என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஒகேனக்கலில் நேற்று 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று, தொடர்ந்து அதே அளவில் நீடிக்கிறது.
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கலில் இதமான சூழல் நிலவியது.
ஒகேனக்கல்:
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கலில் நேற்று 3 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று, தொடர்ந்து அதே அளவில் நீடிக்கிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல் அருவிகளான ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் கொட்டும் தண்ணீரின் வேகமும் சற்று அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஒகேனக்கலில் இதமான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.
- ஜம்மு காஷ்மீருக்கு கடந்த சனிக்கிழமை 5 நாட்கள் சுற்றுலா பயணமாக சென்றிருந்தனர்.
- பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் இருந்து 25 பெண்கள் உட்பட 68 பேர் மதுரையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு கடந்த சனிக்கிழமை 5 நாட்கள் சுற்றுலா பயணமாக சென்றிருந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், மதுரையில் இருந்து ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் எந்தவித பாதிப்பும் இன்றி பத்திரமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர்கள் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மதுரை திரும்ப உள்ளனர்.
இதுகுறித்து மதுரையில் உள்ள தமிழ்நாடு மோட்டார் வாகன உதிரிபாக வியாபாரிகள் சங்க துணைதலைவர் சித்தார்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையை சேர்ந்த 30 பேர் சென்றுள்ள நிலையில் 68 பேரும் பாதுகாப்புடன் உள்ளதாகவும் இன்றைய தினம் ஏற்கனவே திட்ட மிட்டபடி அவர்கள் சுற்றுலா தளத்தில் இருப்பதாகவும் வீடியோ கால் மூலமாக தகவல் அளித்துள்ளனர்.
அந்த 68 பேரும் பெஹல்காமில் தாக்குதல் நடந்த இடத்திற்கு அருகே மற்றொரு இடத்தில் இருந்ததாக தெரிவித்தனர்.
மேலும், அந்த 68 பேரில் ஒருவருக்கு இருதய நோய் ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். தாக்குதல் நடந்தது குறித்து சுற்றுலா சென்ற அவர்களுக்கு எதுவும் தெரியாத நிலையில் நாங்கள் தான் இங்கிருந்து அவர்களுக்கு தகவல் அளித்தோம்.
68 பேரும் இன்று இரவு மற்றும் நாளை காலை விமானம் மூலமாக தமிழகத்திற்கு திரும்பவுள்ளனர்.
தற்போது அனைவரும் பாதுகாப்புடன் உள்ளனர். அங்கு கடையடைப்பு போராட்டம் நடந்தாலும் இயல்பான நிலை உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
- சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் வருகிற 26-ந்தேதி வரை அடுத்த 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்.
தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக காணப்படும். சென்னையில் அதிகபட்சமாக வெப்ப நிலை 97 டிகிரி முதல் 99 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரியாகவும் இருக்கும்.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வருகிற 26-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும்.
தமிழகத்தில் நேற்று ஈரோடு, மதுரை விமான நிலையம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 102.2 டிகிரி வெயில் பதிவானது. திருச்சியில் 102 டிகிரி, சேலம், வேலூரில் 101 டிகிரி, திருத்தணி, தர்மபுரியில் 100 டிகிரி வெயில் கொளுத்தியது. மொத்தம் 8 இடங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தன்னுடைய கணவர் லண்டனுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.
- சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்க வேண்டும்.
நெல்லை:
நெல்லை டவுனை சேர்ந்த பிரபல இருட்டுக் கடை அல்வா உரிமையாளர் கவிதா-ஹரி சிங்கின் மகள் ஸ்ரீகனிஷ்காவுக்கு கோவையை சேர்ந்த பல்ராம் சிங் என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் இருட்டுக்கடை உரிமத்தை வரதட்சணையாக கேட்டு சித்ரவதை செய்ததாக நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும் இருட்டுக்கடை உரிமையாளர் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார், இருட்டு கடை உரிமையாளரின் மருமகனான பல்ராம் சிங் குடும்பத்திற்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தபோது 10 நாட்கள் கூடுதல் அவகாசம் கேட்டு அவர்கள் தரப்பில் வக்கீல் மனு செய்தார்.
இந்த நிலையில் இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனரிடம் மேலும் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், தன்னுடைய கணவர் லண்டனுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டு இருப்பதாக நம்பத்தகுந்த இடத்தில் இருந்து தகவல் வந்துள்ளது.
வரதட்சணை புகார் மீது சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் விசாரணைக்கு வராமல் வெளிநாடு தப்ப முயற்சி செய்ய திட்டமிட்டு இருக்கிறார்.
எனவே சென்னை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு 'லுக் அவுட்' நோட்டீஸ் கொடுக்க வேண்டும். அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது. என் கணவர் மீது துரிதமாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
- கவர்னர் மாளிகை-அரசு இடையே அதிகார மோதல் எனக்கூறுவது முற்றிலும் தவறானது.
- மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சென்னை:
பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்ற மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் மூலம் அங்கீகாரம் கிடைத்து இருக்கிறது.
இந்த நிலையில் ஊட்டியில் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், அதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைப்பார் என்றும் ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்தநிலையில் துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் அதிகார மோதல் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
துணை வேந்தர்கள் மாநாடு தொடர்பாக அரசுடன் எந்தவித அதிகார மோதலும் இல்லை. ஆளுநர் மாளிகை-அரசு இடையே அதிகார மோதல் எனக்கூறுவது முற்றிலும் தவறானது.
ஒவ்வொரு வருடமும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும். இந்த ஆண்டும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஜனவரி மாதத்தில் இருந்தே தொடங்கின. மாநாட்டை மேலும் உற்பத்தி திறன் மிக்கதாக மாற்ற பல கூட்டங்கள் நடத்தப்பட்டன.
2022 முதல் துணை வேந்தர் மாநாட்டை வேந்தர் என்ற முறையில் ஆளுநர் நடத்தி வருகிறார். சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புடன் தவறாக இணைத்து ஆளுநர் மாளிகைக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகார போராட்டமாக முன்னிறுத்த முயற்சிக்கிறார்கள். இவை அனைத்தும் தவறானது. உண்மைக்கு புறம்பானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.
- மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பித்த நிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கத்தை இணைக்கும் வகையில் மொத்தமாக 15.46 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மெட்ரோ ரெயில் மூலம் நேரடியாக கிளாம்பாக்கம் வரை செல்லலாம்.
இந்த மெட்ரோ விரிவாக்கத்துக்கான திட்ட அறிக்கையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தமிழக அரசிடம் சமர்ப்பித்த நிலையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது.

- 7.5% இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அ.தி.மு.க.வினர் விவாதம் நடத்தினர்.
- அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க. வலியுறுத்தினர்.
சட்டசபையில் 7.5% இடஒதுக்கீட்டில் மருத்துவ இளநிலை படிப்பில் சேர்ந்தோருக்கான கட்டணம் குறித்து கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.
7.5% இடஒதுக்கீடு தொடர்பாக கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது அ.தி.மு.க.வினர் விவாதம் நடத்தினர்.
நீட் தேர்வு பிரச்சனையில் மக்களிடம் சாயம் வெளுத்துவிடும் என்பதால் 7.5% இடஒதுக்கீடு கொண்டு வந்தீர்கள் என மா.சுப்பிரமணியன் கூறினார்.
இதற்கு அ.தி.மு.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தவறான தகவலை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறி இருப்பதாக அமளியில் ஈடுபட்டனர்.
அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்குமாறு அ.தி.மு.க. வலியுறுத்தினர்.
- ரூ.100 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
- 41 பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கும், பயணிகள் வசதிக்காகவும், செங்கல்பட்டு கோர்ட்டு அருகே மதுராந்தகம் செல்லும் சாலையில் உள்ள ஆலப்பாக்கம் கிராமத்தில் புதிய பஸ் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.
இந்த புதிய பஸ் நிலையத்தை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சுமார் ரூ.100 கோடி மதிப்பீட்டில், 9.95 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது.
தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அமைக்கப்பட்டு வரும் இந்த புதிய பஸ் நிலையத்தில், 41 பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையத்தில், 55 கார்கள், 325 இருசக்கர வாகனங்கள் நிறுத்தி வைப்பதற்கு போதுமான வாகன நிறுத்துமிட வசதிகள் உள்ளன.
பஸ் நிலையத்தில் 35 கடைகள், உணவகங்கள், பயணிகளுக்கான ஓய்வறைகள், போக்குவரத்து ஊழியர்களுக்கான ஓய்வு அறைகள், கழிவறைகள், குடிநீர் வசதிகள் போன்ற வசதிகளும் அமைக்கப்படுகின்றன.
இந்த பஸ் நிலைய வளாகத்தில் அரசு பஸ்களுக்கான பணிமனையும் அமைக்கப்படுகிறது. தற்போது புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய கட்டுமான பணிகளை மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயற்பொறியாளர் தங்கராஜன் மற்றும் அரசு, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கட்டுமானப் பணிகளை விரைந்து நடத்தி வருகிற செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 'செங்கல்பட்டு புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள், திட்டமிட்டபடி வேகமாக நடந்து வருகிறது. செப்டம்பர் இறுதிக்குள் பணிகள் நிறைவடைந்து, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் செயல்பாட்டுக்கு வந்துவிடும்.
செங்கல்பட்டில் ஏற்கனவே உள்ள பஸ் நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து பணிமனை ஆகியவை நகரின் மையப் பகுதியில், போக்குவரத்து மிகுந்த சாலையில் இருப்பதால், செங்கல்பட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
ஆனால் தற்போது அமைக்கப்பட்டு வரும் புதிய பஸ் நிலையம், நகருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைக்கப்படுவதோடு, அரசு பஸ்களின் பணிமனையும் இதே வளாகத்தில் அமைக்கப்படுவதால், இந்த புதிய பஸ் நிலையம் செயல்பாட்டிற்கு வந்த பின்பு, செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்துவிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் வரும் தீபாவளிக்கு முன்னதாக செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்ற தகவல் செங்கல்பட்டு நகர மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை இல்லை.
- நிதி மோசடி வழக்குகள் தேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சென்னை:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி முதல் 8-ந் தேதி வரை அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில், டாஸ்மாக் நிர்வாக இயக்குனர், தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விக்ரம் சவுத்ரி ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அவர்கள் தங்கள் வாதத்தில், "அமலாக்கத்துறை வெளிப்படையாக இருப்பதுபோல ஒரு பிம்பத்தை உருவாக்கி அதன் பின்னால் மறைந்துகொள்கிறது. எதற்காக சோதனை செய்கிறோம் என்பதை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும்.
அமலாக்கத்துறையின் நடவடிக்கையால் நேரடியாக டாஸ்மாக்கின் நற்பெயருக்கும், மறைமுகமாக அரசின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை முறைகேடு நடந்ததாக கூறப்படும் நிலையில், தற்போதுதான் ஞானம் வந்தது போல அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. விசாரணை என்ற பெயரில் பெண் அதிகாரிகள் உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கொடுமை செய்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ, 'மாநில போலீசார் பதிவு செய்த லஞ்ச வழக்குகளின் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்திருப்பதாக கருதினால் அமலாக்கத்துறை விசாரணை நடத்தலாம். டாஸ்மாக் ஊழியர்கள் சிலர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் டாஸ்மாக் அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. டாஸ்மாக் முறைகேடு மூலம், ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்தது சோதனையில் தெரியவந்துள்ளது'' என்று வாதிட்டார்.
இந்த வழக்கு இறுதிக்கட்ட விசாரணைக்காக நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. டாஸ்மாக் தரப்பில் மூத்த வக்கீல் விகாஸ்சிங் வாதம் செய்தார். அவர், 'அமலாக்கத்துறைக்கு சோதனை நடத்த அதிகார வரம்பு இல்லை. மிகப்பெரிய ஊழல் நடைபெற்றதாக அமலாக்கத்துறை எவ்வாறு சொல்ல முடியும்?' என்று வாதிட்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
அதன்படி இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினார்கள். அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை இல்லை என்று கூறி நீதிபதிகள், அமலாக்கத்துறையின் சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது கோடிக்கணக்கான மக்களின் நிதி உரிமை சார்ந்ததாகும். இதில் மோசடி நடந்தால் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது.
இதுபோன்ற நிதி மோசடி வழக்குகள் தேசத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இந்த வழக்கை பொறுத்தவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சோதனை நடத்துவதாக மனுதாரர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் அரசியலை பொருத்தவரை 'ஏ' பார்ட்டி ஆட்சியில் இருக்கும் போது 'பி' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். 'பி' பார்ட்டி ஆட்சியில் இருக்கும்போது 'ஏ' பார்ட்டி மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். இதை கோர்ட்டு கவனிக்க முடியாது. குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே கோர்ட்டு பரிசீலிக்க முடியும்.
இந்த வழக்கை பொருத்தவரை குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளதால் அமலாக்கத்துறை சோதனை சட்ட விரோதம் என்று அறிவிக்க முடியாது.
டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். அமலாக்கத்துறை நடத்திய சோதனை அடிப்படையில் சட்டப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாம்.
இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.
- 2021-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 27 தமிழர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
- ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினோம்.
2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்வில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும் அகில இந்திய அளவில் 23-ம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயின்றவர் ஆவார். அதேபோல, இந்திய அளவில் 39-ம் இடம் பிடித்த மோனிகா என்பவரும் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர் ஆவார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 134 பேரில் 50 பேர் 2024 யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயன்பெற்ற 50 மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* 2021-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 27 தமிழர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது 57 தமிழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
* தேர்ச்சி பெற்ற 57 பேரில் 50 பேர் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற மாணவர்கள்.
* ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கினோம்.
* தேர்ச்சி பெற்ற மாணவர்கள் டெல்லி செல்ல தலா ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.
- காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள குழுமூர் காலனி தெருவை சேர்ந்தவர் மதிவண்ணன் (வயது 35). இவர் அப்பகுதி ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி திவ்யா(27). இவர்களுக்கு 1 ஆண் குழந்தையும் 1 பெண் குழந்தையும் உள்ளது.
இந்த நிலையில் இவர்களது வீட்டு அருகே கடந்த 7-ந்தேதி எரிக்கப்பட்ட குப்பையில் ஆண் குழந்தை உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் செந்துறை போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
செந்துறை போலீஸ் பொறுப்பு இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டார்.
குழந்தை அன்று இரவு பிறந்த நிலையில் இறந்து கிடந்ததால் அந்த குழந்தை எரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. இதையடுத்து சம்பவ இடம் அருகே உள்ள வீடுகளில் போலீசார் விசாரணை நடத்தினர்.
திவ்யாவிடம் விசாரணை செய்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாயின. முதலில் போலீசாரிடம் திவ்யா கூறுகையில், தனக்கு கடந்த சில மாதங்களாக மாதவிடாய் சரியாக வந்துள்ளதாகவும் ஆனால் வயிற்றில் கட்டி இருப்பதாக நினைத்து மருத்துவம் செய்து வந்ததாகவும் இந்த நிலையில் அன்றைய தினம் இரவு தனக்கு குழந்தை இறந்து பிறந்தது .
திடீரென குழந்தை பிறந்ததால் சந்தேகப்படுவார்கள் என்று அதிகாலை 5 மணியளவில் எனது உறவினர் ஒருவர் குப்பையை எரித்து கொண்டு இருந்தார். அப்போது யாருக்கும் தெரியாமல் தனக்கு பிறந்த குழந்தையை எரிந்த நெருப்பில் வீசிவிட்டு சென்றதாக நாடகம் ஆடினார்.

அதனைத் தொடர்ந்து போலீசார் அவரை அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்த நிலையில் திவ்யா மற்றும் அவரது கணவர் மதிவண்ணன் ஆகியோரை பிடித்து செந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டார்.
அப்போது குழந்தையை எரித்து கொலை செய்ததாக போலீசாரிடம் கூறினர். இதையடுத்து கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர். கைதான மதிவண்ணன் போலீசில் அளித்து ள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திவ்யா 3-வதாக கர்ப்பம் ஆனார். தான் கர்ப்பம் ஆனதை திவ்யா மறைத்து வந்தார். மாதம் ஆக ஆக வயிறு பெரிதாகி விட்டது. அது குறித்து கேட்டதற்கு வயிற்றில் கட்டி உள்ளதாக பொய் கூறினார்.
இந்த நிலையில் அவருக்கு வீட்டில் குழந்தை பிறந்தது. அப்போது அந்த குழந்தையின் முகம் மற்றும் உருவத்தை பார்த்தபோது யாருக்கோ கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்று சந்தேகம் அடைந்தேன். இதனால் இருவருக்கும் இடையே அன்று இரவு சண்டை ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த நான் குழந்தையை தூக்கி கீழே வீசினேன். இதில் அடிபட்டு குழந்தை அழுதது. அழுகை சத்தம் வெளியே கேட்கக்கூடாது என்பதற்காக திவ்யா துணியால் குழந்தையின் வாயை அடைத்தார்.
இதனால் குழந்தை இறந்து விட்டது. அதன் பிறகு இறந்த குழந்தையை அருகே இருந்த குப்பை தொட்டியில் போட்டு விட்டு வந்து விட்டோம். ஆனால் அந்த குழந்தை பாதி மட்டுமே எரிந்த நிலையில் காலையில் கிராம மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் சொல்லிவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கைதான மதிவண்ணன், திவ்யா ஆகிய 2 பேரும் செந்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆக்னஸ் ஜெப கிருபா திவ்யாவை போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கவும் மதிவண்ணனை சிறையில் அடைக்கவும் உத்தரவிட்டார்.
- குழந்தை கண்ணெதிரே தன்னுடைய தகப்பன் உயிரிழந்தது மிகமிக கொடுமையானது.
- தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்து இருக்கிறார்கள்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பலியாகினர். இந்த சம்பவத்திற்கு சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு சட்டசபையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. சட்டசபை உறுப்பினர்கள் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
* பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் இரக்கமற்ற செயல்.
* குழந்தை கண்ணெதிரே தன்னுடைய தகப்பன் உயிரிழந்தது மிகமிக கொடுமையானது.
* தமிழ்நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்து இருக்கிறார்கள்.
* இறந்து கிடக்கும் கணவர் அருகில் மனைவி அமர்ந்து அழும் காட்சி மனதை வாட்டியது.
* பயங்கரவாதிகளின் இரக்கமற்ற செயலை ஒருபோதும் ஏற்க முடியாது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் கூறினார்.






