என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னையில் 3-ந்தேதி பிரமாண்ட பாராட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்த 15 ஆயிரம் கல்வியாளர்கள் திரள்கிறார்கள்
    X

    சென்னையில் 3-ந்தேதி பிரமாண்ட பாராட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்த 15 ஆயிரம் கல்வியாளர்கள் திரள்கிறார்கள்

    • கவர்னரின் கையெழுத்து இல்லாமல் அவை நிறைவேறி விட்டது.
    • இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்து உள்ளது.

    சென்னை:

    மாநில சுயாட்சி நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னையில் 3-ந்தேதி பிரமாண்ட பாராட்டு விழா நடைபெறுகிறது. இதில் 15 ஆயிரம் கல்வியாளர்கள் திரள்கிறார்கள். கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    மாநில சுயாட்சியை வென்றெடுக்க சட்ட முன்னெடுப்புகளை கழகம் மேற்கொள்ளும் என்று கடந்த செப்டம்பர் மாதம் தி.மு.க. பவள விழா முப்பெரும் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரக்க சொன்னார்.

    மாநில சுயாட்சியை நிலை நாட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுக்கும் பெரும் முன்னெடுப்புக்கு கிடைத்த பலனாக அண்மையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அமைந்திருந்தது.

    பல்கலைக் கழகங்களுக்கு துணைவேந்தர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காததால், அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவை பயன்படுத்தி சுப்ரீம் கோர்ட் சட்ட அங்கீகாரம் அளித்தது. அதாவது கவர்னரின் கையெழுத்து இல்லாமல் அவை நிறைவேறி விட்டது.

    இந்த தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் அமைந்து உள்ளது. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று சட்டசபையில் பெருமிதத்துடன் பேசியதோடு, மாநில சுயாட்சி உரிமைகளை மீட்டெடுத்த 'மாநில சுயாட்சி நாயகர்' முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசின் சார்பில் மே 3-ந்தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படும் என்று அறிவித்தார்.

    துணைவேந்தரை நியமிக்கின்ற அதிகாரம் முழுவதும் அனைத்து மாநிலத்திற்கும் அந்தந்த மாநில முதலமைச்சரே பச்சை பேனாவால் கையெழுத்து போடுவதற்கு உத்தரவு பெற்றுத்தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல பாராட்டு விழா நடத்த பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

    அதன்படி தமிழகத்தில் இருக்கிற மாணவர்கள், கல்வியாளர்கள், கல்விச் சான்றோர்கள், பல்கலைக்கழகத்தின் வேந்தர்கள், துணை வேந்தர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், தனியார் பள்ளி கூட்டமைப்பின் நிர்வாகத்தினர் உள்ளிட்ட 15 ஆயிரம் பேர் கலந்து கொள்ள இருப்பதாகவும், விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மூத்த வழக்கறிஞர்கள் ஆகியோர்களும் கலந்து கொள்கின்றனர்.

    இது குறித்து அமைச்சர் கோவி.செழியன் கூறுகையில், மாநில சுயாட்சி நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நடத்தப்படும் மகத்தான பாராட்டு விழாவை மிகப் பிரமாண்டமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அதில் இடம் பெறும் என்றும் தெரிவித்தார்.

    Next Story
    ×