என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு அரசியல் தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
    • தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்.

    சென்னை:

    மாவீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலர், கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். மேலும் தீரன் சின்னமலையின் வீரத்தை போற்றியும் வருகின்றனர்.

    இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தலைவர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தாய் மண்ணை மீட்க, தனது அசாத்திய வீரத்தால் அந்நிய ஆதிக்கத்தை வென்றெடுத்த மாவீரர்.

    இறுதி மூச்சுவரை விடுதலைக்காகப் போராடி, துணிச்சலோடு தூக்குமேடை ஏறி, விடுதலை வேட்கையை விதைத்த தீரர், மாவீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளில், அவரின் தியாகத்தை நினைவுகூர்ந்து, அவரைப் போற்றி வணங்குகின்றேன் என்று கூறியுள்ளார். 

    • பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.
    • இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    திமுக அமைச்சர்களிடையே, முதலமைச்சர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு அவர்கள்.

    கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் திமுகவினர், காலகாலமாக இந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.

    தனது தொழில் போட்டிக்கு, இந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும். நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கூறியுள்ளார். 

    • விபத்தில் இறந்த உமாராணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கல்லாவி ரோடு பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது65). இவரது மகன் கோபிநாத் (வயது40). இவரது மனைவி ஜீவிதா (35). கோபிநாத் சகோதரிகள் 2 பேர் மற்றும் இரு குழந்தைகள் என மொத்தம் 7 பேர் காரில் கர்நாடகாவில் பல்வேறு வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் சுற்றுலா முடித்து விட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மத்தூர் அடுத்த கண்ணண்டஹள்ளி என்ற இடத்தில் வந்த போது தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியை நோக்கி சென்ற மினிலாரி எதிர் பாராதவிதமாக கார் மீது மோதியது.

    இதில் காரில் இருந்த உமாராணி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த கோபிநாத் உடன் இருந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து இடிபாடுகளில் சிக்கிய சூழலில் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் அருகே இருந்த ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு சுமார் அரை மணி நேரம் போராடி அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

    பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் விபத்தில் இறந்த உமாராணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை என்பதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

    • தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
    • நெல்லை பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நெல்லை:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இதனை கடந்த வாரம் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிப்படுத்தினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும் அமித்ஷா தெரிவித்தார்.

    இதையடுத்து கூட்டணி ஆட்சி தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க.வை வீழ்த்தவே பா.ஜ.க.வுடன் கைகோர்த்தோம் என்றும் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்பது இல்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார். இதுதற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே, நெல்லையில் 'வருங்கால முதல்வரே' என பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

    பா.ஜ.க. மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செட்டிக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அம்மா S. செல்வகுமார் பெயரில் நெல்லையில் முக்கிய இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் நெல்லை பா.ஜ.க. நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.
    • இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம், குளித்தலை அருகே பில்லா பாளையம் முனவாசிப்பட்டி செல்லும் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. நேற்று இரவு மதுபான கடை ஊழியர்கள் தங்களது வேலையை முடித்துவிட்டு கடையினை பூட்டி சென்றனர்.

    நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் கடையின் பின்பக்க சுவற்றில் கடப்பாரையால் துளையிட்டு உள்ளே புகுந்தனர். அங்கு ரூ.28 ஆயிரம் மதிப்பிலான 150-க்கு மேற்பட்ட உயர் ரக மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ. 6030 பணத்தினை திருடி சென்று விட்டனர்.

    இன்று காலை மதுபான கடைக்கு அரசு குடோனில் இருந்து மது பாட்டில்கள்கள் இறக்க வந்துள்ளனர். அப்போது கடை ஊழியர்கள் கடையை திறந்த போது மதுபான பாட்டில்கள் இல்லாமல் இருப்பதை பார்த்தும், பின் பக்க சுவற்றில் துளையிட்டதை கண்டும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து லாலாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மது பாட்டில்களையும் பணத்தினை திருடி சென்ற மர்ம நபர்கள் தாங்கள் போலீசார் மற்றும் மோப்ப நாயிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என மிளகாய் பொடியை தூவி சென்றுள்ளனர்.

    கடையில் பொருத்தப்பட்டிருந்த 4 சிசிடிவி கேமராக்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

    கடந்த 45 நாட்களுக்கு முன்பு இதேபோல் மேலதாளியாம்பட்டி டாஸ்மாக் கடையில் சுவரைத் துளையிட முயன்று முடியாததால் பூட்டை உடைத்து நீண்ட வாளை(பட்டாகத்தி) கடையில் உள்ளே போட்டுவிட்டு மது பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இரண்டாவது முறையாக திருட்டு நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி என்ன பேசிக்கொள்கிறார்களோ, என்ன முடிவு எடுக்கிறார்களோ அது நடக்கும்.
    • தேவையில்லாமல் உங்கள் சந்தேகங்களை கிளப்பி பிளவுபடுத்தும் முயற்சியை கை விட்டுவிடுங்கள்.

    சென்னை:

    தீரன் சின்னமலையின் 269-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தீரன் சின்னமலை திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி குறித்து கேள்வியே கேட்க வேண்டாம். அமித்ஷா- எடப்பாடி பழனிசாமி என்ன பேசிக்கொள்கிறார்களோ, என்ன முடிவு எடுக்கிறார்களோ அது நடக்கும். தேவையில்லாமல் உங்கள் சந்தேகங்களை கிளப்பி பிளவுபடுத்தும் முயற்சியை கை விட்டுவிடுங்கள்.

    என்னுடைய விருப்பம் தி.மு.க. ஆட்சி விரட்டப்பட வேண்டும் என்பதுதான். தி.மு.க. ஆட்சியே மக்கள் விரோத ஆட்சியாகவே நான் கருதுகிறேன். ஆகவே தமிழக மக்கள் நலன் கருதி மது, போதை பழக்கத்தில் இருந்து விடுவிக்கவும், சொத்துவரி, மின்சார கட்டணம் உயர்வை கட்டுப்படுத்தவும் மக்கள் நலன்சார்ந்த பிரச்சனைக்காக எல்லோரும் வரவேண்டும். யார் வேண்டுமானாலும்... நன்றி... வணக்கம் என்று கூறி சென்றார். 

    • இந்த வழக்கு தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு நிலுவையில் உள்ளது.
    • தன் மீதான வழக்கை ரத்துச் செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    சென்னை:

    அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலணியில் உள்ள கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை சென்னை மேயராக இருந்த போது மா.சுப்பிரமணியன், தனது அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடான ஆவணங்கள் மூலம் தனது மனைவியின் பெயருக்கு மாற்றம் செய்ததாக சைதாப்பேட்டையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் புகார் அளித்தார்.

    இந்த புகாரின் அடிப்படையில் போலி ஆவணங்கள் தயாரித்துதல், ஏமாற்றுதல், கூட்டுச்சதி, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு காவல்துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு நிலுவையில் உள்ளது.

    இதனிடையே, தன் மீதான வழக்கை ரத்துச் செய்யக்கோரி மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில், நிலஅபகரிப்பு வழக்கு இன்று மீண்டும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம்சாட்டப்பட்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றம் அவரது மனைவி காஞ்சனா இருவரும் ஆஜராகவில்லை. அப்போது மா.சுப்பிரமணியன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அமைச்சரவை கூட்டம் நடப்பதால் இன்று விசாணைக்கு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா இருவரும் மே மாதம் 6-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பியுள்ளார். மேலும் அன்றைய தினம் இருவருக்கும் எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிபதி ஜெயவேல் தெரிவித்தார். 

    • கதவில் கீழ் துவாரம் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
    • வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரு.வி.க. நகர் காமாட்சி அம்மன் நகரை சேர்ந்தவர் சுடலை முத்து. இவர் கேரள மாநிலம் கோட்டையம் பகுதியில் டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    கடந்த 13-ந் தேதி சுடலை முத்து மகன் மதன்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து முருகேசன் நகரில் உள்ள மதுபான கடைக்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது மதன் குமார் அவரது சக நண்பரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து மதன்குமார் தென்பாகம் போலீசாரால் கைது செய்யப்பட்டு பேரூரணி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.


    இந்நிலையில் திரு.வி.க. நகர் காமாட்சி அம்மன் நகரில் உள்ள சுடலைமுத்து வீட்டில் யாரும் இல்லாத போது சிலர் காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி சென்று பெட்ரோல் கேன்களில் பெட்ரோல் கொண்டு வந்து கதவில் கீழ் துவாரம் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

    இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் தொலைபேசி மூலம் சுடலைமுத்துவுக்கு தகவல் தெரிவிக்க அவர் உடனடியாக நேரில் வந்து பார்த்த போது வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து தென்பாகம் போலீஸ் நிலையத்தில் சுடலை முத்து புகார் அளித்தார். சுடலைமுத்து மகன் மதன்குமார் ஏற்கனவே கைதாகி சிறையில் இருக்கும்போது சுடலைமுத்து குடும்பத்தாரை பழி வாங்க வேண்டும் என்று இதுபோன்று நடத்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    வீட்டில் யாரும் இல்லாததால் அதிர்ஷ்ட வசமாக உயிர் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததில்லை.
    • காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்றவர்களும் கூட்டணி ஆட்சி அமைத்ததில்லை.

    சென்னை:

    அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா கூறிய விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. இதற்கு அதிமுகவை சேர்ந்தவர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. அ.தி.மு.க. தலைமையில் தான் ஆட்சி என்று அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பின்போது தம்பிதுரை கூறியதாவது:-

    * வரும் தேர்தலில் வென்றால் அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும்.

    * தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததில்லை. இனியும் நடக்கப்போவதில்லை. காமராஜர், அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதி போன்றவர்களும் கூட்டணி ஆட்சி அமைத்ததில்லை.

    * பா.ஜ.க.வுடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி அல்ல என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    * தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி இதுவரையும் இல்லை, இனிமேலும் இல்லை. வரும் 2026 தேர்தலில் பாஜக- அதிமுக கூட்டணி போட்டியிட்டு அ.தி.மு.க. தனித்தே ஆட்சி அமைக்கும்.

    * திடீரென இந்த கூட்டணி அமையவில்லை. பொதுக்குழு செயற்குழுவை கூட்டித்தான் முடிவு செய்யப்படும் என்றார்.

    இதனிடையே, அமைச்சரவையில் பா.ஜ.க. இடம்பெறுமா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, பிறகு பார்க்கலாம் என்று கூறினார். 

    • குத்தாலிங்கத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
    • கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் குத்தாலிங்கம் (வயது 36). இவரது மனைவி தனலட்சுமி (வயது 30), இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் ஆகியோர் உள்ளனர். இவர் தனது மனைவியின் ஊரான கீழப்புலியூர் பகுதியில் கார்மெண்ட்ஸ் மற்றும் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் குத்தாலிங்கம் கீழப்புலியூரில் உள்ள ரேஷன் கடையில் தனது மனைவியுடன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். இருவரும் ரேஷன் கடை அருகில் நின்று கொண்டிருந்தபோது அந்தப் பகுதியில் கையில் அரிவாளுடன் மறைந்திருந்த 4 பேர் கொண்ட கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து வந்து குத்தாலிங்கத்தை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

    இதை கண்முன்னே பார்த்துக் கொண்டிருந்த அவரது மனைவி தனம் துடிதுடித்த நிலையில் கணவரை காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அந்த கும்பல் அவரை வெட்டி, தலையை துண்டித்து எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது.

    பட்டப்பகலில் ரேஷன் கடை வாசலில் மனைவி மற்றும் பல பேர் முன்னிலையில் ஒரு நபரை வெட்டிக்கொலை செய்து விட்டு தலையை துண்டித்து கையில் எடுத்துக் கொண்டு ஒரு கும்பல் தப்பிச் சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

    அதனைத் தொடர்ந்து அந்த கும்பல் துண்டித்த தலையை எடுத்துக்கொண்டு காசிமேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் வைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. தகவல் அறிந்த தென்காசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குத்தாலிங்கத்தின் உடலையும், காசி மேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியில் இருந்த தலையையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது பற்றி போலீசார் விசாரணை நடத்திய போது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காசிமேஜர்புரம் பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் டிஜிட்டல் பேனர் வைப்பதில் நடைபெற்ற மோதலில் பட்டுராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இவரது தம்பி ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக பழிவாங்கும் வகையில் இந்த கொலை நடைபெற்று இருப்பதாகவும், பட்டுராஜனை கொலை செய்த பகுதியான காசிமேஜர்புரம் அம்மன் கோவில் பகுதியான அதே இடத்தில் குத்தாலிங்கத்தின் தலையை வைத்துவிட்டு அந்த கும்பல் தப்பி சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்தச் சம்பவம் தொடர்பாக தென்காசி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் உத்தரவின் பெயரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காசிமேஜர்புரம் பகுதியை சேர்ந்த 6 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை குற்றவாளிகள் யார் என்பது இன்று மாலைக்குள் தெரியவரும் எனவும் கூறியுள்ளனர்.

    • சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
    • 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இவர்களுக்கு சின்னத்துரை (வயது18) என்ற மகனும், 1 மகளும் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதி ரீதியிலான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவன் சின்னத்துரை படுகாயம் அடைந்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கல்வியை தொடர்ந்தார். தற்போது சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு அவர் படித்து வருகிறார்.

    அவர் தனது தாய் மற்றும் தங்கையுடன் பெருமாள்புரம் திருமால் நகரில் உள்ள குடிசை மாற்று வாரியம் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை தனது நண்பன் அழைப்பதாக தனது பெற்றோரிடம் கூறிவிட்டு சென்ற அவரை கொக்கிரகுளம் அறிவியல் மையம் அருகே உள்ள வசந்த் நகரில் வைத்து சிலர் தாக்கியதாகவும், தன்னிடம் இருந்த பணம் மற்றும் செல்போனையும் பறித்துச் சென்று விட்டதாகவும் அவர் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். லேசான காயங்களுடன் இருந்த அவருக்கு சிகிச்சை முடிந்து நேற்று இரவு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.

    இதனிடையே அவரை தாக்கிய கும்பல் யார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    முன்னதாக மாணவன் சின்னதுரையிடம் விசாரித்த போது, இணையதள செயலி மூலமாக நண்பர் ஒருவர் அறிமுகமாகி இருந்தார். அவர் திருமண பத்திரிகை கொடுக்க வேண்டும் என்று தன்னை அழைத்ததாகவும், அதன்படி அப்பகுதிக்கு சென்றதாகவும் அங்கு திடீரென வந்த கும்பல் தன்னை தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

    இது தொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் பி.என்.எஸ். 309(பி) காயத்தை ஏற்படுத்தி சொத்துக்களை வழிப்பறி செய்தல் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த சம்பவ தொடர்பாக 4 பேர் கொண்ட மர்ம கும்பலை பிடிப்பதற்கு 2 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக 2 பேரை பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    • ஊழல் பெருச்சாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள்.
    • ஊழல் செய்வதில் இரண்டு கட்சிகளும் சூப்பர்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ்தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிக்கை நிறுவனத்தின் ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துககளைத் தங்கள் ஆட்சியில் அபகரிக்க முயன்ற சோனியாகாந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் நூதன ஊழலை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை.

    அந்த நிறுவனத்திற்கு ரூ.90 கோடியைக் கடனாகக் கொடுப்பது போல் பாசாங்கு காட்டிவிட்டு பின்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதன் மொத்த பங்குகளையும், ராகுல் காந்தியை முக்கிய பங்குதாரராகக் கொண்ட "யங் இந்தியன்" என்ற நிறுவனத்திற்கு முறைகேடாக மாற்றியுள்ளது காங்கிரஸ்.

    இத்தனைக்கும் முன்னாள் சட்ட அமைச்சர் மற்றும் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போன்றோர் பங்கு வகிக்கும் பழமையான அந்த நிறுவனத்தின் சொத்துக்களையே தங்கள் ஆட்சியில் சத்தமில்லாமல் சுருட்டிய காங்கிரஸ். எத்தனை அப்பாவி மக்களின் உழைப்பையும் சூறையாடியிருக்கும்?

    அதிகாரத்தை கருவியாகக் கொண்டு காங்கிரஸ் தான் இத்தனை ஊழல்களில் ஊறியது என்றால். அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க.வும் டாய்லெட் முதல் டாஸ்மாக் வரை ஊழல் செய்து காங்கிரசுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்களில்லை என்பதை நிரூபித்து வருகிறது.

    இப்படி மக்கள் பணத்தை கொள்ளையடிப்பவர்கள் பிரதமர் மோடியின் ஊழலற்ற ஆட்சியில் எங்கும் ஓடி ஒளிய முடியாது. எனவே ஊழல் பெருச்சாளிகள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறோம்.

    இப்படி ஊழல் செய்வதில் இரண்டு கட்சிகளும் சூப்பர். இந்த கட்சிகளின் ஜோடிப்பொருத்தம் மிகப் பிரமாதமாக உள்ளது.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    ×