என் மலர்
உள்ளூர் செய்திகள்

மத்தூர் அருகே விபத்து: மினிலாரி-கார் மோதி பெண் பலி
- விபத்தில் இறந்த உமாராணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை கல்லாவி ரோடு பகுதியை சேர்ந்தவர் உமாராணி (வயது65). இவரது மகன் கோபிநாத் (வயது40). இவரது மனைவி ஜீவிதா (35). கோபிநாத் சகோதரிகள் 2 பேர் மற்றும் இரு குழந்தைகள் என மொத்தம் 7 பேர் காரில் கர்நாடகாவில் பல்வேறு வழிபாட்டுத்தலங்கள், சுற்றுலா சென்றனர். பின்னர் அவர்கள் சுற்றுலா முடித்து விட்டு இன்று அதிகாலை வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது மத்தூர் அடுத்த கண்ணண்டஹள்ளி என்ற இடத்தில் வந்த போது தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியை நோக்கி சென்ற மினிலாரி எதிர் பாராதவிதமாக கார் மீது மோதியது.
இதில் காரில் இருந்த உமாராணி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த கோபிநாத் உடன் இருந்த குழந்தைகள் உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் படுகாயம் அடைந்து இடிபாடுகளில் சிக்கிய சூழலில் போலீசார், பொதுமக்கள் உதவியுடன் அருகே இருந்த ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு சுமார் அரை மணி நேரம் போராடி அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மேலும் விபத்தில் இறந்த உமாராணியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் கிருஷ்ணகிரி-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை என்பதால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.






