமாறி விழுந்தார்.

    இதைப்பார்த்த சக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தயார் நிலையில் இருந்த மீட்பு குழுவினர் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    உடலின் பெரும்பாலான பகுதியில் பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கேசவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி விக்னேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
    • இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இதன்பின் பேசிய முதலமைச்சர்,

    * மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை தி.மு.க. அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

    * மாற்றுத்திறனாளி என்ற சொல்லை முதன் முதலில் உருவாக்கியவர் கலைஞர் தான்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை ரூ.1,432 கோடியாக உயர்த்தி உள்ளோம்.

    * மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக நிதி தருவதில் தமிழ்நாடு தான் முன்னணி.

    * மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும்.

    * உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் உரிமையை நிலைநாட்ட அரசு உறுதியாக உள்ளது.

    * அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுவர்.

    * புதிய அறிவிப்பின் மூலம் 12,000 மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வாய்ப்பு கிடைக்கும்.

    * இந்த சட்ட முன்வடிவை அறிமுகம் செய்வதில் வாழ்நாள் பெருமை அடைகிறேன்.

    * அருந்ததியர்களுக்கான உள் இட ஒதுக்கீடு சட்ட முன்வடிவை முன்மொழியும் வாய்ப்பை கலைஞர் எனக்கு வழங்கினார். அப்போது எப்படி பெருமை அடைந்தேனோ, அதே பெருமையை இப்போது அடைகிறேன் என்றார்.

    இதனை தொடர்ந்து சட்டமுன் வடிவை நிறைவேற்ற சபாநாயகர் அப்பாவு குரல் வாக்கெடுப்பை நடத்தினார். இந்த சட்டமுன்வடிவிற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து சட்டமுன்வடிவு நிறைவேற்றப்பட்டது. 

    • அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது.
    • 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியில் அமர வேண்டும் என்பதே அ.தி.மு.க. பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் கணக்காக உள்ளது.

    கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய அ.தி.மு.க., தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் அந்தக் கட்சிக்கு தேர்தலில் தோல்வியே கிடைத்தது.


    இதைத் தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் வலுவான கூட்டணிக்கு காய் நகர்த்திய எடப்பாடி பழனிசாமி தி.மு.க. அணியில் இருந்து கட்சிகளை இழுத்து புதிய கூட்டணியை அமைத்து விடலாம் என திட்டமிட்டார். ஆனால் அதற்கான சூழல் ஏற்படவே இல்லை .

    இந்த நிலையில் தான் அ.தி.மு.க. மீண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் சேர உள்ளன.

    ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த டி.டி.வி. தினகரன் ஓ. பன்னீர்செல்வம், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன் ஆகியோரும் இந்த கூட்டணியிலேயே தொடர உள்ளனர்.

    இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய கூட்டணி மெகா கூட்டணியாகவே மாறி இருக்கிறது. இப்படி அ.தி.மு.க. தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் எத்தனை இடங்களை குறி வைத்து காய் நகர்த்தி வருகின்றன என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.

    2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பா.ஜ.க. 20 தொகுதிகளில் போட்டியிட்டது. தற்போது இரண்டு மடங்கு கூடுதலாக அந்த கட்சி தொகுதிகளை எதிர்பார்க்கிறது. இதன் மூலம். 40 தொகுதிகளில் களம்மிரங்குவதற்கு அந்த கட்சி திட்டமிட்டு உள்ளது.

    பா.ம.க.விற்கு 15 தொகுதிகள் தேமுதிகவுக்கு 12 தொகுதிகள் தினகரனுக்கு 10 தொகுதிகள் என முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஓ.பன்னீ செல்வதற்கு தற்போது நான்கு எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களை தக்க வைக்கும் வகையில் நான்கு இடங்களை ஒதுக்க லாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தவிர மீதமுள்ள சிறிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகளை ஒதுக்கி கொடுப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    கூட்டணியில் 150 இடங் களில் போட்டியிடுவதற்கு அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ள தன் மூலம் மீதமுள்ள 84 தொகுதிகளையும் பார திய ஜனதா கட்சியிடம் கொடுத்துவிட்டு அவர்கள் மூலமாக மற்ற கட்சிகளுக்கு பகிர்ந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக வும் கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. , பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு கள் எவை? எவை? என்பது பற்றிய பட்டியலை தயா ரித்து வைத்துள்ளன.அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி உறுதியாகி இருப்பது போல மற்ற கட்சிகளுடனும் கூட்டணியை இறுதி செய்த பிறகு யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என் கிற விவரங்களை தேர்தல் நேரத்தில் வெளியிடுவ தற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் கூடுதல் தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க. திட்டமிட்டு உள்ளது.அதே நேரத்தில் பாரதிய ஜனதா கட்சியும் தங்களுக்கு செல் வாக்கு உள்ள பகுதியான கொங்கு பகுதியில் குறிப் பிடத்தக்க தொகுதிகளை கேட்டு பெற்று போட்டியிட வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளது. இதே போன்று பாட்டாளி மக்கள் கட்சி வடமாநிலங்களில் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை பெறுவதிலும் கவனம் செலுத்த தொடங்கி யுள்ளது.

    இப்படி கூட்டணியில் உள்ள பெரிய கட்சிகள் தங்களுக்கு தேவையான இடங்களை பெறுவதில் தீவிரம் காட்ட தொடங்கி யுள்ளது.இதன்மூலம் அ.தி.மு.க., பா.ஜ.க, கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணியாக விரைவில் இறுதி செய்யப் பட்டு தொகுதி பங்கீடும் விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    • தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • அமைச்சர், பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார்

    தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஒரு உள் அரங்கக் கூட்டத்தில், தகாத பொருளில் தவறான சொற்களைப் பயன்படுத்தி அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து அமைச்சர், பொன்முடி மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். அதில், "இந்தத் தகாத கருத்தை நான் பேசியது குறித்து உடனடியாக மனப்பூர்வமாக வருந்தினேன். நீண்ட காலம் பொது வாழ்க்கையில் உள்ள எனக்கு இதுபோன்ற தடுமாற்றம் ஏற்பட்டது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். பலருடைய மனதைப் புண்படுத்தும் வகையில் இப்பேச்சு அமைந்து விட்டது குறித்தும், அவர்கள் தலைகுனியும் சூழல் ஏற்பட்டது குறித்தும் நான் மிகவும் மனம் வருந்துகிறேன்.மனம் புண்பட்ட அனைவரிடமும் நான் பேசிய பேச்சுக்கு மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், பெண்களை இழிவாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே அதிமுக மகளிர் அணியினர் கையில் செருப்புடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி, கோகுல இந்தியா உள்ளிட்ட முக்கிய பெண் நிர்வாகிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

    • விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
    • விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30-வது தேசிய மாநாடு நேற்று தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் நிறைவு நாளான நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த மாநாடு அகில இந்திய விவசாய சங்க தலைவர் ராஜன் கிஸ்சி சாகர் தலைமையில் நடைபெறுகிறது. இதன் தொடக்க நாளில் தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கேரளா வேளாண்மை துறை அமைச்சர் பிரசாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், செல்வராஜ் எம்.பி. மற்றும் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசியதாவது:-

    டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் அத்தகைய போராட்டம் நடக்காத அளவிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பாக வழி நடத்தி வருகிறார். வேளாண் துறைக்கு தனிபட்ஜெட் அறிவித்தார். பயிர்க்காப்பீடு திட்டம், நெல் கொள்முதல் ஊக்கத்தொகை தந்துள்ளார். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுபோன்ற பல்வேறு திட்டங்களை தந்து விவசாயிகளை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளார். கடைமடை பகுதிக்கு தண்ணீர் வர வேண்டும் என்பதற்காக தூர்வாரும் பணிகளை செய்து தந்துள்ளார்.

    தமிழகத்தில் விவசாயிகள் தலைநிமிர்ந்து வாழும் நிலையை முதல்-அமைச்சர் உருவாக்கி கொடுத்துள்ளார். அதனால் தான் தமிழகத்தில் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

    ×