என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • இறந்து கிடந்தவர் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்தது.
    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள காரண்டப்பள்ளி ஊராட்சி தொட்டபிலி முத்திரை கட்சுவாடி செல்லும் சாலை அருகே தனியார் கிரானைட் கல்குவாரி ஒன்று கடந்த 10 வருடங்களாக செயல்படாத நிலையில் உள்ளது.

    இந்த கல்குவாரியில் பாறை வெட்டி எடுக்கப்பட்டு தண்ணீர் தேங்கியுள்ள குட்டையில் நேற்று இரவு ஆண் பிணம் ஒன்று அழுகிய நிலையில் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனே அவர்கள் காரண்டப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி ஆனந்தராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது இறந்து கிடந்தவர் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கவர் என தெரியவந்தது. உடலை சுற்றி கயிறு சுற்றி இருந்தது. இறந்து கிடந்த நபரை வேறு எங்கேயே கொலை செய்து விட்டு கல்லை கயிற்றால் கட்டி சடலத்தை மர்ம கும்பல் வீசி சென்றுள்ளது தெரிய வந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்து கொலை செய்யப்பட்டு கிடந்தவர் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • மைசூரில் இருந்து அனைத்து வகையான காய்கறிகள் கேரளாவிற்கு அதிகளவு கொண்டு வருவதால் கேரளா வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வருவதில்லை.
    • திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்கள் இல்லாததாலும் காய்கறிகளின் தேவை குறைந்துள்ளது.

    இடையக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள இடையக்கோட்டை, புல்லாக்கவுடனூர், மார்க்கம்பட்டி, சின்னக்காம்பட்டி, கொ.கீரனூர், கள்ளிமந்தையம், பொருளுர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சிம்ரன் கத்திரிக்காய் எனப்படும் நாட்டு ரக கத்தரி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு தற்போது அமோக விளைச்சல் கண்டுள்ளது.

    கூலி ஆட்களை கொண்டு விவசாய நிலங்களில் இருந்து கத்திரிக்காய் அறுவடை செய்து அதை தரம் பிரிக்கப்பட்டு ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

    தற்போது ஒரு கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை மட்டுமே விற்பனை ஆனதால் அறுவடை கூலிக்கு கூட கட்டுப்படியான விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    இது குறித்து காந்தி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் செயலாளர் ராசியப்பன் கூறுகையில், ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரி, வெங்காயம், பூசணி, சுரைக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து அதை தரம் பிரித்து அதிகளவு கேரளாவிற்கு விற்பனைக்கு அனுப்புவோம்.

    இந்நிலையில் மைசூரில் இருந்து அனைத்து வகையான காய்கறிகள் கேரளாவிற்கு அதிகளவு கொண்டு வருவதால் கேரளா வியாபாரிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு வருவதில்லை. இதனால் அதிக வரத்து இருப்பதால் சாரியாக விற்பனையாவதில்லை. இதன் காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. திருமணம் மற்றும் கோவில் திருவிழாக்கள் இல்லாததாலும் காய்கறிகளின் தேவை குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.

    • எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், தனது தொகுதிக்குட்பட்ட ஆயுர்வேதா அரசு கல்லூரியில் 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா? என கேள்வி எழுப்பினார்.
    • 5 பிரிவுகளில் 121 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. தளவாய் சுந்தரம், தனது தொகுதிக்குட்பட்ட ஆயுர்வேதா அரசு கல்லூரியில் 16 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுமா? என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய 5 பிரிவுகளில் 121 காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தற்போது சான்றிதழ் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 10 நாட்களில் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் என்றார்.

    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டியை அரசே ஏற்கும்.
    • இதுவரை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தே 18% ஜிஎஸ்டி செலுத்தப்பட்டு வந்தது.

    ஆதிதிராவிட பழங்குடியினர் துறை மானிய கோரிக்கையின் மீது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் துரை சந்திரசேகர், சட்டமன்ற தொகுதியின் உறுப்பினர் மேம்பாட்டு நிதியினை கூடுதலாக வழங்க வேண்டும் எனவும், தற்போது உள்ள நிதியினை வைத்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை; அதிலும் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால் தொகுதி மேம்பாட்டு நிதியினை உயர்த்தி தர வேண்டும் எனக்கு கோரிக்கை வைத்தார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி தமிழ்நாட்டில் தான் அதிக அளவில் ஒதுக்கப்படுகிறது என்று கூறினார்.

    மேலும், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடிக்கான 18% ஜிஎஸ்டியை அரசே ஏற்கும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுவரை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தே 18% ஜிஎஸ்டி செலுத்தப்பட்டு வந்தது. ஜிஎஸ்டியால் தொகுதி மேம்பாட்டு நிதி பாதிக்கப்படுகிறது என்பதால் அதை அரசே ஏற்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளான தும்பு எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.
    • தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து மத்திய பாகம் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வி.இ.ரோட்டில் டி.எஸ்.எப். வணிக வளாகம் எதிரே தூத்துக்குடி மில்லர்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ண சங்கர் என்பவருக்கு சொந்தமான தும்பு குடோன் உள்ளது.

    இங்கிருந்து தும்புகள் பேக் செய்யப்பட்டு வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தும்பு குடோனில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டு புகை வரத் தொடங்கி உள்ளது. இதைத்தொடர்ந்து அருகே குடியிருப்புகளில் இருந்தவர்கள் உடனடியாக தும்பு குடோன் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாநகர தீயணைப்புத் துறையினர் 2 வண்டிகளில் காவலாளி மாவட்ட அலுவலர் கணேசன், உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி தலைமையில் தூத்துக்குடி நிலைய அலுவலர் முருகையா மற்றும் பணியாளர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ளான தும்பு எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

    தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை உடனடியாக போராடி அணைத்ததால் அருகே இருந்த குடியிருப்புகள் மற்றும் திருமண மண்டபம் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு பரவாமல் தடுக்கப்பட்டது. இதன் காரணமாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் தும்பு குடோனில் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து மத்திய பாகம் மற்றும் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்து உள்ளனர்.
    • அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 25). கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது இரண்டு பூனைகள் சண்டையிட்டு கொண்டிருந்ததை கண்டு அதை விரட்டியுள்ளார். அப்போது ஒரு பூனை பாலமுருகனை கடித்துள்ளது.

    இதற்கு சிகிச்சை பெறாமல் பாலமுருகன் அலட்சியமாக விட்டுவிட்ட நிலையில், புண் பெரிதானது. பின்னர் இதற்காக அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் அங்கிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

    பின்னர் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்து உள்ளனர். அங்கு இருக்க பிடிக்காமல் திடீரென்று தப்பி ஓட முயன்றவரை, மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து சிகிச்சைக்காக ரேபிஸ் சிகிச்சை பிரிவில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடுமையான வலி மற்றும் மன உளைச்சல் காரணமாக பாலமுருகன், அதிகாலை அவருக்கு வழங்கப்பட்டிருந்த போர்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பூனைக்கடித்து அலட்சியமாக விட்டதால் மூன்று மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய உடல் நலக்குறைவு ஏற்பட்டு இளைஞர் தனியாக சிகிச்சைக்காக அடைக்கப்பட்ட நிலையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருந்தாலும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.
    • தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ம.தி.மு.க. முதன்மை செயலாளரும், திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

    உச்சநீதிமன்றம் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவியை கண்டிக்கும் வகையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை கொடுத்திருந்தனர்.

    இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு ஒரு ஆளுநராக எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்படாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தது.

    குறிப்பாக தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமிப்பது தொடர்பாக அவரது தலையீடுகள் இருந்தது. இது போன்ற விஷயங்களை தமிழக ஆளுநர் தொடர்ந்து செய்து கொண்டு வந்திருக்கிறார். இதற்கு உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு கொடுத்துள்ளது.

    எப்போதும் தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி தன்னிச்சையாக ஒரு கூட்டத்தை கூட்டுகிறார். அவரது நடவடிக்கைகள் சரியில்லை என்று கூறி துணைவேந்தர்கள் கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். இதனை சரியான முடிவாகத்தான் பார்க்கிறேன். பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர் இருந்தாலும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு அவரது செயல்பாடுகள் இருக்க வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் அவர் கூட்டிய மாநாட்டிற்கு பல துணைவேந்தர்கள் செல்லாமல் இருப்பது நல்ல விஷயமாக தான் பார்க்கிறேன்.

    எந்தவொரு பிரச்சனைக்கும் வன்முறை தீர்வாகாது. காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் கொடுமையானது. இனி இது போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது, தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும். இந்த நேரத்தில் இதை அரசியலாக்க விரும்பவில்லை. அரசு எடுக்கும் நடவடிக்கைகளினால் தீவிரவாதத்திற்கும், அவர்களை ஊக்குவிப்பவர்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

    ம.தி.மு.க.வை கடந்து வைகோ சிறந்த பாராளுமன்ற உறுப்பினர், மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர், 30 ஆண்டுகளுக்கு மேலாக பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பணியாற்றியுள்ளார். தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் குறித்து பாராளுமன்றத்தில் பேசியுள்ளார்.

    அதில் பல விஷயங்களில் வெற்றியும் அடைந்துள்ளார். வைகோவிற்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்க வேண்டும் என்பதனை தமிழகத்தின் குரலாக தான் பார்க்க வேண்டும் தவிர மதிமுகவின் குரலாக பார்க்க கூடாது. அரசியலை கடந்து வைகோ மாநிலங்களவை உறுப்பினராக போவது மதிமுகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது என்று நினைக்கிறார்கள், திமுக தலைமை கண்டிப்பாக பரீசிலிக்கும் என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னரின் கையெழுத்து இல்லாமல் அவை நிறைவேறி விட்டது.
    • இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்து உள்ளது.

    சென்னை:

    மாநில சுயாட்சி நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னையில் 3-ந்தேதி பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் 15 ஆயிரம் கல்வியாளர்கள் திரள்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    மாநில சுயாட்சியை வென்றெடுக்க சட்ட முன்னெடுப்புகளை கழகம் மேற்கொள்ளும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தி.மு.க. பவள விழா முப்பெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரக்க சொன்னார்.

    மாநில சுயாட்சியை நிலை நாட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் பெரும் முன்னெடுப்புக்கு கிடைத்த பலனாக அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அமைந்திருந்தது.

    பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட் சட்ட அங்கீகாரம் அளித்தது. அதாவது கவர்னரின் கையெழுத்து இல்லாமல் அவை நிறைவேறி விட்டது.

    இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்து உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று சட்டசபையில் பெருமிதத்துடன் பேசியதோடு, மாநில சுயாட்சி உரிமைகளை மீட்டெடுத்த 'மாநில சுயாட்சி நாயகர்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசின் சார்பில் மே 3-ந்தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.

    துணைவேந்தரை நியமிக்கின்ற அதிகாரம் முழுவதும் அனைத்து மாநிலத்திற்கும் அந்தந்த மாநில முதலமைச்சரே பச்சை பேனாவால் கையெழுத்து போடுவதற்கு உத்தரவு பெற்றுத்தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல பாராட்டு விழா நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    அதன்படி தமிழகத்தில் இருக்கிற மாணவர்கள், கல்வியாளர்கள், கல்விச் சான்றோர்கள், பல்கலைக்கழகத்தின் வேந்தர்கள், துணை வேந்தர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகத்தினர் உள்ளிட்ட 15 ஆயிரம் பேர் கலந்து கொள்ள இருப்பதாகவும், விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர்களும் கலந்து கொள்கின்றனர்.

    இது குறித்து அமைச்சர் கோவி.செழியன் கூறுகையில், மாநில சுயாட்சி நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்படும் மகத்தான பாராட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அதில் இடம் பெறும் என்றும் தெரிவித்தார்.

    • வலதுசாரி அரசியலை நான் என்றைக்கும் எதிர்ப்பேன் என்று சொல்லியிருந்தேன்.
    • வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் ம.தி.மு.க. தொடர்ந்து போராடும்.

    மதுரை:

    மதுரையில் மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க. சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு துரை வைகோ பேசியதாவது:-

    ஜம்மு காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் விவகாரத்தில் எந்த ஒரு மதமும் இதுபோன்ற இழிச்செயல்களை ஆதரிப்பதில்லை. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வரும் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்த தாக்குதலை மதவாத சக்திகள் வேறு விதமாக கொண்டு சென்று அரசியல் செய்ய பார்க்கிறார்கள்.

    வலதுசாரி அரசியலை நான் என்றைக்கும் எதிர்ப்பேன் என்று சொல்லியிருந்தேன். வலது அரசியல் நம் நாட்டை விட்டு போக வேண்டும். ஒரு மனிதன் நல்லவரா? கெட்டவரா? என்ற அடிப்படையில் தலைவர்களை தேர்ந்தெடுங்கள். சாதி, மதத்தின் அடிப்படையில் ஒரு போதும் தலைவர்களை தேர்ந்தெடுக்காதீர்கள். நாட்டில் நடக்கும் அனைத்து தாக்குதலுக்கு காரணம் வலது சாரி அரசியல் தான்.

    வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் வரை மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் ம.தி.மு.க. தொடர்ந்து போராடும். மதவாத அரசியல் ஒழிய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.
    • வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

    சென்னை:

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக சட்டசபையில் இன்று கடன் கொடுக்கும் நிறுவனங்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு பொதுமக்களை துன்புறுத்துவதிலிருந்து பாதுகாக்கும் வகையில் சட்ட முன் வடிவு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    பொருளாதாரத்தில் பின் தங்கிய மற்றும் நலிவடைந்த பிரிவினர், விவசாயிகள், பெண்கள், மகளிர் சுய உதவிகுழுவினர், கூலித் தொழிலாளிகள், கட்டிடத் தொழிலாளிகள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்டோர் கடன் வழங்கும் நிறுவனங்களின் கவர்ச்சிகரமான கடன்களுக்கு அடிக்கடி இரையாகி தாங்க முடியாத கடன் சுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இது போன்ற நேரங்களில் ஏற்கனவே கடன் சுமையில் இருக்கும் இது போன்றவர்களை கடன் வழங்கும் நிறுவனங்கள் கடனை வசூலிப்பதற்கு முறையற்ற வழியை பின்பற்றுகிறார்கள்.

    அது துயரத்தில் இருக்கும் கடன் பெற்றவர்களை சில சமயங்களில் தற்கொலை செய்து கொள்வதற்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது. இது போன்ற எண்ணங்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில் ஒரு சட்டத்தை இயற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் மூன்று வருடங்கள் வரை சிறை தண்டனை அளிக்கப்படும்.

    வலுக்கட்டாயமாக கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் கடன் வழங்கிய நிறுவனம் தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்படும்.

    வலுக்கட்டாய நடவடிக்கைகளில் கடனை வசூல் செய்தால் பிணையில் வெளிவர முடியாத அளவிற்கு சிறை தண்டனை விதிக்கப்படும்.

    இந்த சட்டத்திருத்தத்தின் படி, கடன் பெறுவோருக்கும் கடன் வழங்கும் நிறுவனத்திற்கும் இடையே உள்ள பூசல்களை தீர்த்துவைக்க குறைதீர்ப்பாயரை அரசு நியமிக்கலாம் .

    கடன் வழங்கிய நிறுவனம் கடன் பெற்றவரோ அல்லது அவரது குடும்பத்தினரையோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தவோ, மிரட்டவோ, பின் தொடரவோ, அவர்களது சொத்துக்களை பறிக்கவோ கூடாது. கடன் பெற்றவரிடமோ அல்லது அவரது குடும்பத்தினரிடமோ வலுக்கட்டாயமாக வசூலிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். இச்சட்டமுன்வடிவின் படி தண்டனைக்குரிய குற்றங்களில் கைது செய்யப்படுவோர் ஜாமினில் வெளிவரமுடியாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    இதில் சில திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு உறுப்பினர்களும் கருத்துக்களை தெரிவித்தனர். அவைகளை எழுதிக் கொடுக்குமாறு சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டார்.

    • துணை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.
    • நேற்று தொடங்கிய இந்த மாநாடானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    ஊட்டி:

    தமிழ்நாட்டில் உள்ள மாநில, மத்திய மற்றும் தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் வருடாந்திர மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

    அந்த வகையில் 4-வது ஆண்டாக இந்த ஆண்டுக்கான துணை வேந்தர்கள் மாநாடு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் நேற்று தொடங்கியது. மாநாட்டை துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டிற்கு கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கினார்.

    தேசிய கல்வி கட்டமைப்பை நடைமுறைப்படுத்துவதே இந்த மாநாட்டின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துணை ஜனாதிபதி நேற்று தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்கள் பெரும்பாலானோர் பங்கேற்கவில்லை.

    தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    இன்று 2-வது நாளாக துணை வேந்தர்கள் மாநாடு தொடங்கியது.

    இந்த மாநாட்டில் பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பதிவாளர்கள், இயக்குனர்கள் பங்கேற்றனர்.

    இதில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கல்வி சார் ஒத்துழைப்பு, கற்றலின் சிறப்புகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு, ஆராய்ச்சி சிறப்பு அம்சங்கள், திறன் மேம்பாடு, தொழில் முனைவோர் திறன் வளர்ச்சி, குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

    நேற்று தொடங்கிய இந்த மாநாடானது இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    • நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பகல் நேரங்களில் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
    • வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி பகுதியில் பெய்த மழையால் சாலையோரம் தண்ணீர் தேங்கியது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் மக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பகல் நேரங்களில் கடுமையான கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சுட்டெரிக்கும் வெயிலால் மாவட்டத்தின் பெரும்பாலான நீர்நிலைகளில் நீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள சுமார் 1,200 குளங்களில் 700-க்கும் மேற்பட்ட குளங்கள் வறண்டுவிட்டன. சுமார் 300 குளங்களில் ஓரளவுக்கு தண்ணீர் இருக்கிறது.

    தற்போது கோடை மழை பரவலாக பெய்தாலும் அந்த மழைநீரால் வெப்பத்தை தான் தணிக்க முடிகிறதே தவிர நீர்நிலைகளின் நீர்மட்டத்தை உயர்த்த முடியவில்லை. அணைகளை பொறுத்தவரை பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய பிரதான அணைகளில் மட்டும் தண்ணீர் இருப்பு போதுமான அளவு இருக்கிறது. நேற்று சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.

    அதே நேரத்தில் மாவட்டத்தில் வடக்கு பச்சையாறு, நம்பியாறு, கொடுமுடியாறு அணைகளின் நீர் இருப்பு கோடை வெயிலின் தாக்கத்தால் வேகமாக குறைந்து ஒற்றை இலக்கத்தை நெருங்கி வருகிறது. 50 அடி கொள்ளளவு கொண்ட வடக்கு பச்சையாறு அணையில் 10.25 அடி நீர் இருப்பு உள்ளது. இதில் சுமார் 8 அடி வரை சகதி தான் இருக்கும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    அதேபோல் 23 அடி கொண்ட நம்பியாறு அணை நீர்மட்டம் 13.12 அடியாகவும், 52.50 அடி கொண்ட கொடுமுடியாறு அணை 14.75 அடியாகவும் உள்ளது. இதனால் களக்காடு, ராதாபுரம் சுற்றுவட்டார விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கோடை மழை ஓரளவு பெய்தால் மட்டுமே குடிநீர் தட்டுப்பாடாவது ஏற்படாத நிலை இருக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மாவட்டத்தில் நேற்று சேரன்மகாதேவி, அம்பை, முக்கூடல் சுற்றுவட்டார கிராமங்களில் மாலையில் சுமார் 1/2 மணி நேரம் கனமழை பெய்தது. அம்பை, சேரன்மகாதேவியில் தலா 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி பகுதியில் பெய்த மழையால் சாலையோரம் தண்ணீர் தேங்கியது.

    தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை நேரத்தில் 1/2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டிய கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சிவகிரி சுற்றுவட்டாரத்தில் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 3 மில்லிமீட்டர் மழை பெய்தது. ஆழ்வார்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் மணியாச்சி, கயத்தாறு, காமநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கோடை மழை பரவலாக பெய்தது. குறிப்பாக சாத்தான்குளம் சுற்றுவட்டாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கோவில்பட்டி, விளாத்திகுளம் சுற்றுவட்டாரத்திலும் இடியுடன் கூடிய கன மழை பரவலாக பெய்ததால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வெப்பம் தணிந்ததால் மக்களும் நிம்மதி அடைந்தனர்.

    ×